பாடசாலை குடிநீர்த் தாங்கியில் நஞ்சு கலந்ததைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்-

elalai mayilankaduயாழ் மயிலங்காடு ஏழாலை ஸ்ரீமுருகன் வித்தியாசாலையில் உள்ள மாணவர்களின் குடிநீர்த் தாங்கியில் நஞ்சு கலந்தமையைக் கண்டித்தும் இதனுடன் தொடர்புடைய விசமிகளைக் கைது செய்யக் கோரியும் இன்றுபகல் மாபெரும் கண்டனப் பேரணி ஒன்று இடம்பெற்றது. தூய நீருக்கான செயலணியின் ஏற்பாட்டில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டனப் பேரணியானது மயிலங்காடு ஏழாலை ஸ்ரீ முருகன் சனசமூக நிலையத்தில் ஆரம்பமாகி சுன்னாகம் புன்னாலைக்கட்டுவன் வீதி வழியாக சுன்னாகம் நகரத்தை அடைந்தது. இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள், பிரதேச மக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பல்கலைக்கழக மாணவர்கள், வட மாகாண சபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் பா.கஜதீபன் வலி தெற்கு பிரதேச சபைத் தலைவர் தி. பிரகாஸ் எதிர்க்கட்சி உறுப்பினர் அரிகரன் மற்றும் உறுப்பினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலர் கஜேந்திரன் இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த செந்திவேல் தமிழ் அழகன் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள், மாணவர்களுக்கு எதிரான இந்நடவடிக்கைக்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனுடன் தொடர்புடைய விசமிகளை உடன் கைதுசெய்ய வேண்டும். இந்த செயலானது பாடசாலைப் பிள்ளைகளுக்கெதிரான ஒரு மிகப்பெரிய தீய செயலாகும். எனவே விசமிகளை உடனடியாக கைதுசெய்வதற்கு முழுமையான நடவடி;கை எடுக்க வேண்டும் என கோசமெழுப்பியதுடன், நன்னீரில் நஞ்சு கலந்த நயவஞ்சகனை கண்டுப்பிடி போன்ற பல்வேறு கோசங்கள் அடங்கிய பதாதைகளையும் தாங்கி இருந்தமை இங்கு குறிப்பிடக்கூடியது.