சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தர தீர்வினைப் பெற்றுத் தருவதற்காக ஓரணியில் ஒன்றிணைவோம் – ஆனந்தசங்கரி

sangariதிரு வீ. ஆனந்தசங்கரி அவர்களின் தலைமையில் எதிர்வரும் புதன் கிழமை (18.;03.2015) காலை 10.00 மணியளவில் எமது கொழும்பு அலுவலகத்தில் ஒரு கலந்துரையாடல்

சகல தமிழ் பேசும் மக்களையும் ஒன்றிணைத்து நம் கோரிக்கைகளை முன் வைப்பதன்  மூலமே எமது மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்வதோடு நீண்ட காலமாக புரையோடிப் போயிருக்கும் எமது இனப் பிரச்சினைகளுக்கும் ஒரு நிரந்தர தீர்வினையும் பெற்றுக் கொள்ள முடியும்.சமீப காலமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் ஒரு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சில தலைவர்களின் உருவப் பொம்மைகள் எரித்துக் கொளுத்தும் அளவிற்கு நிலைமை மிக படுமோசமாகப்  போய்க் கொண்டிருக்கின்றது. இதை மிகவும் தீவிரமாக அவதானித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கௌரவ சுஸ்மா சுவராஜ் அவர்களும் மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களும் சமீபத்தில் இலங்கை வந்தபோது கூட்டமைப்பின் தலைவர்களிடம் ஒற்றுமையாக செயற்படுமாறு அறிவுரை கூறியுள்ளனர். இருந்தும் அவர்களின் செயற்பாடுகளில் எதுவித மாற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை. அது மட்டுமல்ல கடந்த ஐந்து ஆண்டு காலமாக எமது கட்சியின் செயலாளர் நாயகம் திரு. வீ ஆனந்தசங்கரி அவர்களும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமைக்காக தன்னாலான அனைத்து ஒத்துழைப்புகளையும் முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தார். ஆனால் எவரும் அதனைக் கண்டுகொள்ளவில்லை. மாறாக தங்களுக்குள்ளேயே முரண்பட்டு கொண்டிருக்கின்றார்கள். இரு தடவைகள் தன்னுடைய பிரதமர் பதவியைப் பறித்த திருமதி சந்திரிக்கா அம்மையாரோடு கௌரவ பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அதுவும் முரண்பட்ட வௌவேறு கட்சிகளைச் சேர்ந்திருந்தும் ஒரு காலத்தில் ஒருவருக்கொருவர் அரசியலில் வைரம் பாய்ந்த எதிரிகளாக செயற்பட்டும் ஏதோ ஒரு காரணத்திற்காக தங்களுக்குள் ஒற்றுமையாக செயற்பட முடியுமானால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தர தீர்வினைப் பெற்றுத் தருவதற்காக ஒரு காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் ஒன்று சேர்ந்து நண்பர்களாக செயற்பட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் ஐயாவும் கௌரவ ஆனந்தசங்கரி ஐயாவும் மீண்டும் அதே நோக்கத்திற்காக் ஏன் ஒற்றுமையாக செயற்பட முடியாது? இது மட்டும் மக்களுக்கு புரியாத புதிராக இருக்கின்றது.

எனவேதான்இ எந்த நோக்கத்துடன் வடக்கு – கிழக்கு மற்றும் மலையகம் சார்ந்த முக்கிய தலைவர்களை ஒன்றிணைத்து  தந்தை செல்வாவினால் தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை அடைய உறுதியுடன் செயற்பட தீர்மானித்துள்ளது. அனைத்து தமிழ்பேசும் மக்களின் கட்சிகளும் சரி விடுதலை இயக்கங்களும் சரி சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளுக்கு ஒரு நிரந்தர தீர்வை பெற்றுத்தரவே தம் தம் வழியில் போராடி வந்துள்ளன. சிலநேரங்களில் நெருக்குதல்கள் நிர்ப்பந்தங்கள் உயிராபத்துகள் மற்றும் ஒரு சில அமைப்புகளின் தாங்கள் மட்டும்தான் என்ற ஆணவப்போக்குகளின் செயற்பாடுகளினால் தவிர்க்க முடியாத சில முடிவுகள் எடுக்க தள்ளப்பட்டனர். எது எப்படி இருப்பினும் அத்தனை பேருமே எம் மக்களின் எதிர் கால நலன்களுக்காக பாடுபட்டவர்கள்தான். யாரும் யாரையும் ஒதுக்கி வைக்க முடியாது. எவரும் எவருக்கும் உயர்ந்தவர்களும் இல்லை தாழ்ந்தவர்களும் இல்லை.

இந்த கொள்கையை அடிப்படையாகக் கொண்டு அனைத்து தமிழ் பேசும் மக்களின் கட்சிகளையும் அமைப்புக்களையும் அழைத்து ஓரணியில் ஓன்றுசேர்ந்து செயற்படும் நோக்கத்தோடு எமது கட்சியின் செயலாளர் நாயகம் திரு வீ. ஆனந்தசங்கரி அவர்களின் தலைமையில் எதிர்வரும் புதன் கிழமை (18.;03.2015) காலை 10.00 மணியளவில் எமது கொழும்பு அலுவலகத்தில் ஒரு கலந்துரையாடலை நடத்த தீர்மானித்துள்ளோம். தமிழ் பேசும் கட்சிகளும் அமைப்புகளும் அதில் கலந்து கொண்டு தமது கருத்துக்களைக் கூறி ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு நிரந்தர தீர்வினைப் பெறுவதற்கு ஒரணியாக நின்று செயற்பட அழைக்கின்றோம்.

இரா. சங்கையா
நிர்வாகச் செயலாளர்- த.வி.கூ.
முன்னாள் யாழ் மாநகரசபை உறுப்பினர்.