இலங்கைக்கு விஜயம் செய்யும் முதலாவது ஐ.நாவின் பிரதிநிதி-
ஐ.நாவின் விசேட பிரதிநிதிகளில் ஒருவரான பப்லோ டி கிரிப் இன்று இலங்கைக்குப் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உண்மை, நல்லிணக்க செயன்முறைகள் குறித்த அனுபவங்களை அறிந்து கொள்ளும் நோக்கிலேயே இந்த விஜயம் அமையும் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் அழைப்பின் பேரிலேயே பப்லோ டி கிரிப் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்கின்றார். ஆறுநாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வரும் ஐ.நாவின் விசேட பிரதிநிதி, அரச தலைவர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம், புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், இலங்கைக்கு வருகை தரும் ஐ.நாவின் முதலாவது உயர் மட்டப் பிரதிநிதி இவரென்பது குறிப்பிடத்தக்கது.
மிஹின் எயார் விமானம் அவசரமாக தரையிறக்கம்-
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டாக்காவுக்கு சென்ற மிஹின் எயார் விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. இன்றுகாலை 7.30க்கு புறப்படவிருந்த விமானம், காலை 9.30க்கே புறப்பட்டது என பயணிகள் தெரிவிக்கின்றனர். விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக. அந்த விமானம் 10.45க்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டதாகவும், 159 பயணிகளுடன் புறப்பட்டு சென்ற எம்.ஆர்.எல்501 என்ற விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
யேமனிலுள்ள இலங்கையர்களை மீட்க ஐ.நாவின் உதவி கோரல்-
யேமனில் இடம்பெற்று வருகின்ற மோதல்களில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு ஐக்கிய நாடுகளின் உதவியை கோரியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது. யேமன் தலைநகர் சானாவை அண்மித்த பகுதியில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு மீள அழைத்துவர, இந்திய கடற்படையினரின் உதவியையும் பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாக பதில் வெளிவிவகார அமைச்சர் அஜித் பீ பெரேரா குறிப்பிட்டுள்ளார். மோதல்களில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு துரித நடவடிக்கை எடுக்குமாறு, அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நுவரெலியா, கம்பஹா, கந்தானை, தொம்பே, பிலியந்தலை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே யேமன் நாட்டில் நிர்க்கதியாகியுள்ளனர். இதேவேளை. யேமனில் மோதல்களில் சிக்கியுள்ள 3,500க்கும் மேற்பட்ட இந்தியப் பிரஜைகளை நாட்டுக்கு அழைத்துவருவதற்காக இந்திய அரசு கப்பல்களை அனுப்பிவைக்க உத்தேசித்துள்ளது. மோதல்கள் வலுவான நிலையில் யேமன் சர்வதேச விமான நிலைய செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளமையே இதற்கு காரணமாகும்.
உள்ளுராட்சி அமைப்புக்களின் ஆட்சிக்காலம் நீடிப்பு-
234 உள்ளூராட்சி அமைப்புக்களின் ஆட்சிக்காலம் மே மாதம் 15 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த அமைப்புக்களின் ஆட்சிக் காலம் எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக, அரச நிர்வாக மற்றும் மாகாண அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஜே. தடல்லகே தெரிவித்துள்ளார். அதற்கமைய 201 பிரதேச சபைகள், 30 நகர சபைகள் மற்றும் 03 மாநகர சபைகளின் ஆட்சிக் காலம் மே 15ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கான வர்தமானி அறிவித்தலுக்கு அமைச்சர் கரு ஜயசூரிய கையொப்பமிட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். குறித்த உளளுராட்சி அமைப்புக்களில் தொகுதிவாரி தேர்தல் நடத்துவதற்கு திட்டமிடப்படுள்ளதால், அவற்றின் ஆட்சிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது. மேலும் 65 உள்ளுராட்சி அமைப்புக்களின் ஆட்சிக்காலம் ஜூலை 31ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதுடன், 21 அமைப்புக்களின் ஆட்சிக் காலம் ஒக்டோம்பர் 16ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
2 வாரங்களுக்குள் நாடாளுமன்றம் கலைப்பு-
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நாடாளுமன்றத்தை கலைக்கும் சூழ்நிலை ஒன்று உருவாகலாம் என்றும் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். அதன் பின்னர் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி கட்சியின் அரசாங்கம் சக்திமயப்படுத்தப்படும். இதற்கு மக்களின் ஆதரவு வழங்கப்பட வேண்டும். அதேநேரம் தற்போது எதிர்க்கட்சிக்கு தலைவர் ஒருவரை நியமித்துக் கொள்ள முடியாத நிலை உருவாகி இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரை நியமித்துக் கொள்ள முடியாதிருக்கின்ற கட்சி ஒன்றை நம்பி நாட்டை கொடுக்கக்கூடாது என்று அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.ம.சு.கூட்டமைப்பு ஆதரவாளர்களிடையே மோதல்-
நீர்கொழும்பு பிட்டிபன பகுதியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிகிச்சை வழங்கும் நிகழ்வொன்றின்போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். காயமடைந்தவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மோதல் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். நீர்கொழும்பு பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வடக்கைச் சேர்ந்தோரும் பொலிஸில் இணையவேண்டும்-பிரதமர்-
நாட்டில் சட்டம் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றால் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் பொலிஸில் இணைவதற்கு முன்வர வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று இடம்பெற்ற சிவில் பிரதிநிதிகள் வர்த்தக சங்கத்தினர், வணிகர் கழக உறுப்பனர்களை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். யாழ். குடாநாட்டில் பெண்களுக்கெதிரான வன்முறைச்சம்பவங்கள் அதிகரித்து செல்வதாக பெண்கள் அமைப்பின் பிரதிநிதி சுட்டிகாட்டியதோடு பெண்களை தலைமைத்துவமாக கொண்டு செயற்படும் குடும்பங்களின் வாழ்வாதார பிரச்சினை மற்றும் சுயஉற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதில் சந்தைவாய்ப்பு பிரச்சனையை எதிர்கொள்வதாகவும் பிரதமரிடம் தெரிவித்தனர் அதற்கு பதிலளிக்கும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார். நாட்டில் சட்டம் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றால் வடக்கு மாகாணத்தில் உள்ள இளைஞர்கள் யுவதிகள் பொலிஸில் இணைவதற்கு முன்வரவேண்டும். தற்போது நாட்டில் 200 ஆண், பெண் தமிழ் பொலிஸாருக்கு வெற்றிடங்கள் காணப்படுகின்றன. எனவே அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு ஊடகங்கள்மூலம் விளம்பரப்படுத்தி எதிர்காலத்தில் இளைஞர் யுவதிகள் இனணத்து கொள்ளப்படவுள்ளார்கள். மேலும் கொழும்பில் திங்கட்கிழமை இலவச வை பை திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அடுத்ததாக யாழ்ப்பாணத்தில் இலவச வை பை திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர் மேலும் கூறியுள்ளார்.