இலங்கை கடற்படைக்கு பயிற்சி வழங்கவுள்ள இந்திய கடற்படை-

indian navyஇந்தியாவின் நான்கு கடற்படை கப்பல்கள் இன்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடையும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கப்பல்கள் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் என்று இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. மேலும் இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு மூன்று நாள் பயிற்சி முகாம் நடத்தும் முகமாகவே இன்றைய தினம் இக்கப்பல்கள் இலங்கையை வந்தடைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டி.ஐ.ஆர், சேகரி, வருணா மற்றும் சுதர்சினி ஆகிய இந்திய கடற்படைக் கப்பல்களே திருகோணமலை துறைமுகத்தை வந்தடையும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த கப்பல்களின் விஜயத்தினால் இலங்கை கடற்படையினருடன் தொழில் பயிற்சிகள் மற்றும் கலாச்சாரம், விளையாட்டு தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இவ்வாறான பயிற்சிகள் ஏப்ரல் 2013 இல் இலங்கை கடற்படையினருக்கு வழங்கப்பட்டிருந்தது. முதல் பயிற்சியின் போது ஆறு கப்பல்கள் இலங்கைக்கு வருகைதந்திருந்ததுடன், கடற்படை அதிகாரிகளுக்கு கடலோர பாதுகாப்பு உள்ளிட்ட பல பயிற்சிகள் அளிக்கப்பட்டிருந்தது.

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் பரிந்துரைப்பு-

american ambasadorஇலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான அமெரிக்காவின் புதிய தூதராக அதுல் கேஷாப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவே அதுல் கேஷாப்பை, இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளின் அமெரிக்காவுக்கான புதிய தூதராக பரிந்துரை செய்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நேற்று வெளியிட்டுள்ளார். திறமை வாய்ந்த நாட்டுக்காக சேவை செய்யக்கூடியவர் என்ற அடிப்படையில் அதுல் கேஷாப் பரிந்துரைக்கப்படுவதாக பராக் ஒபாமா குறிப்பிட்டுள்ளார். கேஷாப் இந்தியாவுக்கான தூதுவராக 2005- 2008 வரை பணியாற்றியுள்ளார். கேசாப் இந்தியா வம்சவாளியை சேர்ந்த அமெரிக்கர். மேலும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான பிரதி உதவிச் செயலாளராக அதுல் கேஷா­ப் கடமையாற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழில் சந்திப்புகள்-

Ranilவடக்குக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போது இன்று யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் பங்குகொண்டிருந்தனர். இதேவேளை பொதுமக்கள் மத்தியில் எழும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட சந்திப்பு ஒன்று இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இன்று காலை 11.30 மணியளவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் குறித்த சந்திப்பு நடைபெற்றது. குறித்த சந்திப்பில் மக்கள் தொடர்பாக எழும் பிரச்சினைகள் தொடர்’பில் விசேடமாக ஆராயப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் யாழ்.மாவட்ட அரச அதிபர் ,நாடாளுமன்ற உறுப்பினர்கள், மீள்குடியேற்ற அமைச்சர்,மகளிர் விவகார அமைச்சர், பிரதி அமைச்சர், யாழ்.மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

ஜனாதிபதியின் சகோதரர் மீது தாக்குதல்-

policeஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான வெலி ராஜு என்று அழைக்கப்படும் பிரியந்த சிறிசேன பெதிலை பகுதியில் வைத்து நேற்றிரவு 7மணியளவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் அவர் படுகாயமடைந்து பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் விசேட வானூர்திமூலம் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றார். கோடரியால் வெட்டியே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான சந்தேகநபரான லக்மால் என்பவர் பக்கமுன பொலிஸில் சரணடைந்துள்ளார்.

ஏயார் சீப் மார்ஷல் ரொசான் குணதிலக்கவிடம் விசாரணை-

gunatillekeபாதுகாப்பு படைகளின் முன்னாள் பிரதானியான ஏயார் சீப் மார்ஷல் ரொசான் குணதிலக்கவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. நிதி மோசடி தொடர்பான விசாரணைப் பிரிவினரால் இவ் விசாரணை முன்னெடுக்கப்பட்ட தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மிக் விமான கொள்வனவில் இடம்பெற்றதாக க் கூறப்படும் மோசடி தொடர்பிலேயே இவ் விசாரணை இடம்பெற்றுள்ளது.