தலாய் லாமாவுக்கு அனுமதி மறுப்பு, சீனா வரவேற்பு-
திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவிற்கு இலங்கை அழைப்பு விடுக்காமையானது, சீனாவிற்கு மதிப்பளித்துள்ளமையை எடுத்துக் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் அரசாங்க பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி த ரொய்டர்ஸ் இணைத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. தலாய்லாமா இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக முன்னர் தகவல் வெளியாகி இருந்தன. எனினும் இந்த தகவலை இலங்கை அரசாங்கம் நிரகரித்திருந்தது. இதன் மூலம் ஒரே சீனா என்ற கொள்கையை இலங்கை தொடர்ந்தும் பின்பற்றுகின்றமை உறுதியாகி இருப்பதாக சீனாவின் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இனவாத – மதவாத தண்டனை சட்டத்தை வரவேற்கிறேன்-மனோ-
இனவாதம் எது, மதவாதம் எது, இனவுரிமை எது, மதவுரிமை எது என்பன பற்றி இந்நாட்டு அரசியல், மத தலைவர்கள் குறிப்பாக பெரும்பான்மை தரப்பை சேர்ந்தவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். தட்டிபறிக்கப்படும் நமது உரிமைகளுக்காக தமிழ் பேசும் மக்கள் குரல் எழுப்புவது, போராடுவது, எழுதுவது இனவாதமல்ல. அடுத்த இனத்தின் உரிமைகளை தட்டிபறிப்பது, வெட்டிக்குறைப்பது தான் இனவாதமாகும். இந்த தெளிவு அரசாங்கத்திலும், எதிர்க்கட்சியிலும் இருக்கும் பெரும்பான்மை கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் இருக்கவேண்டும். இந்த தெளிவுடன்தான் இந்த சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். இந்த சட்டம் நல்லது. ஆனால், இந்த தெளிவு சிலருக்கு இல்லை. ஆகவே இனவாதம், மதவாதம் பேசினாலோ, எழுதினாலோ 2 வருடம் சிறைதண்டனை என குற்றவியல் சட்டக்கோவையில் திருத்தம் கொண்டுவர அமைச்சரவை முடிவு செய்திருப்பதை எச்சரிக்கையுடன் வரவேற்கின்றேன் என தேசிய நிறைவேற்று சபை உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.
கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு கனடா தொடர்ந்தும் உதவி-
இலங்கையின் வடக்கு பகுதியில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதாக கனடா அறிவித்துள்ளது. சர்வதேச நிலக்கண்ணி விழிப்புணர்வு மற்றும் உதவிவழங்கல் தினத்தை முன்னிட்டு கனடாவின் உயர்ஸ்தானிகரம் இந்த அறிக்கையை விடுத்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின், கனடா இலங்கையில் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்கு உதவிவழங்கி வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக 8 லட்சத்து 50 ஆயிரம் டொலர்களை வழங்கவிருப்பதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அரசாங்கத்தின் 35 வேலைத்திட்டங்கள் மீளாய்வு-
முன்னாள் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட 35 வேலைத்திட்டங்கள் மீளாய்வு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத் தகவல்கள் இதனைத் தெரவிக்கின்றன. அவற்றில் 28 வேலைத்திட்டங்கள் சீனாவினால் நிதியிடப்பட்டவை என்று கூறப்படுகிறது. இந்த வேலைத்திட்டங்களின் பெறுமதி, ஊழல் மோசடிகள் மற்றும் முக்கியத்துவம் போன்ற விடயங்கள் குறித்தே மீளாய்வு செய்யப்படும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.