19வது திருத்தம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு-
இலங்கை அரசியல் யாப்பில் திருத்தங்களை செய்யும் முகமாக 19வது அரசியல் யாப்புத் திருத்தச் சட்டமூல ஆவணம் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் இந்த 19வது அரசியல் யாப்புத் திருத்தச் சட்டமூல ஆவணம் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைக்கு உள்ள அதிகாரங்களை குறைத்தல், அமைச்சரவை- பாராளுமன்றுக்கு கூடிய அதிகாரம் அளித்தல், சுயாதீன ஆணைக்குழு அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்கள் 19வது அரசியல் யாப்புத் திருத்தத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை முடிவுக்கு கொண்டுவரும் புதிய அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு கடந்த 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட அமைச்சரவை கூட்டத்தின் போது அங்கிகாரம் கிடைத்திருந்தது. அமைச்சரவை அனுமதியளித்ததன் பின்னர் 19ஆம் திகதி விசேட வர்த்தமானியும் வெளியானது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்திய மீனவர்கள் விடுதலை-
அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்துக் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 21 ஆம் திகதி இரவு அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் குறித்த 21 பேரும் கைதுசெய்யப்பட்டு 22ஆம் திகதி யாழ். மாவட்ட நீரியல் வளத்திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டிருந்தனர். அன்றே ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு அவர்கள் ஏப்ரல் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். எனினும் இந்திய, இலங்கை மீனவர்களின் பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும் என்ற நல்லெண்ண நோக்கத்தில் இன்றைய தினம் குறித்த 21 மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் லெனின்குமார் முன்னிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, கடந்த 21ஆம் திகதி மன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 33 இந்திய மீனவர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ரயிலில் மோதுண்ட யாழ். மாணவன் உயிரிழப்பு-
ரயிலில் மோதுண்டு படுகாயமடைந்த மாணவன் சிகிச்சை பலனின்றி நேற்று கொழும்பில் மரணமடைந்துள்ளார் கடந்த மாதம் 19ஆம் திகதி யாழ்ப்பாணம் பிறவுண் வீதி முதலாம் ஒழுங்கையிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையால் கடக்கும்போது ரயிலில் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட மாணவன் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்துள்ளார். யாழ். இந்துக் கல்லூரியில் உயர்தர வகுப்பு மாணவனான 19வயமதன கோப்பாயைச் சேர்ந்த குகப்பிரியன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை-
சிறைச்சாலைக்குள் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய அதிகாரிகளை பதவியிறக்கம் செய்ய சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரல் ரோஹண புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர்களுக்கு கொடுப்பனவு-
முன்னாள் பிரதமர்களுக்கு பல்வேறான கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. அதனடிப்படையில் அவர்களுக்கு உத்தியோகபூர்வ வாகனம், மாதாந்த கொடுப்பனவாக 25 ஆயிரம் ரூபாய் மற்றும் எரிபொருள் கொடுப்பனவும் வழங்கப்படும்.
கைது செய்யும் வயதெல்லை நீடிப்பு-
குற்றச் செயல்கள் தொடர்பில் கைது செய்யப்படும் வயது எல்லை 8 தொடக்கம் 12 வரை அதிகரிக்க சிறுவர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் சிறுவர் நீதிமன்றம், அரசாங்கத்திற்கு தற்போது யோசனை முன்வைத்துள்ளதாக அதன் தலைவர் நடாஷா பாலலேந்திர தெரிவித்துள்ளார். சர்வதேச சட்ட திட்டங்களுக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.