கொழும்பு தலைமன்னார் ரயில் சேவை 25 வருடங்களின் பின் ஆரம்பம்-

trainகொழும்பிலிருந்து தலைமன்னாருக்கான ரயில் சேவை 25 வருடங்களின் பின்னர் இன்று ஆரம்பமாகவுள்ளது 25 வருடங்களின் பின்னர் கொழும்பிலிருந்து தலைமன்னாருக்கான ரயில் சேவை இன்று ஆரம்பமாகவுள்ளது. இதற்கமைய முதலாவது ரயில் இன்றிரவு 7.40 க்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து தலைமன்னாருக்கான பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. கடந்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமன்னார் வரையான ரயில் பாதையை திறந்து வைத்திருந்திருந்தார். இதேவேளை, களனிவெளி ரயில் மார்க்கத்தின் ஹோமாகம ரயில் நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை வரை இன்று காலை 7.20 க்கு புதிய ரயில் ஒன்று சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

ரோஹித்த போகொல்லாகம வெளிநாடு செல்வதற்குத் தடை-

rohithaமுன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம வெளிநாடுகளுக்கு செல்ல கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இன்று தடை விதித்துள்ளார். இலஞ்ச ஊழல் விசாணை ஆணைக்குழு தாக்கல் செய்திருந்த மனுவொன்றை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வர்த்தக கண்காட்சி மற்றும் உற்பத்தியாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொள்ளவதற்காக திறைசேரியின் சுற்று நிருபத்திற்கு மாறாக 376,191 ரூபா மற்றும் 1,170,444 ரூபாவை பெற்றுக்கொள்வதற்கு முன்னாள் முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் லக்ஸ்மன் ஆர் வடகலவை தூண்டியதாக முன்னாள் அமைச்சர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவை விடுவிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் விமானப் படைத் தளபதியிடம் விசாரணை-

navyமுன்னாள் விமானப் படைத் தளபதி எயார் சீஃப் மார்ஷல் டொனால்ட் பெரேராவிடம் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் தற்போது வாக்குமூலம் பதிவு செய்யப்படுகிறது. இலங்கை விமானப் படைக்கு 2006ஆம் ஆண்டு நான்கு மிக் ரக விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்ட சந்தர்ப்பத்திலும் மேலும் சில விமானங்களை பழுதுபார்த்த சந்தர்ப்பத்திலும் ஏற்பட்ட நட்டம் தொடர்பாக முன்னாள் விமானப் படைத் தளபதியிடம் விசாரணை நடத்தப்படுகிறது. குறித்த கொடுக்கல் வாங்கல்களின்போது 14 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் மேற்பட்ட நட்டம் ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் தொடர்பில் 7ஆம் திகதி அறிவிப்பு-

anuraநாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக யார் செயற்படுவார் என்பது தொடர்பில் சபாநாயகர் ஷமல் ராஜபக்ஸ தமது தீர்மானத்தை எதிர்வரும் 7ஆம் திகதி அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஸன யாப்பா இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் எந்த கட்சி பெரும்பான்மை பலத்தை கொண்டுள்ளது என்பது குறித்த சபாநாயகர் தீர்மானிக்க வேண்டும். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு முக்கிய கட்சிகளை தன்வசம் கொண்டுள்ளது. அடுத்ததாக ஐக்கிய தேசிய கட்சி காணப்படுகின்றது. அடுத்ததாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு காணப்படுகின்றது. அதற்கு அடுத்தே ஜேவிபி காணப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வட மாகாண அமைச்சு செயலாளர்களுக்கு இடமாற்றம்-

npc2_CIவட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ். பளிஹக்காரவினால் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கமைய, வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக இதுவரை காலமும் கடமையாற்றிவந்த இ.ரவீந்திரன் மாகாண கல்வி அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கல்வி அமைச்சின் செயலாளராகவிருந்த எஸ்.சத்தியசீலன், கடற்றொழில் அமைச்சின் செயலராக நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் இ.வரதீஸ்வரனுக்கு உள்ளுராட்சி அமைச்சுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சி அமைச்சின் செயலராக கடமையாற்றிய சி.திருவாகரன் சுகாதார அமைச்சின் செயலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, வடமாகாண மனித வள அபிவிருத்தி பயிற்சி பிரதி பிரதம செயலராக அ.சிவபாதசுதந்தரம் நியமிக்கப்படவுள்ளார்.

சிறுவர் இல்லத்திலிருந்த சிறுமியை காணவில்லை-

police ...யாழ்ப்பாணம், ஆனைப்பந்தியில் அமைந்துள்ள தியாகி அறக்கொடை சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமியை காணவில்லையென இல்ல உத்தியோகத்தரால், யாழ் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. நிஷாந்தன் திலக்கி (வயது 11) என்ற சிறுமியே இவ்வாறு காணாமற்போயுள்ளார். நேற்று மதியம் மலசல கூடத்துக்குச் சென்ற சிறுமியே இவ்வாறு காணாமல்போயுள்ளார் என்று பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறிய யாழ்ப்பாணம் பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கணவன், மனைவி இருவருக்கும் முதியோர் கொடுப்பனவு-

old ageசமூக சேவைகள் அமைச்சின் முதியோர் செயலகத்தால் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகையை கணவன், மனைவி இருவரும் பெறுவதற்கான புதிய சுற்றுநிரூபத்தை அமைச்சின் செயலாளர் டீ.கே.றேணுகா ஹேரத் மாவட்டச் செயலகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். 70 வயதை கடந்த முதியவர்களுக்கு மாதாந்தம் 2,000 ரூபாய் வழங்கும் திட்டம், சமூக சேவை அமைச்சால் முன்னெடுக்கப்பட்டது. 2012ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தில் கணவன், மனைவி இருவரும் 70 வயதைக் கடந்திருந்தாலும் ஒருவருக்கு மட்டும் உதவித் தொகை வழங்கப்பட்டது. ஆனால், தற்போது அந்தத் திட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு 70 வயதைக் கடந்த கணவன், மனைவி இருவருக்கும் அந்த உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதாக அந்த சுற்று நிருபத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

துமிந்த சில்வா எம்.பி பிணையில் விடுதலை-

dumindaஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, கடும் நிபந்தனைகளுடன் கூடிய பிணையில், இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகரான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் படுகொலை தொடர்பான குற்றப்பத்திரிகை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த கொலை சம்பவத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 13 பேர் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர். குறித்த 13 பேரும் கடும் நிபந்தனை பிணையில் விடுவிக்கப்பட்டனர். அத்துடன் துமிந்த சில்வாவின் கடவுச்சீட்டையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, அவருக்கு ஏற்கெனவே வழங்கியிருந்த பிணையும் அதிகரித்தார். இதன்படி தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான பிணையாளர்கள் இருவரை முன்னிலைப்படுத்துமாறு அதிகரித்த பிணையில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் மாதம் ஒருமுறை பொலிஸில் ஆஜராகுமாறும் நீதிபதியினால் பணிக்கப்பட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்கவிடம் விசாரணை-

lalithமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் லலித் வீரதுங்கவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்திலிருந்து காணாமல் போனதாக கூறப்படும் வாகனங்கள் தொடர்பிலேயே விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் தெரியவருகின்றது.

19க்கு ஆதரவாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலையீட்டு மனு-

sumandran MPஅரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால், நேற்று உயர்நீதிமன்றத்தில் தலையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த 19ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக, ஏற்கெனவே பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே, சுமந்திரன் எம்.பி.யினால் மேற்படி திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த சுமந்திரன் எம்.பி, ‘மேற்படி அரசியலமைப்பு திருத்தத்தை சட்டமாக்குவதற்கு சர்வஜன வாக்கெடுப்பொன்று தேவையில்லை என்பது தொடர்பில் தான் நீதிமன்றில் ஆஜராகி வாதாடவுள்ளதாக’ கூறினார். அரசியமைப்பின் 19ஆவது திருத்தம் தொடர்பான விவாதம் எதிர்வரும் 9ஆம் 10ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. சிறப்பு நிபுணர் பப்லோ வடக்கு முதல்வர் சந்திப்பு-

un repஇலங்கையின் முன்னேற்றங்களை ஆராயும் பொருட்டு கொழும்பு வந்துள்ள ஐ.நா.வின் சிறப்பு நிபுணர் பப்லோ டி கிரெய்ப் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகள் குறித்து ஆராய்ந்தார். இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் சென்றிருந்த அவர், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது வடக்கில் நிலவும் பிரச்சினைகள், நல்லிணக்க முயற்சிகள் குறித்து ஐ.நா. அதிகாரி முதலமைச்சரிடம் விரிவாகக் கேட்டறிந்து கொண்டார். இதேவேளை மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களையும் அவர் இன்று சந்திக்கவுள்ளார். என தெரிவிக்கப்படுகின்றது. உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடுகள் மற்றும் மீள உருவாகாமல் உத்தரவாதப்படுத்தலுக்கான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு வருகைதந்தார். அவர் அரச மற்றும் எதிர்க்கட்சிப் பிரமுகர்களையும் சந்தித்து வருகின்றார்.

காரைநகரில் புதிய பொலிஸ் நிலையம் அமைக்க அனுமதி-

police ...யாழ். காரைநகரில் புதிய பொலிஸ் நிலையம் அமைக்கப்படவுள்ளதாக வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் காரைநகருக்கு என தனியான பொலிஸ் நிலையம் இதுவரை இல்லை. காரைநகர் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்டே உள்ளது. ஊர்காவற்துறையில் இருந்து காரைநகருக்கு கடல் பாதை வழியாகவே பொலிஸார் செல்ல வேண்டும். இதனால் பொலிஸார் உரிய நேரத்துக்கு செல்ல முடியாதுள்ளது. காரைநகருக்கு என தனியான பொலிஸ் நிலையம் ஒன்றை அமைப்பதற்கு பொலிஸ்மா அதிபர் அனுமதி அளித்துள்ளார். பொலிஸ் நிலையம் அமைப்பதற்கு ஏதுவான காணியை காரைநகர் பிரதேசத்தில் பார்வையிட பொலிஸ் அதிகாரிகளைக் கொண்ட குழு காரைநகர் செல்லவுள்ளது. பொலிஸ் நிலையம் அமைப்பதற்கு தகுதியான காணி கிடைத்ததும் விரைவில் கட்டடப்பணி முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.