இலங்கையில் பிரிவினைகள் வெற்றிகொள்ளப்படவில்லை-அமெரிக்கா-

tom malinowskyயுத்தத்தின் பின்னர் இலங்கை அரசாங்கம் தோல்வி கண்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழில் திணைக்களத்துக்கான உதவி செயலாளர் டொம் மாலினோஸ்கி இதனைக் கூறியுள்ளார். 30 வருடங்களாக இலங்கையில் இடம்பெற்று வந்த யுத்தம் கடந்த 2009ம் ஆண்டு நிறைவுக்கு வந்தது. இதன்பின்னர் நாட்டில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, நாட்டில் ஜனநாயகத்தையும், மீளமைப்பையும் உறுதிபடுத்தி இருக்க முடியும். ஆனால் இலங்கையின் முன்னைய அரசாங்கம் அவ்வாறு செய்யவில்லை. கடந்த 150 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்கா பெற்ற அனுபவத்தை போன்றே இலங்கையரசு 5 வருடங்களுக்கு முன்னர் பெற்றிருந்தது. எந்த ஒரு நாட்டிலும் சிவில் யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டிருக்கவில்லை. ஆனால் இலங்கையில் யுத்தத்தில் வெற்றி பெற்றிருந்தாலும், பிரிவினைகள் வெற்றி கொள்ளப்படவில்லை. கடந்த 5 வருடங்களாக இலங்கைக்கும் சர்வதேசத்துக்கும் இடையில் பதட்டமான நிலைடையே தொடர்ந்து நிலவியது. ஆனால் தற்போது இலங்கையில் புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், சுமுக நிலை உருவாகியுள்ளது என டொம் மாலினோஸ்கி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடலுணவுப் பொருட்களின் இறக்குமதி தடை மீளாய்வு-

euroepean unionஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கடலுணவுத் தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான ஐரோப்பிய ஒன்றிய முகாமைப் பணிப்பாளர் ஊகோ எஸ்டுடோ இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவர் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனைக் கூறியுள்ளார். சர்வதேச சட்டத்திட்டங்களை பின்பற்றாத காரணத்தினால் முந்திய ஆட்சியின்போது இலங்கையில் இருந்து கடலுணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்திருந்தது. எனினும் தற்போது புதிய அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழிகளின் அடிப்படையில், இந்த தடைகுறித்து எதிர்வரும் மேமாதம் மீளாய்வு செய்யவிருப்பதாக அவர் கூறியுள்ளார். அதேவேளை இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தம் தொடர்பான விசாரணைகள் முக்கியமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணை அறிக்கையை ஆறு மாதங்களுக்கு பிற்போடுவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆதரவு வழங்கியிருந்தன. இலங்கையில் உள்நாட்டு பொறிமுறை ஒன்றை அமைத்து, யுத்தக்குற்றங்கள் குறித்து விசாரணை செய்யவும், பொறுப்புடைமையை நிறைவேற்றி நியாயம் வழங்கவும் இந்த கால அவகாசம் வழங்கப்பட்டமையை முக்கியமானதாக கருதுகிறோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

மன்னார் மாவட்ட நிலங்களை கையளிப்பது தொடர்பில் கலந்துரையாடல்-

maiththiriமன்னார் மாவட்டத்திலுள்ள நிலங்களை மீண்டும் மக்களுக்கு கையளிப்பது தொடர்பிலும் மக்களை மீளக்குடியேற்றுவது தொடர்பிலும் விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றது. நிலங்கள் அடையாளம் காண்பதை முக்கிய இலக்காக கொண்டு, ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுஇந்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. மாவட்ட செயலகங்களுக்கு கீழ் உள்ள நிலங்களை இந்த நடவடிக்கைக்காக பயன்படுத்துமாறும் ஜனாதிபதி, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். நிலங்களை பகிர்ந்தளிக்கும் போது வளங்களை பாதுகாப்பது மற்றும் பராமரிப்பது தொடர்பில் அதிகம் கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார். சுமார் 1734 குடும்பங்கள் மன்னார் மாவட்டத்தில் நிலம் தொடர்பில் கோரிக்கை விடுத்திருந்ததுடன் அவற்றில் 902 குடும்பங்கள் நிலங்களை பெறுவதற்கு உரித்துடையனவாகியுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

கிளிநொச்சி வாகன விபத்தில் ஒருவர் பலி-

accidentகிளிநொச்சி பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியில் முரசுமோட்டை பகுதியில் கெப் வண்டி மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். முரசுமோட்டை சிவன் கோவில் பகுதியில் நடந்துச் சென்றவர் மீது இன்று அதிகாலை கெப் வண்டி மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்து இடம்பெற்றதன் பின்னர் கெப் வண்டி பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இயக்கச்சி பகுதியை சேர்ந்த 85 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் நீதவான் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. விபத்துடன் தொடர்புடைய கெப் வண்டியை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன், கிளிநொச்சி தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாடசாலை வேன் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக நடவடிக்கை-

school vanபாடசாலை சேவையிலீடுபடும் வேன்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றமை குறித்து முறைப்பாடுகள் கிடைத்து வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிடுகின்றது. இத்தகைய செயல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உள்நாட்டு போக்குவரத்து அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் நடாஷா பாலேந்திரன் தெரிவித்துள்ளார். பொலிஸ் அறிக்கையில்லாமல் பாடசாலை சேவையிலீடுபடும் வேன்களுக்கு சாரதிகளை இணைத்துக்கொள்வதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கூறியுள்ளது. சிறுவர்களுக்கு நேருகின்ற துஷ்பிரயோகங்களை தடுப்பதற்காக, பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சாரதிகளை இணைத்து வேலைத்திட்டமொன்றை தயாரிப்பதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். பெண் பராமரிப்பாளர் ஒருவருடன் வேன்களில் சிறுவர்களை அழைத்துச்செல்ல நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து அதிகார சபைக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிறைகளில் 1000ற்கும் அதிகமான மரணதண்டனை கைதிகள்-

jailமரண தண்டனை விதிக்கப்பட்ட 1050 கைதிகள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கு இலக்கான 9,700 கைதிகள் சிறைச்சாலையில் காணப்படுவதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ரோஹண புஷ்பகுமார குறிப்பிடுகின்றார். 34வீதமான கைதிகள் போதைப்பொருள் குற்றச்சாட்டிற்கு இலக்கானவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கு இலக்கான சந்தேகநபர்கள் 22 வீதமானோரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார். இதன் காரணமாக சிறைச்சாலைகளில் நெருக்கடி தோன்றியுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளவத்தையில் இந்திய தம்பதியினரின் சடலங்கள் மீட்பு-

deathகொழும்பு, வெள்ளவத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து இந்திய தம்பதியினரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கிடமான முறையில் உயரிழந்த இவர்களின் சடலங்களை கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கண்டெடுத்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். 36 மற்றும் 37 வயதுடைய ஆண்,பெண்ணின் சடலங்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை இந்த இருவரின் மரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விருவரினதும் சடலங்கள், வெள்ளவத்தை, 40ஆவது ஒழுங்கையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அறையிலிருந்து நேற்றரவு மீட்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மானிப்பாயில் கைக்குண்டுகள் மீட்பு-

granadeயாழ். மானிப்பாய் பகுதியில் வெற்றுக்காணியில் இருந்து எஸ்.எஸ். ஈ 87 ரக இரண்டு கைக்குண்டுகள் மானிப்பாய் பொலிஸாரினால் மீட்கப்பட்டு, இராணுவத்தினரால் செயலிழக்க செய்யப்பட்டுள்ளன. மானிப்பாய் கட்டுடை பகுதியில் நேற்று வியாழக்கிழமை குறித்த கைக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதே இடத்தினைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது தோட்டக்காணிக்கு பக்கத்தில் உள்ள வெற்றுக்காணிக்குள் சென்றபோது, அங்கு இரண்டு கைக்குண்டுகள் இருப்பதை கண்டு, மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பிரகாரம், நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக நேற்று இரவு இராணுவத்தினர் குறித்த கைக்குண்டினை செயழிலக்க செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

யேமனிலிருந்து மூன்று இலங்கையர்கள் அழைத்துவரப்பட்டனர்-

yemen sri lankanயேமனில் இடம்பெறும் மோதலால் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் மூவர் பாதுகாப்பாக அழைத்துவரப்பட்டுள்ளனர். இந்தோனேஷிய படகினால் குறித்த இலங்கையர்கள் அழைத்துவரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மேலும் இலங்கையர்கள் ஐவரை பாதுகாப்பாக அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.