காணாமல் போனோரை கண்டுபிடிக்க செஞ்சிலுவைச் சங்கம் உதவி–
இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது காணாமல் போனோரை கண்டுபிடிக்கும் நடவடிக்கைக்கு உதவத் தயார் எ சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. சங்கத்தின் பணிப்பாளர் டொமினிக் ஸ்டில்ஹாட் இலங்கைக்கு ஐந்துநாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இந்த விஜயம் குறித்து சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. காணாமல் போனோரின் உறவினர்கள் மத்தியில் பணியாற்றிய அனுபவம் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்துக்கு இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அனுபவங்களை பயன்படுத்தி இலங்கையில் காணாமல் போனோரை கண்டுபிடிக்க தம்மால் உதவ முடியும் என்று ஸ்டில்ஹாட் கூறியுள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் சர்வதேச செஞ்சிலுவை சங்கம், 1990ம் ஆண்டு முதல் காணாமல் போனோரின் உறவினர்களின் தகவல்களைக் கொண்டு நாடளாவிய ரீதியில் தேடுதல்களை மேற்கொண்டிருந்தது. இதன்போது சங்கத்துக்கு 16 ஆயிரத்து 100 முறைப்பாடுகள் கிடைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
நஞ்சுத்திரவம் கலப்பு தொடர்பில் பிரதான சந்தேகநபர் கைது-
யாழ். ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய நீர்த்தாங்கியில் நஞ்சுத்திரவம் கலந்த சம்பவத்தில் முக்கிய சந்தேகநபர் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கடந்த 23ஆம் திகதி திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்ட பாடசாலை காவலாளிகள் இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், தேவையேற்படின் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய நீர்த்தாங்கியில் கடந்த 18 ஆம் திகதி இரவு நஞ்சுத்திரவம் கலக்கப்பட்டது. மறுநாள் அந்நீரைப் பருகிய 26 மாணவர்கள் மயங்கி வீழ்ந்து, யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், நீர்த்தாங்கியினுள் இருந்து நஞ்சு போத்தல் ஒன்றை மீட்டனர். இதனையடுத்தே, நீர்த்தாங்கியில் நஞ்சுத்திரவம் கலக்கப்பட்டமை தெரியவந்தது. இதனையடுத்து பாடசாலை காவலாளிகள் இருவரையும் கைது செய்து விசாரணை செய்தனர். அவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் மயிலங்காடு பகுதியை சேர்ந்த 34வயதுடைய பிரதான சந்தேகநபர் கைதானார்.
துறைமுக நகர் திட்டத்தை மீள ஆரம்பிக்குமாறு கோரிக்கை-
இலங்கையில் பாரிய முதலீடு செய்து ஆரம்பிக்கப்பட்டுள்ள சீனாவின் கொழும்பு துறைமுக நகர் திட்டத்தை மீள ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 1.4பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுகநகர் திட்டம் கைவிடப்படக்கூடாதென இலங்கை-சீன சமூக கலாசார ஒத்துழைப்பு சங்கம் தெரிவித்துள்ளது. சீன பங்குதாரர்களுடன் திறன்வாய்ந்த செயற்பாடுகளில் ஈடுபடுமாறு குறித்த சங்கம் இலங்கைக்கு அறிவுறுத்தியுள்ளது. துறைமுக நகரத்திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளமை இலங்கை-சீனாவிற்கு இடையிலான பொருளாதார, முதலீட்டு, இராஜதந்திர உறவுகளை பாதித்துவிடக் கூடாதென சங்கம் குறிப்பிட்டுள்ளது. இத்திட்டம் குறித்து உள்ள பிரச்சினைகளை சீன விஜயத்தின்போது முடிவுக்கு கொண்டுவருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுப்பதாக இலங்கை-சீன சமூக கலாசார ஒத்துழைப்பு சங்கத்தின் தலைவர் அபேசேகர தெரிவித்துள்ளார். துறைமுக நகர திட்டம் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் திட்டத்தை செயற்படுத்தும் சீனாவின் நிறுவனம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஆவணங்களை கையளித்துள்ளது. திட்டம் நிறுத்தப்படுவதால் தமக்கு 380,000 அமெரிக்க டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவுக்கு விஜயம்-
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் சீனாவிற்கு செல்லவுள்ளார். ஜனாதிபதி இன்று பிற்பகல் சீனாவின் பீஜிங் சர்வதேச விமான நிலையத்தினை சென்றடையவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் சீனப் பிரதமர் லீ கே சியனுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர். ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு சீன ஜனாதிபதி ஷி ஜிங் பிங் தலைமையில் நாளை நடைபெறவுள்ளது. சீன ஜனாதிபதியுடன் நாளை பகல் விருந்துபசாரத்தில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, ரவி கருணாநாயக்க, ராஜித சோனாரத்ன, ரவூப் ஹக்கிம், ஜகத் புஸ்பகுமார, விஜயதாச ராஜபக்ஸ மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பசில் ராஜபக்ஷவை நாட்டுக்கு திருப்பி அழைக்க நடவடிக்கை-
முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நீதிமன்ற உத்தரவு ஒன்றை பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். பாரியளவு நிதி மோசடி தொடர்பில் பசில் ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அது தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகளுக்கு பசில் ராஜபக்ஷவை நாட்டுக்கு அழைத்துவர வேண்டியுள்ளதென அவர் கூறியுள்ளார். கடந்த ஜனவரி 8ம் திகதி ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியுற்றதை அடுத்து பசில் ராஜபக்ஷ தனது குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். பாராளுமன்ற உறுப்பினரான அவருக்கு பாராளுமன்றில் மூன்று மாத விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.
நாரஹேன்பிட்டியில் பொலிஸ் உத்தியோத்தர்கள்மீது தாக்குதல்-
கொழும்பு நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோத்தர்கள் சிலர்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. போதைப் பொருள் சுற்றிவளைப்புக்குச் சென்ற நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உத்தியோத்தர்கள் சிலர் மீதே தாக்குல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். சுற்றிவளைப்பின் போது பொலிஸாரினால் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதும், அங்கு வந்த சிலர் பொலிஸார்மீது தாக்குல் மேற்கொண்டு சந்தேகநபரை பலவந்தமாக விடுவித்து அழைத்துச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். இந்த தாக்குலில் இரண்டு பொலிஸ் உத்தியோத்தர்கள் காயமடைந்துடன் தாக்குல் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ் புதிய அரச அதிபராக நாகலிங்கம் வேதனாயகன் கடமையேற்பு-
யாழ் மாவட்டத்திற்கான புதிய அரச அதிபர் நாகலிங்கம் வேதனாயகன் கடமைகளை பொறுப்பேற்றார் யாழ் மாவட்டத்திற்கான புதிய அரச அதிபராக நியமிக்கப்பட்டுள்ள நாகலிங்கம் வேதனாயகன் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். யாழ் மாவட்டதிற்கு இடமாற்றம் செய்யப்பட்ட அரச அதிபர் இன்று தமது அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார். முல்லைத்தீவின் அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்த நாகலிங்கம் வேதனாயகன் கடந்த வாரம் யாழ் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதேவேளை யாழ் மாவட்டத்தின் அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்த சுந்தரம் அருமைநாயகம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
முகத்தை மூடும் தலைக்கவசத்துக்கு மீண்டும் தடை
முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசங்களை அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பது, ஏப்ரல் 02ஆம் திகதிமுதல் தடை செய்யப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிள்களில் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசங்களை அணிந்துகொண்டு பயணிப்பது, மார்ச் மாதம் 21ஆம் திகதிமுதல் தடைசெய்யப்படும் என்று பொலிஸார் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர். எனினும் இத்திட்டம் பொதுமக்கள் சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவினால், பொலிஸ் மா அதிபருக்கு விடுக்கப்பட்ட பணிப்புரைக்கமைய அத்திட்டத்தை அமுல்படுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
19வது திருத்தத்தத்துக்கு ஜே வி பி ஆதரவு-
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தை வெற்றிப்பெற செய்யும் தரப்பினரையே தாம் ஆதரிப்பதாக ஜேவிபி தெரிவித்துள்ளது. பத்தரமுல்லயில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அதன் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில் உள்ள அதிகாரங்களை மட்டுப்படுத்தும் நோக்கிலேயே தாம் அதற்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாக பொதுச் செயலாளர் டில்வின் சில்வா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தப்பிச்சென்ற இராணுவத்தினருக்கு பொதுமன்னிப்பு-
இராணுவத்திலிருந்து தப்பிச்சென்ற வீரர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணித்துள்ளதாக இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் மேஜர் ஜெனரல் எம்.ஹதுருசிங்க தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனை கூறியுள்ளார். இராணுவத்திலிருந்து தப்பிச்சென்ற இராணுவத்தினருக்கு ஏப்ரல் 2ஆம் திகதிமுதல் 16ஆம் திகதிவரை, பொது மன்னிப்பு வழங்கும் காலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவேன்-பீல்ட் மார்ஷல் பொன்சேகா-
தான் தொடர்ந்தும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடப் போவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். புதிய உத்தியோகபூர்வ சீருடையின் கௌரவத்தை பேணி அரசியலில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் அதற்கு எதிராக முன்நிற்பதாகவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மூளாய் அமெரிக்கன் மிசன் பாடசாலையில் சந்திப்பு-
அண்மையில் கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ. இராதாகிருஸ்ணன் அவர்கள் வலிமேற்கில் அமைந்துள்ள மூளாய் அமெரிக்கன் மிசன் தழிழ் கலவன் பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டார் இதன்போது வலிமேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் சம்பிரதாயபூர்வமாக அங்கு அழைக்கப்பட்டார். இவ் நிகழ்வினபோது பாடசாலையின் அதிபர் திரு. க.லோகேஸ்வரன் அதிதிகளை வரவேற்றதுடன் அதிதிகள் வருகைப் பதிவேட்டிலும் குறிப்பினைப் பெற்றுக்கொண்டார் இதன்போது பாடசாலையின் தேவைகள் தொடர்பில் அமைச்சர் ஆராய்ந்தார். குறித்த இப் பாடசாலையின் தேவைகள் குறித்து பாடசாலை நிர்வாகம் 2012ம் ஆண்டில் குறிப்பிட்டதன் பின்னர் வலிமேற்கு பிரதேச சபைத் தவிசாளரால் அனாத்த முகாமைத்துவ அமைச்சுக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக பாடசாலையில் மாணவர்கள் பாதுகாப்பாக செல்லக்கூடியதான பாதை ஏறத்தாழ 0.6 மில்லியன் செலவில் நிறைவு செய்யப்பட்டது. இதேவேளை பாடசாலைக்குரிய அலுவலக தளபாடங்கள் கௌரவ. பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அவர்களது ஒதுக்கிட்டின் வாயிலாக தவிசாளரால் பெற்று கொடுக்கப்பட்து குறிப்பிடக்கூடிய ஒன்றாகும். இதேவேளை மேற்படி நிகழ்வின் பின்னர் அமைச்சரும் தவிசாளரும் அப் பகுதி மக்களது பல்வேறு குறைபாடுகள் தொடாபில் கேட்டு அறிந்துகொண்டனர்.
வலி மேற்கில் ஜேர்மன் புலம்பெயர் உறவுகளால் மருத்துவ உதவிகள்-
ஜேர்மன் வாழ் புலம்பெயர் உறவுகளின் பல்வேறு உதவிகளும் தாயக உறவுகளுக்காக வழங்கப்பட்டுவரும் நிலையில் அண்மையில் செல்வதுறை ஜெகநாதன் அவர்களின் வழிகாட்டலில் வலிமேற்கு பிரதேசத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட ஊன்றுகோல் உதவிகள் வலிமேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் 23.03.2015 அன்று வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் வைத்து பயனாளி ஒருவருக்கு வழங்கப்பட்டது.