மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டும் நிபந்தனையுடன் கூடிய சம்பள உயர்வு ஏன்?
ECONOMIC DEVELOPMENT ORGANISATION OF SRI LANKA- EDOS
இலங்கை பொருளாதார அபிவிருத்தி அமைப்பு ஈடோஸ்
59/2, Temple Road, Maskeliya.
Phone No: 072 5316735 , 0777 560863 e-mail: edoscmb@yahoo.com
15.03.2015
200 வருட கால மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையில், அந்த மக்களின் முன்னோர்களும், தற்போது அவர்களும் அனுபவித்த, அனுபவித்துக்கொணடிருக்கும் துன்ப துயரங்களை எவரும் இதுவரை புரிந்து கொணடதாக தெரியவில்லை. காடாக இருந்த இந்த நாட்டை செழிப்பான அழகான தேசமாக்கி, நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தி, தரம் வாய்ந்த தேயிலையை உலகிற்கு உற்பத்தி செய்து காட்டி, அதன் மூலம் சர்வதேசத்திற்கு இலங்கையை அறிமுகப்படுத்திவிட்டு, கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெய்யிலிலும் நாட்டுக்காக அவர்கள் படும் இன்னல்கள் ஏராளம். இவைகளை எண்ணிப் பாராமல் அவர்களின் உழைப்பிற்கேற்ற ஊதியத்தில் நிபந்தனைகளை விதித்து அவர்களின் வயிற்றில் அடிப்பதை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்த நாட்டில் நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்ற அரச திணைக்களங்களாக இருந்தாலும்சரி, சபைகளாக இருந்தாலும் சரி, அங்கு பணிபுரிபவர்களுக்குகூட, எந்தவித நிபந்தனையும் இல்லாமல் சம்பள உயர்வு, மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டும் குறிப்பிட்ட நாட்கள் வேலை செய்தால்தான் உயர்த்தப்பட்ட சம்பள உயர்வு கிடைக்கும். குறிப்பிட்ட நாட்களில் ஒரு நாள் ஏதாவது அவசர தேவைக்காக வேலைக்கு போகாவிட்டால் உயர்த்தப்பட்ட சம்பளம் கிடைப்பதில்லை. அதுவும் பாவம் பெண்களுக்கு ஒரு நாளைக்கு குறிப்பிட்ட கிலோ கொழுந்து பறித்தால்தான் உயர்த்தப்பட்ட சம்பளத்தின் பயனை அனுபவிக்கலாம். இந்த நாட்டுக்காக உழைத்தவர்களுக்கு மட்டும் நிபந்தனையுடன் கூடிய ஒரு வேடிக்கையான கூட்டு ஓப்பந்தம்.
அப்படியானால், ஒரு அரசு திணைக்களத்தில் ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட கோப்புகளை முடித்துக் கொடுக்கவேண்டும் என்ற நிபந்தனை உள்ளதா? ஒரு பாடசாலையில் குறிப்பிட்ட மாணவர்கள் 5ம் தர புலமைப் பரிசு, க.பொ.த. சாதாரண தரம், உயர்தரம் ஆகிய பரிட்சைகளில் சித்தியடைந்தால்தான் அதிபர், ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு என்று ஏதாவது நிபந்தனைகள் உள்ளதா? இல்லையே. நீதி மன்றத்தில் குறிப்பிட்ட வழக்குகளை முடித்தால்தான் சம்பள உயர்வு என சட்டம் இருக்கின்றதா? தவணை தவணை என எத்தனை வழக்குகள் நீடித்துக் கொண்டே போகின்றன. போக்குவரத்து சபை பஸ்வண்டியில் ஒரு குறிப்பிட்ட பயணிகளை ஏற்றி இறக்கினால்தான் ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் உயர்த்தப்பட்ட சம்பள உயர்வு கிடைக்கும் என ஏதாவது நிபந்தனை இருக்கின்றதா? கொஞ்சம் அதிகமாக அரசு அலுவலகங்களில் வேலையிருந்தால் மேலதிக நேரம் (ஓவர் டைம்) என்று கூறி மணித்தியாலத்திற்கு இவ்வளவு பணம் என்றல்லவா வேலை பார்க்கின்றார்கள். கோப்புகளை பார்த்தால் என்ன பார்க்காவிட்டால் என்ன, மாணவர்கள் படித்தால் என்ன படிக்காவிட்டால் என்ன, நீதிமன்றங்களில் வழக்குகள் விரைந்து முடித்தால் என்ன முடிக்காவிட்டால் என்ன, பஸ் வண்டியில் பயணிகள் ஏறினால் என்ன ஏறாவிட்டால் என்ன, குறிப்பிட்ட நாட்கள் வேலை செய்தால் என்ன செய்யாவிட்டால் என்ன, உயர்த்தப்பட்ட சம்பளத்திலோ அதற்கான பிற கொடுப்பனவுகளிலோ எந்த விதமான மாற்றமும் ஏற்படுவதில்லை. ஆனால் மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டும் ஏன் இந்த ஓர வஞ்சகம்? பாகுபாடு? இந்த மண்ணை செல்வம் கொழிக்கும் பூமியாக மாற்றியதற்காகவா? அல்லது சர்வதேசத்திற்கு தேயிலையையும் இறப்பரையும் ஏற்றுமதி செய்ய தங்களை அர்ப்பணித்ததற்காகவா? தலைமுறை தலைமுறையாக அந்த மண்ணை நம்பி வாழ்வதற்காகவா? இப்படியான கொடுமையை எப்படி பொறுத்துக் கொள்வது.
எனவே ஆயிரம் ரூபா சம்பளம் பெற்றுக் கொடுப்பதில் அர்த்தமில்லை. அனைத்து தரப்பினரும் ஒன்று சேர்ந்து கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் ஒரு நாள் வேலை செய்தாலும் ஆயிரம் ரூபாதான் என்று சம்மந்தப் பட்டவர்களுக்கு நிபந்தனை விதித்து பெற்றுக் கொடுக்க வேண்டுமேயொழிய தொழிலாளர்களுக்கு நிபந்தனை விதிக்கக்கூடாது. அதுமட்டுமல்ல க.பொ.த. சாதாரணம், உயர்தரம் படித்துவிட்டு வேலைவாய்ப்பு தேடி நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து துன்பங்களை அனுபவிக்கும் இளம் பெண்களுக்கு அவர்கள் விரும்பும் பட்சத்தில் தோட்டத்தில் வேலை செய்வதானால் அவர்களுக்கு விசேட சம்பள உயர்வுடன் வேலை வாய்ப்பளிக்கவேண்டும். இது போன்ற விசேட கொடுப்பனவை படித்த ஆண் தொழிலாளர்களுக்கும் பெற்றுக் கொடுக்க வேண்டும். இவ்வாறான அம்சங்களும் கூட்டு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்படவேண்டும், அதன் மூலம் அவர்களுக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வமும் மேலோங்கும்.
இதனை மலையகத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் அனைத்து அரசியல் தலைவர்களும்;, தொழிற் சங்கத் தலைமைகளும் நடைமுறைப்படுத்த சிந்திக்க வேண்டும், அதற்கேற்றவாறு செயற்படவும் வேண்டும். அவர் செய்யட்டும், இவர் செய்யட்டும் என, ஒவ்வொருவரும் மற்றவர்கள் மேல் குற்றம் சுமத்திவிட்டு, ஒதுங்கிக் கொள்ளாமல், இது எங்கள் மக்கள் பிரச்சினை என்று ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். அவர்களின்; வாக்குகளும், சந்தாப்பணமும் தான் பிரதேச சபை உறுப்பினர்களாகவும், அதன் தலைவர்களாகவும், மாகாணசபை உறுப்பினர்களாகவும் அதன் அமைச்சர்களாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் மற்றும் அமைச்சர்களாகவும், தொழிற்சங்கத் தலைவர்களாகவும் சம்மந்தப்பட்டவர்களை உயர்த்தியுள்ளது. எனவே யாரும் இதிலிருந்து ஒதுங்கிக் கொள்ள முடியாது. அழுத்தங்களைக் கொடுத்து நிபந்தனையற்ற சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்க வேண்டியது அந்த மக்களால் உயர்ந்தவர்களின் தார்மீகக் கடமையாகும்.
நான் பெரிது நீ பெரிது என்று பாராமல் நம் நாடும் சம் சமூக மக்களும் பெரிது என செயற்படுவோம்.
இரா. சங்கையா,
செயலாளர் – ஈடோஸ்,
முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினர்,