இலங்கை தேசிய கீதத்தை தமிழில் பாடலாம்.

srilankaஇலங்கையின் தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரமே பாடப்பட வேண்டும் என்று முன்னைய அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டை நீக்குவதற்குப் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்திருக்கின்றார்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய நிறைவேற்று குழு கூட்டத்தில் இந்த விடயத்தை, தான் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்தே இலங்கை தேசிய கீதத்தை மீண்டும் தமிழில் பாடலாம் என்ற இந்த உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் தேசிய கீதம் தமிழிலும் சிங்களத்திலும் வடிவமைக்கப்பட்டு இரண்டு மொழிகளிலும் அவரவர் அதனைப் பாடி வந்துள்ளனர். இருந்தபோதிலும், தமிழ் மக்கள் குறிப்பாக வடக்கு கிழக்குப் பகுதியில் உள்ள தமிழ் மக்கள், தேசிய கீதத்தில் அதிக அளவு ஈடுபாடு கொண்டிருக்காத ஒரு போக்கு தொடர்ந்து நிலவுகின்றது. இன ரீதியாகத் தாங்கள் ஒடுக்கப்பட்டு வருவதன் காரணமாகவே இந்த உணர்வுக்கு அவர்கள் ஆளாகியிருந்ததாகப் பலரும் கூறுகின்றனர்.
அரசியலமைப்பில் வழங்கப்பட்ட உரிமைகளை நடைமுறைப்படுத்துவதற்கு  ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பதற்கு முன்வந்துள்ளமை நல்லதொரு காரியம் இந்த நிலையில் தமிழ் மொழியில் தேசிய கீதத்தைப் பாடலாம் என புதிய ஜனாதிபதி உறுதியளித்திருப்பதை தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் வரவேற்றுள்ளது என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் சில சிறுகட்சிகள் கலந்துரையாடல்

chiru kadchikalகொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் 17.03.15 இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதன்போது தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பாக சிறுகட்சிகளின் நிலைப்பாடுகள், எதிர்கொள்ளும் சவால்கள், தேர்தல் மாற்றம் தொடர்பில் சிறுகட்சிகள் எடுக்கக் கூடிய இறுதித்தீர்மானங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, பா.உ. முருகேசு சந்திரகுமார், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளர் ஹஸன் அலி, உபசெயலாளர் நிஸாம் காரியப்பர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பா.உ. சுமந்திரன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், றிசாட் பதியூதீன், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸநாயக்க, பா.உ. சுனில் ஹந்துன்நெத்தி, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் நவசமசமாசக் கட்சித் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேவேளை, தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்றிருந்த கலந்துரையாடலொன்று 16.03.15 ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.
இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தல் முறைமை சீர்திருத்த யோசனைகளை எதிர்வரும் ஒருவாரத்திற்குள் தமக்கு வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்த தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவிடமும் பணிப்புரை விடுத்தார். மேற்படி கலந்துரையாடலிலும் ஈபிடிபி கலந்துகொண்டிருந்தது.

துனீஷிய அருங்காட்சியகத்தில் துப்பாக்கிதாரிகள் தாக்குதல் 

tunisBBimcTNதுனிஷியாவின் தலைநகர் ட்யுனீஷ் நகரில் உள்ள நாடாளுமன்றத்திற்கு அருகில் அமைந்திருக்கும் பார்தோ அருங்காட்சியகத்தில் துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 17 பேர் வெளிநாட்டவர் எனவும் அந்த நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்தபோது, நாடாளுமன்றத்தில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்த விவாதம் நடந்துகொண்டிருந்தது. இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்டவர்கள் ஏ.கே ரக துப்பாகிகளை வைத்து தாக்குதலை நடத்தியதாகவும்.
அருங்காட்சியகத்திலிருந்து பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டுவிட்டாலும், சிலர் இன்னும் உள்ளே சிக்கியிருப்பதாக நம்பப்படுகிறது. பாதுகாப்புப் படையினர் அருங்காட்சிகத்தினுள் நுழைந்துள்ளனர். பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பழங்காலக் கலைபொருட்கள் நிறைந்த அந்த அருங்காட்சியகம் ட்யூனிஷ் நகரில் சுற்றுலாப் பயணிகள் தேடிவரும் இடமாக இருந்துவந்தது.
அருகில் உள்ள லிபியாவில் நிலைமை ஸ்திரமின்றிக் காணப்படுவதால், துனீஷியாவிலும் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன.  பல ஆயிரம் இளைஞர் உட்பட பெரும் எண்ணிக்கையிலான துனீஷியர்கள் சிரியாவிலும் ஈராக்கிலும் நடக்கும் சண்டையில் ஈடுபடுவதற்காக சென்றுள்ளனர். அவர்கள் நாடு திரும்பினால், இங்கும் தாக்குதலை நடத்தலாம் என அஞ்சப்படுகிறது. பெரிதும் சுற்றுலாத்துறையை நம்பியிருக்கும் அந்த நாட்டுக்கு இந்த தாக்குதல் பெரும் பாதிப்பாக பார்க்கப்படுகின்றது.