கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளராக இந்திரகுமார் பிரசன்னா நியமனம்-
கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதி தவிசாளருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல்.தவம் சபையில் இன்று சமர்ப்பித்திருந்தார். இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அடங்கலாக 19 உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர். பிரேரணைக்கு எதிராக 11 வாக்குகள் கிடைத்துள்ளன. இந்நிலையில் கிழக்கு மாகாண சபையின் புதிய பிரதி தவிசாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திரகுமார் பிரசன்னா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பீ.பி. ஜயசுந்தர, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ ஆகியோரிடம் விசாரணை-
ஹெஜின் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் பீ.பி. ஜெயசுந்தரவிடம் நிதி மோசடி விசாரணை பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணைகள் இன்று முன்பகல் இடம்பெற்றதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் ஹெஜின் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலிடம் நேற்று விசாரணை இடம்பெற்றிருந்தது. இதேவேளை முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிடம் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பகிஸ்கரிப்பு-
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நுண்கலைப் பீடத்தின் வரைதலும் வடிவமைத்தலும் துறையின் இறுதியாண்டு மாணவர்கள் இன்று மூன்றாவது தடவையாகவும் தமது வகுப்புக்களை பகிஸ்கரித்துள்ளார்கள். ஏற்கனவே கடந்த இரண்டு தடவைகளிலும் நுண்கலைப்பீடம் மற்றும் கலைப் பீடாதிபியினாலும் தமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் உரிய முறையில் நிறைவேற்றப்பட்வில்லையெனவும் தமக்கு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிப்பதற்கான விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்படவில்லையெனவும் தெரிவித்தே குறித்த மாணவர்கள் வகுப்பு பகிஸ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள். எழுத்து வடிவில் உரிய பதில் வழங்கும் வரை தாம் இந்தப் போராட்டத்தை தொடரப்போவதாகவும் நுண்கலைப் பீட மாணவர் மன்றத் தலைவர் சஜிந்திரன் இதன்போது தெரிவித்துள்ளார்.
ஆட்கடத்தல் மற்றும் கொலை தொடர்பாக கடற்படையினர் கைது-
ஆட்கடத்தல் மற்றும் கொலை தொடர்பாக கடற்படை அதிகாரிகள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்பட்ட கடற்படையினரில் இருவர் ஓய்வு பெற்றவர்கள் எனவும் ஒருவர் தொடர்ந்தும் சேவையில் இருப்பவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் அந்த வருடத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது பாதுகாப்பிற்காக இருந்த காவல்துறை அதிகாரிகளைக் கொலை செய்த சம்பவம் தொடர்பிலும் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேள்ட் விசன் நிறுவன சர்வதேச பிரதிநிதி வலிமேற்குக்கு விஜயம்-
கடந்த 23.03.2015 அன்று வேள்ட் விசன் நிறுவனத்தின் சர்வதேச பிரதிநிதியான ஆன்று அவர்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வலிமேற்கு பிரதேசசபைக்கு வருகை தந்திருந்தார். அவரை வரவேற்ற வலிமேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் வலிமேற்கு பிரதேசத்தில் வேள்ட் விசன் நிறுவனத்தின் செயற்பாடுகள் மற்றும் அதனால் மக்கள் அடையும் நன்மைகள் தொடர்பில் சர்வதேச பிரதிநிதிக்கு தெளிவுபடுத்தினார் தொடர்ந்து அங்கு வருகை தந்திருந்த சர்வதேச பிரதிநிதி குறித்த பிரதேசசபையால் முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்களின் முன்னேற்றத்தினை வாழ்த்தியதோடு எதிர்காலத்தில் மேலும் வலுவடைய வேண்டியநிலை தொடர்பில் குறிப்பிட்டார். இதன்போது வலிமேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் வேள்ட் விசன் நிறுவன சர்வதேச பிரதிநிதி ஆன்று அவர்கட்கு நினைவுப்பரிசிலை வழங்கி கௌரவித்தார். இவ் நிகழ்வில் வேள்ட் விசன் நிறுவன செயற்பாட்டு முகாமையாளர் அன்டனி மற்றும் திட்ட முகாமையாளர் அலெக்ஸ், வலிமேற்கு பிரதேசசபைத் செயலர் திருமதி. சாரதா உருத்திரசாம்பசிவன், பிரதேசசபை உத்தியோகஸ்தர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள், கிராமசேவகர்கள், கிராமமட்ட அமைப்பினர் என பலரும் பங்கேற்றிருந்தனர்.
வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள் போராட்டம்-
நிலுவை வேதன கொடுப்பனவை வழங்குமாறு கோரி மடடக்களப்பு வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள் இன்றுடன் 17வது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடதாசி ஆலையின் நிர்வாக பிரிவு கட்டிடத்தின்மீது ஏறி சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது போராட்டங்கள் தொடர்பில் உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றால் இந்த போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சஜின் டி வாஸ் குணவர்தன வெளிநாடு செல்வதற்கு தடை-
வெளிவிவகார முன்னாள் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தனவின் கடவுச்சீட்டை இன்று நீதிமன்றம் பொறுப்பேற்றுள்ளது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கொன்றிக்காக கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானபோதே அவரது கடவுச்சீட்டு நீதிமன்றத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தனவை 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 10 இலட்சம் ரூபா இரண்டு சரீர பிணையிலும் விடுவிக்குமாறும் கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிடிய இன்று உத்திரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யேமனில் உள்ள இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை-
யேமனில் நிலவும் மோதல் காரணமாக அங்குள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக வெளிநாட்டு வேலைவாயப்பு பணியகம் தெரிவிக்கின்றது. 49 இலங்கையர்கள் யேமனில் பணிபுரிந்து வருவதாக பணியக் பிரதிப் பொது முகாமையாளர் மங்கல ரண்தெனிய கூறினார். அவர்களை விரைவில் இலங்கைக்கு அழைத்தவர இந்தியாவின் உதவியை நாடியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். யேமனில் 3000ற்கும் அதிகமான இந்தியர்கள் பணிபுரிவதனால் அவர்களை மீள அழைத்துவரும் திட்டத்துடன் இலங்கையும் இணைந்து கொள்ளவுள்ளதாக அவர் கூறினார். வெளிவிவகார அமைச்சு, இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடமும் இந்திய வெளிவிவகார அமைச்சிடமும் இக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாயப்பு பணியக பிரதிப் பொது முகாமையாளர் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான மனு நிராகரிப்பு-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்றால் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் நாட்டின் பல பகுதிகளுக்கு இராணுவத்தினரை அனுப்பியதால் சிவிலியன்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டதாகத் தெரிவித்து முன்னிலை சோஷலிச கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் துமிந்த நாகமுவ இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். மனுவின் பிரதிவாதிகளாக துமிந்த நாகமுவ, முப்படைத் தளபதிகள், தேர்தல்கள் ஆணையாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டிருந்தனர். அதன்படி பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் அழைப்பு விடுத்திருந்த நிலையில் போதிய சாட்சிகள் இல்லாத காரணத்தால் உயர் நீதிமன்றம் மனுவை நிராகரித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
ரத்கம பிரதேச சபை தலைவர் கொலைச் சந்தேகநபர் சரண்-
ரத்கம பிரதேச சபை தலைவர் மனோஜ் புஷ்பகுமார கொலையுன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராகிய ஜனித் மதுசங்க த சில்வா பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேக நபரை களுத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.