ரஷ்யாவில் 132 பேருடன் பயணித்த கப்பல் விபத்து-
ரஷ்யாவின் கம்சட்க்கா தீபகற்ப பகுதியில் உள்ள ஓகோட்ஸ்க் கடல் பகுதியில் 132 பேருடன் பயணித்துக் கொண்டிருந்த கப்பல் மூழ்கி, விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் குறைந்தபட்சம் 54 பேர் பலியாகியிருக்கலாம் என்று மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். தற்போது வரை 63 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் ஏனைய 26 பேரின் நிலை தொடர்பில் எதுவும் தெரியவில்லை என்றும் கம்சட்க்கா பகுதியின் மீட்பு பணிக்குழு தெரிவித்துள்ளது. கப்பல் குழுவினரை மீட்கும் பணியில் 25 இற்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. படகு மூழ்கியதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. எனினும் கடலில் பனிக்கட்டிகள் நகரந்தது காரணமாக இருக்கலாம் என்று செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. படகில் பயணம் செய்த குழுவினர் ரஷ்யா, லதிவா, உக்ரைன், மியான்மர் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ. நா சிறப்பு அறிக்கையாளர் த.தே.கூ சந்திப்பு –
இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளின் சிறப்பு நிபுணர் பப்லோ டி கிரெய்ப் இன்றையதினம்தமிழ் தேசிய கூட்டமைப்பினரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இன்றுகாலை நடைபெற்றுள்ளது. இதேவேளை, யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பப்லோ டீ க்ரீப் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்துள்ளார். அவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை ஒன்று நேற்று இடம்பெற்றிருந்தது. இதன்போது பேசப்பட்ட விடயங்கள் குறித்து உத்தியோகபூர்வமாக ஊடகங்களுக்கு அறிவிக்கப்படவில்லை. ஆறு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக பப்லோ டி க்ரீப் இலங்கை வந்துள்ளார். அவர் அரசாங்க மற்றும் எதிர்கட்சிகளின் பல்வேறு தரப்பினரை சந்தித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
யேமனில் இலங்கையர் சிக்கியிருந்தால் அறிவிக்குமாறு கோரிக்கை-
யேமனில் சிக்கியுள்ள இலங்கையர் தொடர்பிலான தகவல்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு திரட்டுகின்றது. யேமனில் இலங்கையர் யாராவது சிக்கியிருக்கின்றார்கள் என்றால் அவர் தொடர்பிலான விபரங்களை 0112 323 015 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு அமைச்சு கேட்டுள்ளது. யேமனில் இடம்பெறுகின்ற கடும் மோதல்கள் காரணமாக அந்நாட்டில் தொழில்புரிகின்ற இலங்கையர் சுமார் 120பேர் சிக்கியுள்ளதாக தெரியவருகின்றது. அவர்களை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையை இலங்கை வெளிவிவகார அமைச்சு முன்னெடுத்துள்ளது. இதன்படி யேமனில் உள்ள இலங்கையர்களை மீட்க இந்தியாவின் உதவி பெறப்பட்டுள்ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார். ஏற்கனவே யேமனில் 400க்கும் அதிகமான இந்தியர்கள் சிக்கியுள்ள நிலையில் அவர்களை மீட்பதற்கு கப்பல்கள் மற்றும் விமானங்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் உதவியுடன் அங்குள்ள இலங்கையர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உதயசிறிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு அளித்தார்-
கடந்த பெப்ரவரி 14ஆம் திகதி, சிகிரியாவிலுள்ள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு, தம்புள்ளை நீதிமன்றத்தால் 2 வருடம் சிறைத்தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் அனுராதபுரம் சிறையில் வாடும் உதயசிறிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கும் பத்திரத்தில் நேற்றிரவு கையெழுத்திட்டுள்ளார். ஏழை யுவதியான உதயசிறி, அனுராதபுரம் சிறையிலடைக்கப்பட்டு இப்பொழுது ஒன்றரை மாதம் கழிந்து விட்டது. சிகிரியா குன்றிலுள்ள சுவரோவியத்தில் தனது பெயரை எழுதியமையினால் 2வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள உதயசிறிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இன்று பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஷ அறிவித்துள்ளார். 2வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அனுராதபுரம் சிறையில் வாடும் உதயசிறிக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் பல அமைப்புக்கள், மற்றும் அரசியல்வாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் இன மத பேதமில்லாது வேண்டுகோள் விடுத்திருந்தனர் இந்நிலையில் இவருக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான பத்திரத்தில் ஜனாதிபதி புதனன்று இரவு கையெழுத்திட்டுள்ளார்.
ரஷ்ய தூதரக சேவையாளரது மரணத்தில் சந்தேகம்-
கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் ரஷ்யாவில் உயிரிழந்த இலங்கையின் ரஸ்யாவுக்கான தூதரகத்தின் சேவையாளர் நோயல் ரணவீரவின் சடலம் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. அத்தனகலவில் புதைக்கப்பட்டிருந்த அவரின் சடலம் நீதிமன்ற உத்தரவின் பேரில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. நோயல் ரணவீர 2002, ஜுலை மாதம், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மருமகனான உதயங்க வீரதுங்கவினால் யுக்ரெயினில் விருந்தகம் ஒன்றில் வேலைக்கு அமர்த்தப்பட்டார். பின்னர் உதயங்க வீரதுங்க ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவரான பின், தூதரக பணியாளராக நோயல் இணைத்துக் கொள்ளப்பட்டார். உதயங்கவும், நோயெலும் கூட்டுவங்கி கணக்கினையும் பேணியதாக கூறப்படுகிறது. எனினும் கடந்த வருடம் நோயல் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது இறுதிசடங்கில் உதயங்க பங்கேற்றிருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரின் மரணவிசாரணை அறிக்கையினை உதயங்கவிடம் கோரியபோது, அவை ரஷ்யாவிலேயே மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து நோயல் ரணவீரவின் உறவினர்கள் வெளிவிவகார அமைச்சில் முறையிட்டுள்ளனர். உதயங்க வீரதுங்கமீது, யுக்ரெயினில் செயற்பட்ட ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை விநியோகித்ததாக குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
சிறுமி துஸ்பிரயோகம் தொடர்பில் பாதிரியாருக்கு விளக்கமறியல்-
வவுனியாவில் தாய், தந்தையை இழந்த சிறுமி ஒருவரை கடந்த 5 வருடங்களாக துஷ்பிரயோகம் செய்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட கிறிஸ்தவ பாதிரியார் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 9ஆம் திகதிவரை நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வவுனியா வெளிக்குளத்திலுள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் சேர்க்கப்பட்ட சிறுமி ஒருவரை அந்தச் சிறுவர் இல்ல பாதிரியார் தனது செட்டிகுளம், துடரிகுளம் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 5 வருடங்களாக துஷ்பிரயோகம் செய்து வந்தார் என கடந்த ஞாயிற்றுக்கிழமை பாதிக்கப்பட்ட யுவதியால் (தற்போது வயது 20) முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பாதிரியார் நேற்று முன்தினம் இரவு கைதுசெய்யப்பட்டு நேற்று வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அதன்படி அவரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திஸ்ஸ கரலியத்த பிரதி அமைச்சர் பதவியை இராஜினாமா-
புத்தசாசனம் மற்றும் பொது நிர்வாக பிரதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாராளுமன்ற செயலாளர் ஆகியோருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அரசாங்கத்தின் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டபோது, திஸ்ஸ கரலியத்தவிற்கு பிரதியமைச்சர் பதவி வழங்கப்பட்டிருந்தது. அரசியல் பழிவாங்கல்களை நிறுத்தாமை உள்ளிட்ட சில விடயங்கள் காரணமாக, தாம் பிரதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்ததாக திஸ்ஸ கரலியத்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கடதாசி ஆலை ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது-
நிலுவை சம்பளத்தை வழங்குமாறு கோரி, மட்டக்களப்பு வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள் முன்னெடுத்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. 5 மாத நிலுவை சம்பளத்தை வழங்க கைத்தொழில் அமைச்சு இணக்கம் தெரிவித்ததையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டதாக ஆலையின் பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. நிலுவை சம்பள விவகாரம் தொடர்பில் கைத்தொழில் அமைச்சின் செயலருக்கும், ஆலையின் ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் கொழும்பில் நேற்றுமாலை பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. அமைச்சரவை அனுமதியுடன் முதல் 3 மாதங்;களுக்குரிய நிலுவை சம்பளத்திற்கான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலர் இதன்போது கூறியுள்ளார். ஏனைய 2 மாதங்களுக்கான நிலுவை சம்பளத்தை அமைச்சரவை அனுமதியுடன் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக கொழும்பில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டதாக பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் நாகமணி பேரின்பராஜா தெரிவித்துள்ளார்.
தேசிய நிறைவேற்று சபை கூடியது-
தேசிய நிறைவேற்று சபை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் தற்போது கூடியுள்ளது. இந்த கூட்டத்துக்கு பின்னர், அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் உள்ளிட்ட முக்கியமான தீர்மானங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. தேசிய நிறைவேற்று சபை, இரு வாரங்களுக்கு பின்னரே கூடியிருக்கின்றது. இந்த தேசிய நிறைவேற்று சபையில் தொடர்ந்து அங்கம் வகிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் உத்தியோகபூர்வமான முடிவுகள் எட்டப்படும் என மக்கள் விடுதலை முன்னணி அறிவித்திருந்த நிலையிலேயே நிறைவேற்று சபை கூடியுள்ளது.
பாதை அபிவிருத்தி புதிய முறைப்படி முன்னெடுப்பு-
பாதை அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பழைய முறையிலேயே முன்னெடுக்க அனுமதிக்க முடியாது என்று பெருந்தெருக்கள் முதலீட்டு அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார். முன்னைய அரசாங்கம் தங்களுக்கான தரகு பணங்களுக்காக மோசடியான முறையில் பல வேலைத்திட்டங்களை அமுலாக்கியிருந்தது. இவை உண்மையில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் இல்லை. அவ்வாறே மோசடியான முறையில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை இனியும் முன்னெடுக்க முடியாது என்று அமைச்சர் கபீர் ஹசீம் கூறியுள்ளார்.
இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றோர் சட்ட ரீதியாக விலக முடியும்-
இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள படைத்தரப்பினர் சட்டரீதியாக இராணுவத்தை விட்டு விலகுவதற்கான பொது மன்னிப்பு காலம் இன்றையதினம் தொடக்கம் எதிர்வரும் 16ம் திகதிவரை அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காலத்தில் படைவீரர்கள் தங்களது படைப் பிரிவு அலுவலகத்திற்குச் சென்று சட்ட ரீதியாக இராணுவத்தில் இருந்து விலகிச் செல்ல முடியும் என இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பரிந்துரைக்கு அமைய இத்திட்டம் செயற்படுத்தப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்முனையில் 6ம் திகதி முறைப்பாடுகள் பதிவு-
காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு எதிர்வரும் 6ம் திகதி கல்முனையில் தனது முறைப்பாடுகளைப் பதிவு செய்யவுள்ளது. கல்முனை பிரதேச செயலக தமிழ் பிரிவில் நடக்கும் இவ் விசாரணையின் போது காணாமல் போனோரின் உறவினர்கள் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளனர். இதற்கு முதல் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை உட்பட பல மாவட்டங்களில் காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழு விசாரணைகளை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியின் மட்டக்களப்பிற்கான முதல் விஜயம்-
முதன் முறையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை மறுதினம் சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்கிறார். மட்டக்களப்பு போதகர் ஒன்றியம் ஏற்பாட்டில் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பாஸ்கா பண்டிகையில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளுவதற்கே ஜனாதிபதி மைத்திரிபால மட்டக்களப்புக்கு விஜயம் செய்கின்றார். போதகர் ஒன்றியத்தின் தலைவர் குகன் இராசதுரை தலைமையில் நடைபெறும் இப்பண்டிகை விழாவில் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு, இருவர் காயம்-
நால்வர் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று இரவு 10மணியளவில் தலைமன்னார் பொலிஸ் நிலையப் பிரிவுக்குட்பட்ட நடுக்குடாவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. தலைமன்னார் மேற்கைச் சேர்ந்த ஒரே குடும்ப உறுப்பனர் நால்வர், வெளிநாட்டிலிருந்து வந்து மன்னாரில் தங்கியிருந்த தெரிந்தவர்களின் வீட்டுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது அவர்கள் பயணித்த முச்சக்கரவண்டி வீதியில் உள்ள பள்ளத்தில் ஒன்றைத் தவிர்ப்பதற்காக திடீரெனத் திருப்பியபோதே அது தடம்புரண்டு மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் நடைபெற்று நீண்டநேரத்துக்கு பின்பே அவ்வழியாகச் சென்ற ஒருவர் இவர்களைக் கண்டு அயலவர்களின் உதவியுடன் வைத்தியசாலையில் சேர்த்துள்ளார் இச்சம்பவத்தில் பிரான்ஸிஸ் பிரான்சிஸ்கா றோசலீன் குரூஸ் (வயது 83) என்ற மூதாட்டி ஸ்தலத்திலேயே உயிரிழந்தார். முச்சக்கரவண்டியை ஓட்டிச்சென்ற சாரதியும் அவரது மனைவியும் காயமடைந்தனர். தெய்வாதீனமாக அவர்களது 7வயதுப் பிள்ளை காயமின்றித் தப்பித்துள்ளது. பிரான்ஸிஸ் ததேயு செல்வம் கூஞ்ஜ் (வயது 34) அவரது மனைவி ததேயு செல்வம் அந்தோனிக்கம் வின்சன்டா வினோதினி (வயது 33) ஆகியோர் காயமடைந்து மன்னார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் வினோதினி மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வட்டு மேற்கு அ.மி.த.க பாடசாலை வருடாந்த விளையாட்டுப் போட்டி-
யாழ். வட்டு மேற்கு வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள வட்டு மேற்கு அ.மி.த.க பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி இடம்பெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருநதினராக வலிமேற்கு பிரதேச சபையின்; தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் கலநது சிறப்பித்தார் இவ் நிகழ்வில் அவர் உரையாற்றுகையில் முழுமையான கல்வி என்பது புத்தக கல்வியுடன் விளையாட்டினையும் இணைத்ததாக அமைகின்றது. இன்று பெரும்பாலான பெற்றோர் புத்தக கல்விக்கே முன்னுரிமை வளங்கிவரும் நிலை உள்ளது. கலவிக்கு வழங்கப்படும் முன்னிலையின் அளவில் விளையாட்டுத் துறைக்கும் முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும் அவ்வாறான நிலையில் மாணவர்களில் பல மாற்றங்கள் ஏற்பட வழி ஏற்படும் இவ் நிலை மாணவர்களை மனதளவில் உறுதியாக்கும் குறிப்பாக விளையாட்டுக்களில் ஏற்படும் வெற்றி மற்றும் தோல்வி நிலைகள் மாணவர்கட்கு மனதளவில் திடநிலையினை உருவாக்க கூடிய ஒன்றாகும். இதற்கும் மேலாக நான் அறிந்தவகையில் சிறிய பாடசாலைகள் பல இன்று விளையாட்டு நிகழ்வுகளுக்கான போதுமான இடமற்ற நிலையில் உள்ளனர். இதனால் மாணவர்களும் பாதிக்கப்படும் நிலை குறிப்பிடக்கூடிய ஒன்றாகவே உள்ளது. இவ்விடயம் தொடர்பில் அரச வளங்களை நம்புவதால் பயன் ஏதும் வருவதற்கான சந்தர்ப்பங்கள் மிக குறைவாகவே உள்ளது. இவ் நிலைகள் தொடர்பில் குறித்த சமூகம் அக்கறை கொண்டவர்களாக இருக்கவேண்டிய நிலை உள்ளது. குறித்த பாடசாலை சமூக ரீதியாக பாடசாலையின் விருத்திக்கான நடவடிக்கையை மேற்கொள்வதே சாலச்சிறந்த ஒன்றாக உள்ளது. சிறிய பாடசாலைகள் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினை உருவாக்குவதில் அக்கறையுடன் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் இதன்வாயிலாக பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொள்ள முடியும். முதல் நிலைக்கல்வியைப் பெற்றுக்கொணட இடத்தில் மாணவர்கள் மிகுந்த அக்கறை உடையவர்களாக காணப்படுவர். இது சாதாரண இயல்பு இவ்நிலையினை சாதகமாக பயன்படுத்தி அதன் வாயிலாக பாடசாலையை முன்னேற்றத்தல் கொண்டு செல்வதற்கு முயற்சிக்கவேண்டும். எனக் குறிப்பிட்டார்.