தீவிரவாதத்திற்கு இடமளிக்கப் போவதில்லை-பிரதமர்-

ranil01நாட்டில் எந்த ஒரு இடத்திலும் தீவிரவாதம் மீண்டும் தலைதூக்குதுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜாதி, மத, இன பேதங்கள் இன்றி அனைத்து மக்களும் சுமுகமாக வாழ்வதற்கான நாடொன்றை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், இதற்காக அனைவரும் அப்பர்ணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அலரி மாளிகையில் செய்தி ஊடகங்களின் பிரதானிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் நிதி ஒழுக்கத்தை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் அடுத்த இலக்கு. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் உறுதியளிக்கப்பட்டதன்படி, 19ம் திருத்தச் சட்டம் தற்போதும் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக பல்வேறு தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல்செய்து வருகின்றனர். இந்த மனுக்கள் குறித்து உயர்நீதிமன்றம் தீப்பளித்த பின்னர் அதனை நிறைவேற்றிக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரம் தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக அரசியல் கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் காரியாலயம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய கீதத்தை தமிழில் பாட ஊக்குவிப்போம்-பிரதமர் ரணில்-

Ranilதேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்படுவது ஊக்குவிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தென்னாபிரிக்கா போன்று உண்மையை கண்டறிய விசேடகுழு அமைக்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை இன்று அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியபோதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமை கவுன்ஸிலில் நிறைவேற்றப்பட்டுள்ள போர்க்குற்ற விசாரணை பிரேரணை மற்றும் அதனை கொண்டுவந்த நாடுகள், புலம்பெயர் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளோம். பான் கீ மூனுடன் கடந்த அரசாங்கம் செய்துகொண்ட ஒப்பந்தம் உள்ளிட்ட சில விடயங்களே ஐ,நா மனித உரிமை கவுன்ஸிலில் பிரேரணை முன்வைக்க காரணமாக அமைந்தது. ஆனால் நல்லிணக்க விடயங்களில் சர்வதேசத்திடம் சரணடையத் தேவையில்லை. நாட்டில் பயங்கரவாத செயல்களுக்கு மீண்டும் இடமளிக்கப் போவதில்லை. பாதுகாப்பு உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. அது குறித்து எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்படுவதில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் பிரதான ஊழல் மோசடிகாரர்களை பிடிக்க சட்டதிட்டங்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது. 19வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள மக்கள் தீர்ப்பு ஒன்றை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது. அனைத்தும் சட்ட ஆலோசனைபடி பாராளுமன்றில் நிறைவேற்றிக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவின் வங்கிக்கணக்கை பரிசோதிக்க உத்தரவு-

gotabaya......பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ, மேலதிக செயலாளர் டி.எம்.எஸ். ஜயரத்ன மற்றும் அவன்கார்ட் நிறுவன பணிப்பாளர் சபையின் அனைத்து அங்கத்தவர்களினதும் வங்கிக் கணக்குகளை பரிசோதிப்பதற்கு காலி நீதவான் நிலுபுலி லங்காபுர இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார். அவன்கார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள மிதக்கும் ஆயுதக் களஞ்சிய கப்பல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் மேலதிக அறிக்கை சமர்ப்பித்ததை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிதி தூய்மையாக்கல் சட்டத்தின்கீழ் குற்றச்செயல் இடம்பெற்றுள்ளதா என விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறிப்பிட்ட நபர்களின் வங்கிக் கணக்குகள் தொடர்பான அறிக்கைகளை பெற்றுக்கொள்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தது. இதுதவிர தற்போது நாட்டிற்கு வருகைதந்துள்ள பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் டி.எம்.எஸ். ஜயரத்ன மீண்டும் வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதேவேளை, கப்பலின் காப்புறுதிக்கான கால வரையறை இம்மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடைவதாக, ஆயுதக் களஞ்சிய கப்பல் உரிமையாளர் நிறுவனத்தின் சார்பாக ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பிட்ட கப்பல் மிகவும் பழைமை வாய்ந்தது என்பதுடன், எண்ணெய்க் கசிவு ஏற்படுமாயின், துறைமுகம் மற்றும் அதனை அண்மித்த சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக கப்பலிலுள்ள ஆயுதங்களுடனான 22 கொள்கலன்களையும் வேறொரு கப்பலில் ஏற்றுவதற்கும், களைப்படைந்துள்ள கப்பல் பணியாளர்களுக்கு பதில் வேறு பணியாளர்களை ஈடுபடுத்துவதற்கும் சட்டத்தரணி நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளார். இதற்கமைய அந்த பணியாளர்களுக்குப் பதிலாக வேறு பணியாளர்களை கப்பலில் ஈடுபடுத்துவதற்கு அனுமதி வழங்கிய காலி நீதவான், ஆயுதங்களை வேறொரு கப்பலில் ஏற்றுவதற்கான கோரிக்கையை நிராகரித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை கடும் சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம்-அமெரிக்கா-

nisha thesai biswalஜனாதிபதி மைத்திரபால சிறிசேன முன்னைய ஜனாதிபதியின் தீங்குமிக்க கொள்கையிலிருந்து நாட்டை விலக்கிச் செல்கின்ற போதும் முன்னைய அரசாங்கம் விட்டுச் சென்ற நிதி சிக்கல் உட்பட பல கடுமையான சவால்களை இலங்கை எதிர்கொள்ள நேரிடுமென அமெரிக்கா கூறியுள்ளது. இலங்கை மக்களும் சிறிசேன அரசாங்கமும் இனிவரும் மாதங்களில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டும். ஆயினும், இலங்கையுடனான உறவை வலுப்படுத்துவதில் ஜனநாயகத்தை முன்னெடுக்க அவர்களுடன் வேலை செய்தலிலும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் செயலாளர் கெரியும் வழங்கியுள்ள உறுதிகளை நான் மீண்டும் வலியுறுத்தியுள்ளேன் என தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் கூறியுள்ளார். இவ்வாறான உறுதிமொழிகள் இலங்கை ஜனாதிபதியினால் கேட்கப்பட்ட வரவு – செலவுத்திட்டத்துக்கான உதவிகளில் பிரதிபலிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வரவு – செலவுத்திட்டத்துக்கான உதவிக் கோரிக்கை இலங்கை ஜனநாயகம் நோக்கிய மாற்றங்கள் ஏற்பட முன்னர் முன்வைக்கப்பட்டவை. இதனை நாம் எமது திட்டங்களில் மட்டுப்படுத்தினோம். இப்போதுள்ள அரசாங்கம் வித்தியாசமானது. நல்லாட்சி, பொறுப்புக்கூறல், வர்த்தகம் மற்றும் வேறு விடயங்களில் இலங்கைக்கு உதவக்கூடிய பாரிய வாய்ப்புக்களை நாம் காண்கின்றோம். முன்னைய ஆட்சியை விட ஜனாதிபதி சிறிசேனவின் ஆட்சியின்கீழ் ஜனநாயக நிறுவுதல், சமத்துவ பொருளாதார வளர்ச்சி, இனங்களுக்கிடையேயான பதற்றக்குறைவு என்பன கூடுதலாக உள்ளது என்று நிஷா தேசாய் பிஸ்வால் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சந்திரிக்கா தலைமையில் தேசிய ஐக்கிய தலைமையகம்-

chandrikaதேசிய ஐக்கியத்திற்கான தலைமையகம் ஒன்றை ஏற்படுத்த புதிய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமையில் இந்த தேசிய ஐக்கியத்திற்கான தலைமையகம் அமைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் நல்லிணக்கத்திற்கான ஜனாதிபதி செயலணி ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய செயலணி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய கூட்டமொன்று அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது. ஜனாதிபதி மாளிக்கைக்கு முன்பாகவுள்ள இரண்டு மாடிகளைக் கொண்ட சார்டட் வங்கியின் கட்டிடத்திலேயே இந்த செயலணியின் நடவடிக்கைகள் இடம்பெற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா பிரஜைகள் குழு தலைவருக்கு அழைப்பாணை-

thevarasaவவுனியா மாவட்ட பிரஜைகள் குழுத்தலைவர் கி. தேவராசாவை இரண்டாம் மாடிக்கு வருமாறு பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நெடுங்கேணி பொலிஸார் ஊடாக இன்று இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 30ஆம் திகதி காலை 10மணிக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த அழைப்பாணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்தப் பிராந்தியத்தில் இடம்பெற்றுவரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக எதிர்வரும் 30ஆம் திகதி அழைக்கப்படுகின்றீர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் காணாமல் போனவர்களது விசாரணையினை ஏற்றுக்கொள்ள முடியாது என வடக்கு, கிழக்கு மாகாண சிவில் ஒன்றியத்தினால் அண்மையில் 8 மாவட்டங்களில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதனடிப்படையில் வவுனியாவில் இடம்பெற்ற போராட்டத்தினை முன்னின்று தேவராசா நடாத்தியிருந்தார்.

திருமண பதிவுக் கட்டணக் குறைப்பு-

weddingஅரசாங்கத்தால் வரவு செலவுத் திட்டத்தினூடாக அறிவிக்கப்பட்ட திருமணப் பதிவு கட்டணக் குறைப்பு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளதாக வட மாகாண உதவிப் பதிவாளர் செல்வி ஆனந்தி ஜெயரட்ணம் நேற்று தெரிவித்துள்ளார். முன்பு வீட்டுக்கு வந்து திருமணப் பதிவு செய்ய 3,500 ரூபாய் கட்டணம் அறவிடப்பட்டது. தற்போது அக்கட்டணம் 50 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. திருமணப் பதிவாளருக்கு 1500 ரூபாய் கட்டணம் வழங்க வேண்டிய நடைமுறை தற்போது 750 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, திருமணப் பதிவு தொடர்பான அறிவித்தல் கோரும் நோட்டீஸ் கட்டணம் 100 ரூபாய், பிங்க் போம் கட்டணம் 100 ரூபாய் ஆகியவற்றில் எதுவித மாற்றமும் செய்யப்படவில்லை என அவர் கூறினார். புதிய நடைமுறையின்படி பதிவாளர் கட்டணம் 750 ரூபாய், பதிவுக் கட்டணம் 50 ரூபாய், நோட்டீஸ் கட்டணம் 100 ரூபாய், பிங்க் போம் கட்டணம் 100 ரூபாய் என ஆக மொத்தம் 1,000 ரூபாய், திருமணப் பதிவுக் கட்டணமாக அறவிடப்படுகின்றது.

நோயாளர் காவு வாகனங்களுக்கு அதிவேக வீதியில் இலவச அனுமதி-

high wayநோயாளர்களை காவிச் செல்லும் போது, அம்பியுலன்ஸ் எனப்படும் நோயாளர் காவுகை வாகனங்களுக்கு அதிவேக நெடுஞ்சாலையில் இலவச அனுமதியை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. புத்தளம், சிலாபம், குலியாபிட்டிய மற்றும் நீர் கொழும்பு போன்ற பகுதிகளில் இருந்து அதிக அளவான நோயாளர்கள் கொழும்புக்கு நோயாளர் காவுகை வாகனங்களின் ஊடாக அழைத்து வரப்படுகின்றனர். இதன் போது கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை இலவசமாக பயன்படுத்த அனுமதிக்குமாறு காவுகை வாகனங்களின் சாரதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எல்லை மீள்நிர்ணயத்தின் பின்பே தேர்தல் நடத்தவும்-பெப்ரல்-

rohana hettiarachchiஎல்லைகளை மீள்நிர்ணயம் செய்ததன் பின்னர், உள்ளுராட்சி மன்றங்ளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள 335 உள்ளுராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ காலம் இந்த மாதம் 31ம் திகதியுடன் நிறைவடைகின்றது. இது தொடர்பில் கருத்து வெளியிடும்போதே பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் இக் கருத்தைக் கூறியுள்ளார்.

சட்டவிரோதமாக தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது-

puthaiyalவவுனியா கனகராயன்குளம் பகுதியில் சட்டவிரோதமாக தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட மூன்றுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொல்பொருள் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் சந்தேகநபர்கள் நேற்றிரவு 10 மணியளவில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. சாவகச்சேரியை சேரந்தவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைதான சந்தேகநபர்களை வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கனகராயன்குளம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.