புதிய அரசின் ஆட்சிக்காலத்தில் எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படும் -ஜனாதிபதி
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் இருப்பதை அறிந்திருப்பதாகவும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் புதிய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் தீர்வு காணப்படும் என்றும்.
தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே தமிழ் மக்கள் தமக்கு வாக்களித்திருக்கின்றார்கள் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்த மக்களின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றான காணிப் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருக்கின்றார்.
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு இராணுவ அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் வளலாய் பகுதியில் உள்ள 424 ஏக்கர் பரப்புள்ள காணிகளை அவற்றின் உரிமையாளர்களான பொதுமக்களுககுக் கையளிக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கினார்.காணிப் பிரச்சனை என்பது இங்கு மட்டுமல்ல. எல்லா இடங்களிலும் இந்தப் பிரச்சினை இருக்கின்றது. காணிப் பிரச்சனை காரணமாக பல நாடுகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன. பிரச்சனைகள் ஏற்பட்டு ஆட்சிகள் மாறியிருக்கின்றன’ என்றார் ஜனாதிபதி.
வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் மட்டுமல்லாமல் நாட்டின் தெற்கு பகுதிகளிலும் இந்தப் பிரச்சனை இருக்கின்றது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு- கிழக்குப் பிரதேச மக்களின் காணி பிரச்சனைகள் முன்னுரிமை அடிப்படையில் தீர்த்து வைக்கப்பட வேண்டியது முக்கியமானதாகும்’ என்றும் அவர் தெரிவித்தார்.
காணிப் பிரச்சனை என்பது புரையோடிப் போயுள்ள பிரச்சனை. அதற்குத் தீர்வு காண்பதற்கு கால அவகாசம் தேவை’ இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை உரியவர்களிடம் கையளிப்பதுடன் அரசு நின்றுவிடாது என்றும், அந்தப் பகுதியில் அழிவுக்கு உள்ளான ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்புகளையும் புதிதாக நிர்மாணிப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கைளை எடுக்கும் என்றும் இலங்கை ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில்
எனவே இதனை செய்வதற்கும், பெறுபேற்றை அடைவதற்கும் காலம் தேவை. இப்போது எங்கள் தொடக்கத்தில் சில பிழைகள் இருக்கலாம். இருக்கின்றன. அதற்காக அனைத்தையும் விட்டுவிட்டு போக முடியாது. தொடர்ந்தும் நாம் அதனை செய்வதன் ஊடாக ஒரு கட்டத்தில் அனைத்து பிழைகளும், திருத்தியமைக்கப்படும்.
தற்போது போன்று அல்லாமல் எதிர்காலத்தில் உங்களுடைய கிராமங்களுக்கும், உங்களுடைய வீடுகளுக்கும் நான் நேரடியாக வந்து உங்களுடைய பிரச்சினைகள் என்ன என்பதை கேட்டு தீர்த்துவைக்க திட்டமிட்டிருக்கின்றேன்.
இது இந்த நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை உருவாக்க மிக முக்கியமான தேவையாகும். அவ்வாறு செய்தாலே ஒருவர் மீது ஒருவருக்குள்ள சந்தேகங்கள் முழுமையாக அகற்றப்படும் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.
உங்களுடைய தேவைகளையும், பிரச்சினைகளையும் உங்களுடைய பிரதிநிதிகள் பாராளுமன்றத்திலும், வெளியேயும் எமக்கு கூறிக்கொண்டிருக்கின்றார்கள். அதனை நாம் கருத்தில் எடுத்து சகல பிரச்சினைகளையும் தீர்த்துவைப்போம் என அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க, வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் ஆகியோரும். அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஈபிடிபி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரச உயர் அதிகாரிகளும் இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.