சந்திரிகா தலைமையில் ஒற்றுமைக்கான அலுவலகம்-

chandrikaமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தலைமையில், தேசிய ஒற்றுமைக்கான அலுவலகம் அமைப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டு நல்லிணக்கத்தையும், தீர்வையும் அடைவதற்கான பரிந்துரைகளை இந்தச் செயலணி முன்வைக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஐ.நா.மனித உரிமைகள் அலுவலகத்தில் இலங்கை குறித்த விசாரணை அறிக்கை வெளிவந்ததும் அதனை உள்ளக விசாரணை பொறிமுறை செயற்பாட்டிற்காக நாங்கள் கவனத்தில் கொள்வதற்கு எதிர்பார்க்கின்றோம். உள்ளக செயற்பாட்டை மேற்கொள்ளும் நோக்கில் அரசு ஏற்கனவே பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். வெளிவிவகார அமைச்சில் வியாழக்கிழமை நடைபெற்ற இலங்கை ஐரோப்பிய ஒன்றிய கூட்டு ஆனைக்குழுவின் 19ஆவது அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மூன்று மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற தேர்தலில், 81.5 வீதமான மக்கள் தமது வாக்குக்களைப் பயன்படுத்தியிருந்தனர். இலங்கையின் வரலாற்றில் இது மிகப்பெரிய வாக்களிப்பு வீதமாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தெரிவுசெய்வதில் நாட்டின் அனைத்து சமூகங்களும் ஐக்கியமடைந்தன. ஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்துதல் கருத்து சுதந்திரம், சட்டத்தை ஆட்சிப்படுத்துதல், நல்லாட்சி, மனித உரிமையை பாதுகாத்தல் ஆகிய அபிலாசைகளை அடைந்து கொள்வதற்காக மக்கள் சிறிசேனவிற்கு வாக்களித்தனர். புதிய அரசு பதவியேற்றதிலிருந்து ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துதல்,

தடைசெய்யப்பட்ட இணையதளங்களை மீண்டும் இயங்க வைத்தல், ஊடகவியலாளர்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டமை, வெளிநாடுகளிலுள்ள ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டமை போன்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மீண்டும் தமது செயற்பாடுகளை அச்சமும், சித்திரவதையுமின்றி மேற்கொள்ள முடியும் என்று அவர் அங்கு மேலும் குறிப்பிட்டார். பாதுகாப்பு அமைச்சின் கீழிலிருந்த அரச சார்பற்ற நிறுவனங்களின் செயலகம், தற்போது கொள்கைத்திட்டமிடல் பொருளாதார அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஜனாதிபதி வடக்கிலும் கிழக்கிலும் பதவியிலிருந்த இராணுவ ஆளுநர்களை மாற்றி சிவில் ஆளுநர்களை நியமித்தார். இது சிவில் நிர்வாகத்தைப் பலப்படுத்துவதுடன் இந்த மாகாணங்களின் சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தின் ஈடுபாட்டையும் குறைப்பதற்கு வழிவகுத்துள்ளது. அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் மீளாய்வு செய்யப்பட்டு காணிகள் வழங்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக அதியுயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள ஆயிரம் ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளது. அதில் 425 ஏக்கர் காணி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. முக்கிய விடயமாக ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துகொண்ட மீள்குடியமர்வு நிகழ்வில் தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டமை ஒரு முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார். நாட்டில் சமாதானத்தையும் நம்பிக்கையையும், நல்லிணக்கத்தையும் கட்டியயழுப்பும் நோக்கில், ஜனாதிபதி நல்லிணக்கத்திற்கான விசேட ஜனாதிபதி செயலணியொன்றை உருவாக்கியுள்ளார். இது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையில் செயற்படும். உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டு நல்லிணக்கத்தையும், தீர்வையும் அடைவதற்கான பரிந்துரைகளை ஜனாதிபதி செயலணி முன்வைக்கும். கடந்த அரசு நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்தவில்லை. இந்நிலையில் அதனை உணர்ந்து கொண்டு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். குறிப்பாக ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தில் இலங்கை குறித்த விசாரணை அறிக்கை வெளிவந்ததும் அதனை உள்ளக விசாரணை பொறிமுறை செயற்பாட்டிற்காக கவனத்தில் கொள்வதற்கு எதிர்பார்க்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கை பயங்கரவாதத்தால் பல தசாப்தங்கள் பல கஷ்டங்களை எதிர்கொண்டது. அந்த வகையில் புலிகள் மீதான தடையை தொடர்ந்து நீடிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுத்தமையை வரவேற்கின்றோம் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.