Header image alt text

தமிழ் தேசிய இளைஞர் கழகம் தம்பனைச்சோலை கேதீஸ்வரா வித்தியாலயத்திற்கு உதவி-(படங்கள் இணைப்பு)

IMG_7618IMG_7608பாடசாலை அதிபர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க வவுனியா தம்பனைச்சோலை கேதீஸ்வரா வித்தியாலயத்தின் 25வது ஆண்டு நிறைவு விழாவிற்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் நேற்று (12.03.2015) வியாழக்கிழமை நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ் நிதியுதவியை தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் கனடாக் கிளை வழங்கியிருந்தது. இவ் நிதியுதவியை புளொட் இயக்க முக்கியஸ்தர்களுள் ஒருவரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப தலைவரும், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் பாடசாலை அதிபர் திருமதி. பத்மநாதன் அவர்களிடம் கையளித்தார். Read more

வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப்பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி- (படங்கள் இணைப்பு)

vavuniya saiva01வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப்பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி நேற்று (12.03.2015) வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் ஆரம்பப்பாடசாலையின் அதிபர் திருமதி. கி.நந்தபாலன் அவர்களது தலைமையில் நடைபெற்றது. மங்கள விளக்கேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமான விளையாட்டுப் போட்டி தொடர்ந்து மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சி, வினோத உடை நிகழ்ச்சி, பழைய மாணவர் நிகழ்ச்சி, பெற்றோர் நிகழ்ச்சி, விருந்தினர்களின் உரை மற்றும் பரிசளிப்பு வைபவத்துடன் இனிதே நிறைவுபெற்றது. Read more

இலங்கை-இந்தியாவுக்கு இடையில் 4 ஒப்பந்தங்கள் கைச்சாத்து-

modi meetings.இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 4 ஒப்பந்தங்கள் இன்று கைச்சாத்திடப்பட்டன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழுவினருக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகளை அடுத்தே இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. இராஜதந்திர மற்றும் அதிகாரிகள் பயணிக்கும்போது விசா இன்றி பயணிப்பதற்கான ஒப்பந்தம், சுங்க நடவடிக்கைகளின் போது இருநாடுகளுக்கும் இடையில் உதவி செய்துகொள்வதற்கான ஒப்பந்தம், இளைஞர் முன்னேற்றத்துக்கான ஒப்பந்தம் மற்றும் ரவிநாத் தாகூர் மன்றத்தை ருகுணு பல்கலைக்கழகத்தில் நிறுவுவதற்கான ஒப்பந்தம் ஆகியனவே இன்று கைச்சாத்திடப்பட்டன.

ஜெயக்குமாரி விடுதலை செய்யப்பட்டமைக்கு அமெரிக்கா வரவேற்பு-

americaதடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்ட ஜெயக்குமாரி பாலேந்திரனின் விடுதலையை அமெரிக்கா வரவேற்றுள்ளது. இது தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களப் பேச்சாளர் ஜென் பஸ்கி நேற்று தெரிவித்துள்ளதாவது, தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த ஜெயக்குமாரியும் ஏனைய எட்டுபேரும் இந்த வாரத்தில் விடுதலை செய்யப்பட்டனர். ஜெயக்குமாரியின் வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பதை நாம் விளங்கிக் கொண்டுள்ளோம். இலங்கையில் தடுப்பு காவலில் உள்ள ஏனையோரையும் சட்டரீதியில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை நாம் ஊக்குவிக்கின்றோம். மனித உரிமை மற்றும் அடிப்படை சுதந்திரத்தினை அனைத்து இலங்கையர்களும் பெறக்கூடிய வகையில் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்வதை தாம் பாராட்டுகின்றோம் என்று தெரிவித்துள்ளார். புலிகளின் முன்னாள் போராளி என்று கூறப்படும் கோபி என்பவருக்கு புகலிடம் வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜெயக்குமாரி பாலேந்திரன், 10ஆம் திகதி நிபந்தனைகளுடனான பிணையில் விடுவிக்கப்பட்டார். இதேவேளை, ஜெயக்குமாரியுடன் கைதுசெய்யப்பட்ட பத்மாவதி மகாலிங்கம் உள்ளிட்ட இன்னும் 8பேருக்கும், சட்டமா அதிபரின் ஆலோசனைகளுக்கு அமைவாக கடும் நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கப்பட்டது.

விபூசிகாவை விடுவிப்பதில் சிக்கல் உள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவிப்பு-

porvikaபிணையில் விடுவிக்கப்பட்ட பாலேந்திரன் ஜெயக்குமாரியை நம்பி, அவரது மகள் விபூசிகாவை சிறுவர் இல்லத்திலிருந்து வெளியில் எடுப்பதால், எதிர்காலத்தில் சிறுமி பாதிக்கப்படலாம் என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக ஜெயக்குமாரி சார்பாக நேற்று நீதிமன்றத்தில் வாதாடிய சட்டத்தரணிகளில் ஒருவர் கூறினார். புலிகளின் முன்னாள் போராளி என்று கூறப்படும் கோபி என்பவருக்கு புகலிடம் வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை (10) பிணையில் விடுவிக்கப்பட்ட ஜெயக்குமாரி, இன்று கிளிநொச்சிக்கு செல்கிறார். இந்நிலையில், அவரது மகள் விபூசிகாவை மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்தில் இருந்து விடுவித்து தாயாருடன் இணைப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் சட்டத்தரணிகள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகஸ்தர்கள், வியாழக்கிழமை (12) மாலை கூடி ஆராய்ந்தனர். ஜெயக்குமாரி விடுதலையாகவில்லை. பிணையில் மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் மீண்டும் கைது செய்யப்பட முடியும் என்ற நிலையுள்ளது. அவசரப்பட்டு சிறுமியை சிறுவர் இல்லத்திலிருந்து விடுவித்து, அந்தச் சிறுமியை நடுத்தெருவில் விடவேண்டிய நிலையொன்று உருவாகும். இதனால் அனைத்து விடயங்களையும் கருத்தில் கொண்டு செயற்படவேண்டியுள்ளதாக அந்த சட்டத்தரணி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெற்றோலிய உப மையம் அமைக்க இந்தியா உதவும்-இந்தியப் பிரதமர்-

modi2Mode in Srilankaதிருகோணமலையில் பெற்றோலிய உப மையத்தை அமைப்பதற்கான உதவிகளை செய்வதற்கு இந்தியா தயார் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று அதிகாலை இலங்கை வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழுவினருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினருக்கும் இடையில் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின்போதே இந்தியப் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதேவேளை ஜனாதிபதி செயலக முன்றலில் இடம்பெற்ற வரவேற்று வைபவத்தைத் தொடர்ந்து மேற்படி சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதேவேளை இன்று அதிகாலையில் இலங்கையை வந்தடைந்த இந்தியப் பிரதமரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வரவேற்றிருந்தார். தொடர்ந்து இந்திய பிரதமருக்கு, காலி முகத்திடலில் வைத்தும் 19 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டிருந்தது. அவருக்கு கடற்படையினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து குதிரைப்படை சகிதம் ஜனாதிபதி செயலகத்துக்கு அவர் அழைத்துவரப்பட்டார். அங்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார்.

பிரித்தானியா செல்ல முற்பட்ட இளைஞர்கள் கைது-

பிரித்தானியாவுக்கு செல்வதற்கு முற்பட்ட மூன்று தமிழ் இளைஞர்கள் நேற்றையதினம் )12.03.2015) வியாழக்கிழமை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போலியான வீசாவைக் கொண்டு அவர்கள் பிரித்தானியா செல்வதற்கு முற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட மூவரும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.