ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போஆ மாநாட்டில் விசேட உரை-
சீனாவில் நடைபெறும் ஆசியாவின் வருடாந்த போஆ மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரை நிகழ்த்தியுள்ளார். ஆசியாவின் அபிவிருத்தி தொடர்பில் அன்னியோன்ய கருத்துக்கள் பரிமாற்றத்தின் மேடையாக கருதப்படும் போஆ மாநாடு சீனாவின் ஹய்னான் பிராந்தியத்தில் நடைபெறுகின்றது. இந்த மாநாட்டில் 15 நாடுகளின் அரச தலைவர்கள் உட்பட அரச அதிகாரிகள் 2800 பேரும் கலந்து கொண்டுள்ளனர். மாநாட்டின் தலைவர் முன்னாள் ஜப்பானிய பிரதமரான யஷ_வோ புகுடா மாநாட்டை ஆரம்பித்து வைத்தார், பிரதான உரையை சீன ஜனாதிபதி ஷீ ஜின் பின் நிகழ்த்தினார். இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுவீடன் பிரதமரை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.
இந்தியாவையும் சீனாவையும் சமநிலையில் பேண இலங்கை முயற்சி-
இலங்கை அரசாங்கம் இந்தியாவையும், சீனாவையும் சமநிலையில் கையாள முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. த ஹிந்து பத்திரிகை தமது ஆசிரிய தலையங்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்த ஒரு வார காலத்திற்குள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். புதிய அரசாங்கம் இலங்கையில் பதவி ஏற்றதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சில தீர்மானங்கள் சீனாவை பாதிக்கும் வகையில் அமைந்திருந்தன. குறிப்பாக 1.4 பில்லியன் டொலர்கள் பெறுமதியான சீனாவின் துறைமுக நகர நிர்மாணப் பணிகள் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டமை குறித்து சீன அரசாங்கம் கரிசனை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் இந்தியாவுக்கு நிகராக சீனாவுடனான உறவையும் சமநிலையில் பேணும் வகையிலான செயற்பாடுகளை புதிய அரசாங்கம் முன்னெடுப்பதாக அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.
அகதிகளைத் தடுக்கும் நடவடிக்கைக்கு அவுஸ்திரேலியா வரவேற்பு-
சட்டவிரோதமான முறையில் இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியா நோக்கி அகதிகள் பயணிக்காதிருக்க இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அவுஸ்திரேலியா திருப்தி வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ரொபின் மூடி இதனைத் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா நோக்கி செல்லும் அகதிகளின் எண்ணிக்கை தற்போது குறைவடைந்துள்ளது. இலங்கையின் இந்த நடவடிக்கைகளுக்கு அவுஸ்திரேலியா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என்று அவர் கூறியுள்ளார்.
தமிழ் மக்களின் தீர்வுக்காகவே அரசாங்கத்துக்கு ஆதரவு-கூட்டமைப்பு-
தமிழ் மக்களுக்கான தீர்வுகளை பெற்றுக் கொள்வதற்காகவே தற்போதைய அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் பொது செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் சந்திக்கின்ற காணிப் பிரச்சினைகள், அரசியல் தீர்வு, மீனவர் பிரச்சினை உள்ளிட்ட விடயங்களுக்கு தீர்வுகளை வழங்க அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இதற்காகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
காணாமல் போனோர் தொடர்பான விசாரணை குறித்து பிரதமர் கருத்து-
காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் நிறைவு செய்யவிருப்பதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழில் நடைபெற்றிருந்த நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இலங்கையில் புதிய அரசாங்கம் பதவி ஏற்றபோது இரகசிய முகாம்கள் எவையும் இருக்கவில்லை. சில காலங்களுக்கு முன்னரும் அவ்வாறான முகாம்கள் இருக்கவில்லை. ஆனால் அதற்கும் முன்னர் இவ்வாறான இரகசிய முகாம்கள் இருந்ததா? என்பது குறித்து தம்மால் முடியாது. ஆனால் காணாமல் போனோர் குறித்து விசாரணை செய்யும் போது இந்த விடயங்கள் உள்ளிட்ட முழுமையான ஆய்வின் பின்னர், தகவல் வழங்கப்படும். அதன் பின்னர் இது குறித்த தீர்வினை காண முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதான ரயில் நிலையங்கள் 60 இற்கு இலவச Wi-Fi வசதி-
பிரதான ரயில் நிலையங்கள் 60 இற்கு இலவச Wi-Fi வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை (30.03.2015) தொடக்கம் இலவச Wi-Fi வசதிகளை ஏற்படுத்தவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் விஜய அமரதுங்க தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஏனைய 60 பிரதான ரயில் நிலையங்களுக்கும் இலவச Wi-Fi வசதிகளை பெற்றுகொடுக்க நடவடிக்i எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரயில்வே திணைக்களம், இலங்கை தகவல் தொழிநுட்ப நிலையத்தினுடன் இணைந்து இந் நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதாக விஜய அமரதுங்க கூறியுள்ளார்.