காணி உரிமையை உறுதி செய்ய புதிய சட்டத் திருத்தம்-
30 வருட யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தமது காணிகளை விட்டு இடம்பெயர்ந்துள்ள பிரஜைகளின் காணி உரிமையை உறுதிசெய்யும் நோக்கில் ஆட்சி உரிமை விசேட ஒழுங்குகள் சட்டமூலம் எதிர்வரும் வாரங்களில் பாராளுமன்றில் சமர்பிக்கப்படும் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 1993 மே 1ம் திகதி தொடக்கம் 2009, மே 1ம்திகதி வரையான காலத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் காணி உரிமையை உறுதி செய்யும் நோக்கில் புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்படுவதாகவும் முன்னர் அக்காணியில் இருந்தவர்களுக்கு காணி சொந்தமாகும் என்ற திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தற்போதுள்ள ஆட்சியுரிமை சட்டத்தின்படி 10 வருடங்களுக்கு குறையாமல் ஒரு காணியில் இருப்பவர்களுக்கே அக்காணி சொந்தம் என்ற சரத்தினால் வடக்கு, கிழக்கு மக்களுக்கு அநீதி ஏற்படும் என்றும் அதனை தவிர்க்கவே விசேட திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளதாகவும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் மத நல்லிணக்கத்திற்கான சர்வமத குழு வடக்கு கிழக்கு மக்களின் காணி உரிமையை உறுதிசெய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வலி மேற்கு தவிசாளரால் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சருக்கு கடிதம்-
யாழ். வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சர் கௌரவ. சஜித் பிரேமதாச அவர்கட்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தின் விடயம் வருமாறு, கடந்த பல காலத்திற்கு முன்னதாக நாட்டின் ஜனாதிபதியாக இருந்த மறைந்த கௌரவ பிரேமதாச அவர்களால் வலி மேற்கின் பென்னாலைப் பகுதியில் வீடமைப்புத் திட்டம் ஏற்படுத்தப்பட்டு அங்கு மக்கள் வசித்தனர். பின்னர் இடம்பெற்ற யுத்த சூழ்நிலைகள் காரணமாக அங்கு மக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டு மக்கள் இடம்பெயர்ந்து வீடுகள் கைவிடப்பட்டன. தற்போது பிரதேசத்தில் பலர் வீடுகளற்ற நிலையில் உள்ளனர். எனவே மீளவும் அங்கு வீட்டுத் திட்டத்தினை 100நாள் திட்டத்தின் வாயிலாக ஏற்படுத்தித் தாருங்கள் என கோரப்பட்டுள்ளது.
இலங்கைக்கான திட்டங்கள் குறித்து ஐ.நா ஆராய்வு-
ஆசியாவிற்கான ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி அமைப்பின் தலைவர் மற்றும் ஐக்கிய நாடுகளின் உதவி செயலாளர் நாயகம் ஹவோலிங் சூ ஆகியோர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். ஆறு நாள் விஜயமாக இலங்கை வந்துள்ள இவர்கள் நேற்றுக்காலை நிதியமைச்சர் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்து உரையாடியுள்ளனர். இதன்போது, ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு மேலதிகமாக வழங்க உத்தேசித்துள்ள திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆராய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர அவர்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதனையும் சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தியதாக கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் செயலகம் கூறியுள்ளது,
இலங்கை திட்டமிடல் சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கம் அமைப்பு-
இலங்கை தி;ட்டமிடல் சேவையின் உத்தியோகத்தர்கள் தமக்கான தொழிற்சங்கம் ஒன்றினை அமைபப்தற்காக கடந்த 26.03.2015 அன்று கொழம்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் ஒன்றுகூடி தமது தொழில் ரீதியாக ஏற்படுகின்ற தடங்கல்கள் தொடர்பாக கலந்துரையாடி தமககான புதிய நிர்வாகத்தினையும் தெரிவுசெய்துளளனர். இதில் உப தலைவர்களில் ஒருவராக சி.இராமமூர்த்தி (பணிப்பாளர், கால்நடை மற்றும் விவசாய அமைச்சு) தெரிவு செய்யப்பட்டுள்ளார். அடுத்து ஒவ்வொரு மாகாணத்திற்கும் இணைப்பாளர்கள் தெரிவு இடம்பெற்றது. இpதில வடககு மாகாண இணைப்பாளராக தெல்லிப்பளை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் சி.சிவகுமார் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சிரேஷ்ட ஒளிபரப்பாளர் கமலினி செல்வராஜன் காலமானார்-
சிரேஷ்ட ஒளிபரப்பாளரும் நடிகையுமான கமலினி செல்வராஜன் இன்றுகாலை காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்றுகாலை காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது. அன்னாரது உடல் நாளை காலை 8.30 மணிமுதல் பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் நண்பகல் 12 மணி அளவில் இறுதிக்கிரியைகள் இடம்பெறும் என அவரது குடும்ப அங்கத்தவர்கள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சுமார் 1.30 மணியளவில் அன்னாரின் பூதவுடல் பொரள்ளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது. இவர் இலக்கியவாதியும், எழுத்தாளருமான தென்புலோலியூர் மு.கணபதிப்பிள்ளைக்கும் வயலின் கலைஞர் தனபாக்கியம் ஆகியோருக்கு மூத்த மகளாவர். கமலினி இலங்கைத் தமிழ் நாடக மற்றும் திரைப்பட நடிகையுமாவார். இலங்கையில் தயாரிக்கப்பட்டு வெற்றிபெற்ற ‘கோமாளிகள்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். ‘ஆதர கதாவ’ என்ற சிங்களத் திரைப்படத்தில் தமிழ்; பெண்மணியாக நடித்திருந்தார் கமலினி. வானொலி தொலைக்காட்சி ஒலி, ஒளிபரப்பாளரும் ஆவார். இவர் கவிஞர் சில்லையூர் செல்வராசனின் துணைவி ஆவார். சுமார் 30வருடங்கள் தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராக கடமையாற்றினார். பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தூய நீர் கிடைப்பதை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி போராட்டம்-
யாழ் சுன்னாகம் பகுதிக்கு தூய நீர் கிடைப்பதை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி அமைதிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்றுகாலை 10 மணியளவில் அமைதிப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. “நீருக்காக திரண்ட யாழ்ப்பாணம்” என்ற தொனிப்பொருளில் தூய நீர் இன்றி பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியத்தினால், இந்த அமைதிப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 78 மணித்தியாலத்திற்குள் தங்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் யாழ். மக்கள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர். இதேவேளை, வழங்கப்பட்டுள்ள காலப்பகுதிக்குள் தீர்வு வழங்கப்பட வேண்டும் என கோரி சிலர் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டுள்டிருந்தாக தெரியவருகின்றது.
வட்டுக்கோட்டையில் மூதாட்டி அடித்துக் கொலை-
நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பண்ணாகம் பகுதியில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர் இனந்தெரியாத நபர்களல் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மூதாட்டி வீட்டில் தனித்து இருந்த நிலையில் வீட்டில் அவரைக் காணவில்லை என கடந்த 02.04.2015ல் வட்டுக்கோட்டை பொலிசில் உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந் நிலையில் பின்னர் மூதாட்டி வாழ்ந்த வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள ஆட்களற்ற வீடு ஒன்றில் இருந்து மூதாட்டி சடலமாக மீட்கப்படடுள்ளர்ர். தொடர்ந்து பொலிஸ் மற்றும் ஏனைய அமைப்புகளுக்கும் அறிவிக்கப்பட்டதனை அடுத்து மரண விசாரணையின் பொருட்டு சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் மரண விசாரண அதிகாரி அதிக இரத்தப் போக்கே இறப்பிற்கு காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் குறித்த மூதாட்டியின் முகப் பகுதியில் பலத்த காயம் காணப்பட்டமை குறிப்பிடக்கூடியதாகும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தான் ஜனாதிபதி சந்திப்பு-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தான் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுமாலை பாகிஸ்தான் ஜனாதிபதி மம்நூன் ஹ_சைனை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இரு நாடுகளுக்குமிடையில் உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இரு தலைவர்களிடையேயும் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இலங்கை ஜனாதிபதியின் பாகிஸ்தான் விஜயம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என பாகிஸ்தான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதன் பின்னர் பாகிஸ்தான் ஜனாதிபதி வழங்கிய விருந்துபசார நிகழ்விலும் ஜனாதிபதி பங்கேற்றுள்ளார்.
தினேஸ் குணவர்த்தனவை தலைவராக நியமிக்குமாறு கோரிக்கை-
முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவை பாராளுமன்ற எதிர்க் கட்சித் தலைவராக நியமிக்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 50 எம்.பிக்கள் சபாநாயகருக்கு கடிதமொன்றை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்க்கட்சி தலைவராக தினேஸ் குணவர்தனவை நியமிக்க வேண்டும் என ஒரு சாரார் கோரிவருகின்ற போதும், சம்பிரதாயபூர்வமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நியமிக்க வேண்டும் என்று ஒரு சாரார் கோரி வருகின்றனர். இரா.சம்பந்தனை எதிர்க்கட்சி தலைவராக்க ஜே.வி.பி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன தமது ஆதரவையும் வெளியிட்டுள்ளன.
கொட்டகத்தெனவில் விசேட அதிரடி படையினர் பாதுகாப்பு-
கொட்டகத்தெனவில் காணாமற்போன பெண்ணின் சடலம் நேற்று மீட்கப்பட்டதை தொடர்ந்து அப்பிரதேசத்தின் பாதுகாப்புக்காக விசேட அதிரடி படையைச் சேர்ந்த 50 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கஹவத்தை, கொட்டகத்தெனவில் கடந்த ஞாயிறன்று காணாமல்போன பெண், நேற்று அப்பிரதேசத்திலுள்ள நீரோடையில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இவரது பிரேத பரிசோதனை, இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலையில் இன்று இடம்பெறவுள்ளது. இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும்நிலையில் பிரதேச மக்கள் அச்சத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பிரதேசத்தின் பாதுகாப்பு கருதி விசேட அதிரடிப்படையினர் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. கொட்டகத்தெனவில் இதுவரை 18 பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள குறிப்பிடத்தக்கது.
மகாவலி கங்கையில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு-
மஹாவலி கங்கையில் நீராடச்சென்று காணாமல் போன சிறுவன் சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். படையினரின் உதவியுடன் இச்சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் சிறுவன் நீராடிய இடத்திலிருந்து 30 மீற்றர் தொலைவில் சடலம் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுவன் தனது நண்பர்களுடன் நேற்று நண்பகல், மஹாவலி கங்கையில் நீராடச் சென்று காணாமல் போயிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இச்சிறுவனுடன் நீரில் மூழ்கிய மேலும் இரு சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலையொன்றில் தரம் 8இல் கல்வி கற்கும் மாணவர்கள் மூவரே மஹாவலி கங்கையில் நீராடச் சென்றிருந்தனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பூட்டான் பிரதமரின் இலங்கை விஜயம்-
பூட்டான் பிரதமர் சேரிங் டொப்கே இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. மூன்று நாள் விஜயமாக அவர், எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கை வரும் பூட்டான் பிரதமர், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து உரையாடவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். அபிவிருத்தி உதவியாளர்களுக்கான கலந்துரையாடல்-
எதிர்வரும் 11.04.2015 அன்று யாழ் மாவட்டத்தில் பணியாற்றிவரும் அபிவிருத்தி உதவியாளர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் உள்ள பஸ்டியன் விருந்தினர் விடுதியில் நடைபெற உள்ளதாக ஏற்பாடடாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ் விடயம் தொடர்பில் குறித்த அபிவிருத்தி உதவியாளர்கள் 2005ம் ஆண்டில் அரச சேவைக்கு உள்வாங்கப்பட்டவர்கள் தொடர்ந்து கடந்த 10 வருடங்களாக அபிவிருத்தி உதவியாளர்களாகவே கடமையாற்றி வருகின்றனர் என்பதுஇங்கு குறிப்பிடக்கூடிய விடயமாகும்.
இராணுவத்தைச் சேர்ந்தவர் தற்கொலை-
17ஆவது கெமுணு படைமுகாமில் கடமையாற்றிய இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ். ஊர்காவற்துறை பகுதியில் உள்ள கெமுணு படை முகாமில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் அவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார். பதுளை பகுதியைச் சேர்ந்த வீரசிங்க (வயது27) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இராணுவத்தைச் சேர்ந்தவரது சடலம் படை முகாமில் இருப்பதாகவும், நீதிபதி வந்;தபின் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்படுமெனவும் கூறப்பட்டிருந்தது.