வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப்பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி- (படங்கள் இணைப்பு)
வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப்பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி நேற்று (12.03.2015) வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் ஆரம்பப்பாடசாலையின் அதிபர் திருமதி. கி.நந்தபாலன் அவர்களது தலைமையில் நடைபெற்றது. மங்கள விளக்கேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமான விளையாட்டுப் போட்டி தொடர்ந்து மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சி, வினோத உடை நிகழ்ச்சி, பழைய மாணவர் நிகழ்ச்சி, பெற்றோர் நிகழ்ச்சி, விருந்தினர்களின் உரை மற்றும் பரிசளிப்பு வைபவத்துடன் இனிதே நிறைவுபெற்றது. இந் நிகழ்வில் அண்மையில் ஓய்வுபெற்ற முன்னாள் வவுனியா வடக்கு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி. பராசக்தி கணேசலிங்கம் அவர்கள் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி சத்தியலிங்கம் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தாலும் தவிர்க்க முடியாத சில காரணங்களினால் அவர் சமூகமளிக்க முடியவில்லை, அவர் சார்பாக முன்னாள் இலங்கை வங்கி நகர் கிளை முகாமையாளர் திரு.றோய் ஜெயக்குமார் அவர்கள் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக முன்னாள் வவுனியா வடக்கு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி. பராசக்தி கணேசலிங்கம் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.எம்.பி.நடராஜ், புளொட் முக்கியஸ்தரும், வவுனியா நகரசபை முன்னாள் உபதலைவருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்), சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபர் செல்வி. உமா இராசையா, உதவிக் கல்விப்பணிப்பாளர் ஜானப் சுபைர், நகரசபை செயலாளர் திரு.க.சத்தியசீலன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்ததுடன், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் என பலரும் இந்நிகழ்வினில் கலந்து கொண்டிருந்தனர்.