திருமலையில் தமிழ் மொழி புறக்கணிப்பு-

tamilமிழ்மொழி அரச கரும மொழியாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் திருகோணமலை மாவட்ட அரச கரும நிர்வாகத்தினர், திணைக்களங்கள் அதுவிடயத்தில் அசமந்தப் போக்கில் செயற்படுகின்றன. இவ்வாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரனி ஜே. எம்.லாஹிர் குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிழக்கு மாகாணசபை அமர்விலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எமது மாகாண வீதி அபிவிருத்தி காணி அமைச்சர் ஆரியவத்தி கலப்பத்தி சிங்களப் பெண்மணியாவார். சகோதரி தனது அமைச்சு கோவைகளை எமக்கு தமிழிலே அனுப்பி வைக்கிறார். அதற்காக இந்தச் சபையிலே அவரைப் பாராட்டுகின்றேன். இதுதான் நல்லாட்சிக்கான முன்னுதாரணங்கள். ஆனால் திருகோணமலை மாவட்டத்தில் அரசகரும நிருவாகத்தினர், திணைக்களங்கள் தமிழ் மொழி விடயத்தில் அசமந்தப் போக்கிலேயே செயற்படுகின்றன. என்று அவர் குற்றஞ்சாட்டினார். பெரும்பாலான பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு சிங்கள மொழியிலேயே முறைப்பாடுகள் பதியப்படுகின்றன. பயங்கரவாத குற்றத்தடுப்பு குற்ற ஒப்புதல் வாக்குமூலம் கூட சிங்கள மொழில் பதியப்படுவதால் ஒரு நிரபராதிகூட எதிரியாகமாறுகின்ற சூழ்நிலை ஏற்படுகின்றது.கௌரவ முதலமைச்சர் பொலிஸ் திணைக்களத்துடன் சம்பந்தப்பட்டிருப்பதால் இதில் கூடிய கவனம் எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டார். தென்னமரவாடி தொடக்கம் வெருகல்வரை காணிப்பிரச்சினை குவிந்து கிடக்கின்றது. அதற்காக மத்திய காணி அமைச்சர் மாகாண காணி அமைச்சரும் இணைந்து விசேட செயலணியயான்றை உருவாக்கி இதற்கான தீர்வை இந்த அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் உள்வாங்கி நிரந்தரத் தீர்வைப் பெற்றுத்தர முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.