தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்-
விருப்பு வாக்குமுறை மற்றும் தொகுதிவாரி முறையை உள்ளடக்கிய புதிய தேர்தல் முறை தொடர்பாக கட்சித் தலைவர்களுக்கு தேர்தல்கள் ஆணையாளர் விளக்கமளிக்கவுள்ளார். இன்று அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவிருக்கும் இக்கூட்டத்தில் தேர்தல்கள் ஆணையாளர் உத்தேச தேர்தல்முறை தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளார். தற்பொழுது நடைமுறையில் உள்ள தேர்தல் முறையை மாற்றி புதிய தேர்தல் முறையொன்றைக் கொண்டுவருவது தொடர்பாக கட்சிகளுக்கிடையில் பல்வேறு கருத்துக்கள் காணப்படுகின்றன. இது தொடர்பாக கட்சித் தலைவர்களுக்கும், தேர்தல் ஆணையாளருக்குமிடையில் அண்மையில் பேச்சுவார்த்தையொன்றும் நடைபெற்றிருந்தது. உத்தேச புதிய தேர்தல் முறைக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர்களின எண்ணிக்கை 250 ஆக அதிகரிக்கப்படவிருக்கின்றது. இதில் 140 பேர் விருப்புவாக்குகளின்படியும், 80 பேர் தொகுதிவாரிமுறையின் கீழ் மாவட்ட அடிப்படையிலும் தெரிவு செய்யப்படவிருப்பதுடன், 30 தேசிய பட்டியல் ஆசனங்களும் வழங்கப்படவுள்ளன. இது தொடர்பாக கட்சிகளுக்கிடையில் எந்தவிதமான உறுதியான இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டிருக்கவில்லை. இவ்வாறான நிலையில் புதிய தேர்தல் முறை குறித்து இன்றையதினம் தேர்தல்கள் ஆணையாளர், கட்சிகளின் தலைவர்களுக்கு விளக்கமளிக்கவுள்ளார்.
234 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நீடிப்பு-
234 உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலம் மே 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. மார்ச் 15ஆம் திகதி மற்றும் நாளை 31ஆம் திகதியுடன் பதவிக்காலம் நிறைவடைகின்ற உள்ளுராட்சி மன்றங்களுக்கான பதவிக்காலமே நீடிக்கப்பட்டுள்ளது என அமைச்சு அறிவித்துள்ளது. நாடாளுமன்ற எதிர்வரும் ஏப்ரல் 23ஆம் திகதி கலைக்கப்படவிருப்பதனால் உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலம் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். மார்ச்; 15ஆம் திகதியுடன் பதவிக்காலம் நிறைவடைந்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான பதவிக்காலம் மே 15ஆம் திகதி வரையிலும், மார்ச் 31ஆம் திகதியுடன் பதவிக்காலம் நிறைவடையும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான பதவிக்காலம் மே 31ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் கொழும்பு, கண்டி மற்றும் தெஹிவளை, கல்கிசை மாநகர சபைகளுக்கு இது பொருந்தாது என்றும் அந்த மாநகர சபைகளின் பதவிக்காலம் இவ்வருடம் இறுதியிலேயே நிறைவடையவிருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். மாநகர சபைகள் 23, நகர சபைகள் 41 மற்றும் பிரதேச சபைகள் 271 என மொத்தம் 335 உள்ளுராட்சி மன்றங்கள் உள்ளன. அதில், 234 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலமே நீடிக்கப்பட்டுள்ளது.
தேர்தலை பிற்போட்டால் வீதியில் இறங்குவோம்-கம்மன்பில-
ஜே.ஆர், சந்திரிக்கா போன்று தேர்தலை பிற்போட அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் வீதிக்கு இறங்கி போராடவுள்ளதாக மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில இன்று கொழும்பில் ஊடகத்தினரிடம் தெரிவித்துள்ளார். மஹிந்தவின் சூட்டை குளிராக்கவென தேர்தலை பிற்போடும் திட்டத்தை செயற்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து மக்களை சந்தித்து கலந்துரையாடி அரசியல் செய்வது, புதிய அரசாங்கம் தமது இயலாமையை காட்டுவது, மஹிந்த ராஜபக்ஷமீது உயர்நிலையில் இருந்து கீழ்நிலை உறுப்பினர்கள் வரை குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் அவரது புகழ் ஓங்கியிருப்பது போன்ற காரணங்களால் மஹிந்தவை மறக்கமுடியாது. வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்று நாம் எச்சரித்ததால் அரசாங்கம் உள்ளுராட்சி சபைகளின் அதிகாரத்தை ஆணையாளர்களுக்கு அளிக்காது பதவிகாலத்தை நீடித்துள்ளது, ஆயினும் உள்ளுராட்சி சபைகள் குறித்த அதிகாரம் முதலமைச்சருக்கே உண்டு என அவர் மேலும் கூறியுள்ளார்.
மட்டக்களப்பு விபத்தில் இருவர் பலி, மீரிகம விபத்தில் 27பேர் காயம்-
மட்டக்களப்பு பொலன்னறுவை வீதியின் வாழைச்சேனை பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மட்டக்களப்பிலிருந்து பொலன்னறுவைக்கு சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியதால் ஏற்பட்ட விபத்தினால் இவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 23 மற்றும் 27வயதான இருவரே உயிரிழந்துள்ளனர். இதேவேளை, கொழும்பு குருநாகல் வீதியில் மீரிகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 27பேர் காயமடைந்துள்ளனர். பஸ் ஒன்றும் லொறியொன்றும் மோதியதில் இவர்கள் காயமடைந்து தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அவர்களில் இருவர் குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களில் 17 பெண்கள் அடங்குவதாக பொலிஸார் கூறுகின்றனர்.
அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக முறைப்பாடு-
அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிங்களே ஜாதிக்க பெரமுன என்ற அமைப்பினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வில்பத்து சரணாலயத்தின் காணி கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது வில்பத்து சரணாலயத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் உள்நாட்டு வெளிநாட்டு மக்களை குடியமர்த்துவதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளதாக சிங்களே ஜாதிக்க பெரமுன தெரிவித்துள்ளது. இந்த செயற்பாட்டிற்காக வெளிநாடுகளிடமிருந்து பணம் பெறப்பட்டமைக்கான தகவல்களும் உள்ளதாக அந்த அமைப்பின் தேசிய அமைப்பாளர் அங்குருகல்லே சிறி ஜினானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
அஜித் நிவாட் கப்ராலிடம் பொலிஸார் விசாரணை-
ஹெஜின் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலிடம் பொலிஸார் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர். “ஹெஜின்” எண்ணெய் கொள்வனவின்போது இடம்பெற்ற மோசடி தொடர்பில் பண மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் பொலிஸ் பிரிவினர் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரிடம் விசாரணை நடத்தி வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்காக முன்னாள் மத்திய வழங்கி ஆளுநரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இன்று முற்பகல் 9.30 தொடக்கம் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருகின்றது என ருவன் குணசேகர மேலும் கூறியுள்ளார்.
இவ் நிகழ்வில் கலந்து கொண்ட வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் உரையாற்றுகையில் முதியோர் எமது சொத்துக்கள் அனுபவம் மற்றும் அறிவில்கூடிய எமது முதியோரிடம் இருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய நிறைய விடயங்கள் மிக அதிகமாக உள்ளன. எமது பண்பாட்டின் பல அம்சங்கள் இன்று எம் மத்தியில் இருந்து அழிவடைந்து செல்லும்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இவ்நிலை எமது தேசியத்தின் தன்மையிலும் நீண்டகாலத்தில் மாற்றங்களை உருவாக்கி விடக்கூடியது. இவ்வாறான அர்த்தம் மிக்க பண்பாடுகளை எமது முன்னோர்களிடம் இருந்தே நாம் பெறமுடியும். இவ்விலை மதிப்பிடமுடியாத சொத்தின் புத்தகங்களாக உள்ள முதியோர்கள் எமது சமூதாயத்தின் விலை மதிக்கமுடியாத சொத்துக்களாகவே உள்ளனர். மிக நீண்ட கொடிய யுத்த சூழ்நிலைகளின்போது இளைய தலைமுறை இங்கு வாழ முடியாத சூழ்நிலையில் இவ் நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் எமது தேசத்தின் சொத்துக்களையும் எமது இருப்புக்களையும் பாதுகாத்த பெருமை இன்றும் நிலைநிறுத்தி புலம்பெயர் நாடுகளில் இருந்து பணத்தினைப் பெற்று என்றும் எமது சமுதாயத்தின் இருப்பைக் காத்த பெருமை இவ் முதியோர்களையே சாரும். இவ் முதியோர் எவ்வளவு துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்த போதும் அவற்றில் துவண்டு விடாது யாவற்றையும் பாதுகாத்து இன்று எமது இருப்பின் நிலைக்கு அத்திபாரமாக திகழ்ந்தவர்கள் இவர்களது ஒவ்வோர் செயற்பாடுகட்கும் இளையவர்கள் என்றும் கரம் கொடுக்கவேண்டும். இவ் முதியோரை போற்றவேண்டும் இவர்களது ஒவ்வோர் செயற்பாடுகளுக்கும் ஊக்கமும் ஆக்கமும் வழங்க வேண்டும். கிராம ரீதியாக இவ் முதியவர்கள் போற்றப்பட வேண்டும் எனக் குறிப்பிட்hர். இவ் நிகழ்வில் முதியோர்கள் கௌரவிக்கப்பட்டனர்.