நேபாள நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 4,352ஆக உயர்வு-
நேபாள நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆயிரத்து 352ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கி இருக்கலாம் என்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டும் என அஞ்சப்படுகிறது. நிலநடுக்கத்தில் காயமடைந்த 8 ஆயிரத்து 63 பேர் இதுவரை மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 60 மாவட்டங்களில் 9 மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதனிடையே அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய பிரதமர் சுஷில் கொய்ராலா, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் போதிய அளவில் நடைபெறவில்லை என தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், மக்களை மீட்பதற்கே அரசு முன்னுரிமை அளிப்பதாக தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட இடங்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருவதாக கூறிய கொய்ராலா, காயமடைந்தவர்களுக்கு ரத்த தானம் வழங்குவதற்கு மக்கள் முன் வர வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதனிடையே அடுத்தடுத்த நில அதிர்வுகள் ஏற்பட்டதால் மக்கள் தெருக்களிலேயே தஞ்சமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிகாரங்கள் குறைக்கப்படுவது ஆரோக்கியமான அறிகுறியே-இரா.சம்பந்தன்-
மீண்டும் ஜனாதிபதியாக விரும்பாத அருமையானதொரு ஜனாதிபதியொருவர் எமக்கு கிடைத்துள்ளார். ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். இதுவோர் ஆரோக்கியமான அறிகுறியாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம், நேற்று ஆரம்பமானது. சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்பித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றியதன் பின்னர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரும் மேற்படி திருத்தச் சட்டமூலம் தொடர்பில் கருத்துரை வழங்கினர். இதனையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கருத்துரைத்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய இரா.சம்பந்தன், ‘நாடாளுமன்றத்தின் மீது எந்த நேரத்திலும் பாரிய தீங்கை விளைவிக்கக்கூடிய ஒன்றாக அரசியலமைப்பின் 18ஆவது திருத்தச் சட்டம் இருந்தது. அது, ஜனாதிபதியின் தயவில் நாடாளுமன்றம் தங்கியிருக்கும் நிலையை ஏற்படுத்தியிருந்தது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பாரத லக்ஷமன் கொலை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு-
முன்னாள் ஜனாதிபதியின் தொழிற்சங்க ஆலோசகர் பாரத லக்ஷமன் பிரேமச்சந்திர கொலை வழக்கு மே மாதம் 22ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பவித்ரா தென்னகோன் வழக்கை ஒத்திவைத்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட பிரதிவாதிகள் 12 பேர் இன்றையதினம் நீதிமன்றில் ஆஜரானபோதும் பிரதான பிரதிவாதி பிரியந்த ஜனக்க என்பவர் நீதிமன்றில் ஆஜராகவில்லை. குறித்த நபருக்கு அழைப்பாணை விடுப்பதில் சிக்கல் உள்ளதாகவும் அதனை செய்ய முடியாது போனால் அவர் இன்றி விசாரணை நடத்துமாறு அரச சட்டத்தரணி நீதிமன்றில் அறிவித்துள்ளார். இதேவேளை, குறித்த வழக்கின் பிரதிவாதியான சமிந்த டி ஜயனாத் 10 லட்சம் பெறுமதியா இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேபாளத்தில் இருந்து 42 பேர் நாடு திரும்ப ஏற்பாடு-
நேபாளம் – காத்மண்டு நோக்கி நேற்று முன்தினம் சென்றிருந்த இலங்கை வான்படையின் வானூர்தி மீண்டும் தாயகம் திரும்பவுள்ளது. அதில், அங்கு தங்கியிருந்த 42 பேர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வான்படையினர் தெரிவித்துள்ளனர். அவர்களில் 14 வயதுக்கு உட்பட்ட மகளிர் காற்பந்தாட்ட அணியின் உறுப்பினர்களும் உள்ளடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வானூர்தி பிற்பகல் 1.30 அளவில் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் மீட்பு குழுவொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை காத்மண்டுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களை ஏற்றிச் சென்ற வானுர்தியிலேயே தற்போது குறித்த 42 இலங்கையர்களும் அழைத்துவரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ராஜாங்க செயலாளர் இலங்கைக்கு விஜயம்-
அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி எதிர்வரும் மே மாதம் இரண்டாம் திகதி இலங்கை வரவுள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக அவர் இலங்கை வரவுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை வரும் அவர், ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட உயர்மட்ட தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளார். அத்துடன் சர்வகட்சித் தலைவர்களையும், பொது அமைப்பு பிரமுகர்களையும் சந்திக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, ஜோன் கெர்ரியின் இலங்கைக்கான முதலாவது விஜயம் என்பதுடன், அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஒருவர் 11 வருடங்களுக்கு பின் இலங்கை வருவது இதுவே முதல்முறையாகும்.
வெள்ளை வேன் விடயமாக, மூவர் தொடர்பில் இரகசிய அறிக்கை-
கடந்த அரசாங்கத்தின் காலக்கட்டத்தில் ஊடகவியலாளர்கள், அரசியல் வாதிகள், சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரை கடத்திச்சென்று காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் வெள்ளைவேன் நடவடிக்கைகளில் பாதுகாப்பு பிரிவைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் மூவர் தொடர்புபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் தொடர்பிலான இரகசிய அறிக்கைகள் இரண்டு, அடுத்தவாரம் நடைபெறவிருக்கின்ற பாதுகாப்பு சபையில் முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி, பிரதமர், முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் செயலர் மற்றும் பாதுப்பு படைகளின் முக்கியஸ்தர்கள் இந்த பாதுகாப்பு சபையில் பங்கேற்பர். வெள்ளைவான் நடவடிக்கை தொடர்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு படைகளின் முக்கியஸ்தர்கள் மூவரில் இருவர் ஓய்வு பெற்றுவிட்டதாகவும் அவர்கள் தொடர்பிலும் அவர்களின் செயற்பாடுகள் குறித்தும் தனியான இரகசிய அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தற்போது சேவையில் இருக்கின்ற மேஜர் தரத்தைச்சேர்ந்த அதிகாரி தொடர்பில் தனியான அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இரகசிய அறிக்கைகள் இரண்டும் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளிக்கப்படவிருப்பதாக மக்கள் சமாதானம் அமைச்சு அறிவித்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு-
முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான வழக்கு ஜூலை மாதம் 21ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சொத்துக்கள் விவரங்களை வெளியிடாமைக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்ட முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இந்த வழக்கை தொடர்ந்து முன்கொண்டு செல்லமுடியுமா என்பது தொடர்பில் பிரதிவாதி தரப்பினால் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் கடிதம் தங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்று இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தது. இதனையடுத்தே, மேற்படி வழக்கை ஜூலை மாதம் 21ஆம் திகதிக்கு பிரதான நீதவான் ஒத்திவைத்தார்.
பசில் ராஜபக்ச எம்.பி.க்கு விடுமுறை, நால்வர் இடைநிறுத்தம்-
நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ, இன்றிலிருந்து மூன்று மாதங்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்காமல் இருப்பதற்கு நாடாளுமன்றம் விடுமுறை வழங்கியுள்ளது. இதேவேளை ஊவா மாகாணசபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நான்கு உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த, மாகாணசபை செயலாளருக்கு அறிவித்துள்ளார். ஊவா மாகாணசபையின் ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிடம் இருந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாற்றுவதற்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் நால்வரும் விலக்கப்பட்டுள்ளனர். அநுர விதானகமகே, வடிவேல் சுரேஸ், கித்சிறி சேனாரத் அத்தநாயக்க மற்றும் ஹரேந்திர தர்மதாஸ ஆகியோரே இந்த நால்வரும் என்பது குறிப்பிடக்கூடியது.
இலங்கையின் 2ஆவது உதவிக்குழு நேபாளம் புறப்பட்டது-
பாரிய நில அதிர்வினால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு உதவி வழங்கும் பொருட்டு இரண்டாவது குழு இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளது. விமானப்படை மற்றும் கடற்படை வீரர்கள் அடங்கிய 156 பேரைக் கொண்ட குழுவே நேற்று திங்கட்கிழமை நேபாளத்தை நோக்கி சென்றுள்ளது. பாதிப்;புக்குள்ளான நேபாள நாட்டுக்கு உதவி வழங்குவதற்காக இராணுவ வைத்திய படையணி, பொறியியல் ரெஜிமெண்ட் ஆகியன நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நேபாளத்திற்கு சென்றடைந்தது. அக்குழுவில் 4 விசேட வைத்திய நிபுணர்களும் 40 இராணுவத்தினரும் உள்ளடங்குகின்றனர். முதலாவது குழுவானது மேஜர் ஜெனரல் மைத்திரி டயஸ்- தலைமையிலும் இரண்டாம் குழுவிற்கு பிரிகேடியரொருவரும் கட்டளைத் தளபதியாக செயற்படடுகின்றமை குறிப்பிடத்தக்கது.