காணாமற்போனோர் குறித்த ஆணைக்குழுவின் அமர்வு-

missingகாணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு இன்று அம்பாறையில் ஆரம்பமாகியுள்ளது. இதற்கமைய அம்பாறையில் இன்றுமுதல் எதிர்வரும் 9ம் திகதிவரை சாட்சி விசாரணைகள் நடைபெறவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ. குணதாச தெரிவித்துள்ளார். 10 பிரதேச செயலக பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் 300 முறைப்பாட்டாளர்களுக்கு இம்முறை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது இன்று மற்றும் நாளை கல்முனை பிரதேச செயலகத்திலும், 08 மற்றும் 09ஆம் திகதிகளில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் சாட்சி விசாரணைகள் இடம்பெறவுள்ளது. இந்த அமர்வுகளின்போது புதிய முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார். முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இடம்பெற்ற ஆணைக்குழுவின் அமர்வுகளில் இதுவரை 2ஆயிரத்து 350க்கும் அதிகமானவர்களிடம் சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. காணாமற்போனோர் தொடர்பில் ஆணைக்குழுவிற்கு இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

எதிர்க்கட்சி தலைவர் பதவி அறிவிக்கப்பட்டால் செயற்படுவோம்-இரா.சம்பந்தன்-

Sampanthan (3)எதிர்க்கட்சி தலைவராக இருப்பதற்கு எமக்கு முறையாக அறிவிக்கப்பட்டால், நாம் உண்மையாக செயற்படுவோம். மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மலையகக் கட்சிகள் எமக்கு பூரண ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளன என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அண்மையில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை அழைத்து கலந்துரையாடியமை பற்றி கூறும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவராக இருந்தாலும், எமது செயற்பாடுகள் அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில் நேர்மையானதாக இருக்கும். கடந்த செவ்வாய்க்கிழமை சபாநாயகர் என்னை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். கட்சித் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தும் வகையில் இது அமைந்திருந்தது. இவ்வேளையில் எதிர்க்கட்சி தலைவர் விவகாரமும் அங்கு பேசப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் சபாநாயகரும் நானும் கலந்துரையாடினோம். எதிர்க்கட்சி தலைவர் பதவி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்படுமானால், அதுகுறித்து ஆச்சரியப்படவோ, அன்றேல் வழங்கப்படாவிட்டால் அதுகுறித்து கவலைப்படவோ போவதில்லை. எவ்வாறெனினும், நாம் உண்மையாக செயற்படுவோம் என்றார். இந்நிலையில், சர்ச்சைக்குரிய எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதற்கு ஏப்ரல் 7ஆம்திகதி முடிவு கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது

வடக்கு முதல்வர் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு-

sfdddஅவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் றொபின் மூடிக்கும் வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று காலை 11.30 மணியளவில் முதலமைச்சர் அலுவலகத்திலே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு தொடர்பில் வட மாகாண முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், அவுஸ்திரேலிய அரசாங்கம் எந்த அளவுக்கு வடமாகாணத்தில் பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுத்து வருவது தொடர்பாக ஆராய்வதற்கே அவர் இங்கு வருகை தந்திருந்தார். மேலும் அவரிடம் தனித்துவமாக பேச வேண்டிய அவசியம் இருக்கவில்லை.. அரசியல் மாற்றம் என்ன மாதிரியாக நன்மை தீமைகளை மக்கள் மத்தியில் கொண்டு வந்துள்ளது என்பது தொடர்பில் என்னிடம் கேட்டறிந்து கொண்டார். மேலும் அரசுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையில் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கு தமது நாடு பாடுபடும் எனவும் அவர் தெரிவித்தார்.

யாழ்.ஆயர் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு-

67676அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் றொபின் மூடி மற்றும் யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆகியோர்ககிடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இன்று காலை 9.30 மணியளவில் யாழ்.ஆயர் இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது. அண்மைக்கால அரசாங்க மாற்றத்தின் பின்னர் யாழ்.மண்ணில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்றும் யாழ்ப்பாணத்திற்கு என்ன உதவிகள் தேவைப்படுகின்றன என்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் றொபின் மூடி ஆயரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு ஆயர் பதிலளிக்கையில், முன்னைய ஜனாதிபதி மகிந்தவின் ஆட்சி மாறி தற்போது மைத்திரி ஆட்சி உருவெடுத்துள்ளது. எனினும் மைத்திரி ஆட்சியிலும் சிறிய மாற்றங்கள் மாத்திரமே ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பிரதமர் ரணிலுக்கும் இடையில் முரண்பாடுகள் உண்டு அவர்களுக்கிடையில் இணக்கப்பாடு அவசியம் என தெரிவித்தார். மேலும் றொபின் மூடி யாழ் மக்களிடையே இணக்கத்தை ஏற்படுத்துவதற்கு தம்முடைய அரசால்; பல வகையிலான உதவிகளை செய்ய முடியும். என தெரிவித்துள்ளார்.

கட்சி ஒழுக்கத்தை மீறுவோருக்கு எதிராக தீர்மானம்-

chandrikaகட்சியின் ஒழுக்கத்தை தொடர்ச்சியாக மீறுவோருக்கு எதிராக விரைவில் தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பின்போதே முன்னாள் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். கட்சியின் ஒழுக்கத்திற்கு முரணாக செயற்படுவோர் தொடர்பில் ஜனாதிபதி தீர்மானங்களை மேற்கொள்வாரெனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆட்சியின்போது அனைவரும் குற்றங்களை இழைத்தார்கள் என்ற அடிப்படையில் குற்றங்களை இழைத்த சிலரும் தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர். எனினும் அவர்கள் தாம் செய்த தவறுகளை உணர்ந்து மாற்றமைடய முயற்சிக்கின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு-

suicideயாழ். ஏழாலை தெற்கு மயிலங்காட்டை சொந்த இடமாகக் கொண்ட தச்சுத் தொழிலாளி இன்றுகாலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்றுகாலை 7.45 மணியளவில் மயிலங்ககாடு அம்மன் கோவிலில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் 7பிள்ளைகளின் தந்தையும், 69வயதுமான வைரமுத்து சண்முகலிங்கம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் நேற்று இரவு வீட்டுக்குச் சென்று இரவு உணவு உட்கொண்டுள்ளார். பின்னர் காலை எழுந்து பார்க்கும்போது அவர் வீட்டில் இருக்கவில்லை. பிள்ளைகளும், மனைவியும் வேலைக்குச் சென்றுவிட்டதாக எண்ணி அவரைத் தேடவில்லை இருப்பினும் காலை மயிலங்காடு அம்மன் கோவிலடியால் வந்த சிலர் தூக்கில் தொங்கியநிலையில் சடலம் ஒன்று இருப்பதாக சுன்னாகப் பொலிஸாருக்கு அறிவித்தனர். அதன்படி சுன்னாகம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மரணமானவர் நீண்டகாலமாக இதயநோய் தாக்கத்திற்குள்ளாகியிருந்ததாக கூறப்படுகின்றது.

புத்தளம், புளிச்சாங்குளம் விபத்தில் மூவர் உயிரிழப்பு-

accidentபுத்தளம், முந்தல், புளிச்சாங்குளம் பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் பலியாகியுள்ளனர். முச்சக்கர வண்டி ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. பலியானவர்களில் 9 மாத குழந்தை, பெண்ணெருவர் மற்றும் முச்சக்கரவண்டியின் சாரதி அகியோர் உள்ளடங்குவதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த முச்சக்கர வண்டியில் 5பேர் பயணம் செய்தநிலையில், கடுங்காயங்களுக்கு உள்ளாகியுள்ள மேலும் இருவர் முந்தல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்கான அவர்கள் சிலாபம் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மஹாவலி கங்கையில் நீராடச்சென்ற சிறுவனைக் காணவில்லை-

90909மஹாவலி கங்கையில் நீராடச் சென்ற 13 வயது மாணவனொருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் அம்மாணவனுடன் நீரில் மூழ்கிய மேலும் இரு மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்றுமாலை காணாமல் போன மாணவனை மீட்கும் பணியில் பிரதேசவாசிகளும் சுழியோடிகளும் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலையொன்றில் தரம் 8ல் கல்வி கற்கும் மாணவர்கள் மூவரே இவ்வாறு நீராடச் சென்றுள்ளனர். குளித்துக் கொண்டிருந்தபோது இவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன் இவர்களில் இருவரை பிரதேசவாசிகள் உடனடியாக மீட்டுள்ளனர். மற்றைய சிறுவனை மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

காணாமல் போன கஹவத்தை பெண் சடலமாக மீட்பு-

ladyஇரத்தினபுரி, கஹவத்தை, கொடகெதன பிரதேசத்தில் காணாமல் போன பெண்ணினுடையது என நம்பப்படும் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பெண்ணின் வீட்டுக்கு அருகில் வைத்தே இச்சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிடுகின்றனர். சந்திராணி சுவர்ணலதா என்ற 39வயதுடைய பெண் கடந்த 5ஆம் திகதி காணாமல் போயிருந்தார். சடலம் அவரது வீட்டிலிருந்து சுமார் 500-600 மீற்றர் தூரத்திலிருக்கும் வாய்க்காலிலிருந்தே மீட்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்திலிருந்து இதுவரையிலும் கொட்டகெத்தனையிலிருந்து 18 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் கொள்ளை-

robbery (4)எல்பிட்டிய – பிட்டிகல வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று அதிகாலை கொள்ளை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாகத்தில் வந்தவர்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ளவர்களது கை கால்களை கட்டிவிட்டு, பணத்தினை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொள்ளையிடப்பட்ட பணத்தின் பெறுமதி இதுவரையில் கணக்கிடப்படவில்லை. இந்நிலையில், கொள்ளையர்களை கைதுசெய்ய எல்பிட்டிய காவல்துறையினர் விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.

உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் கொலை-

murderபண்டாரகம பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாணந்துரையிலுள்ள அவரது வீட்டிலேயே இன்றுகாலை இவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.