தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் கூட்டம்-

tna (4)தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்;கின்ற நான்கு கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் இன்று முற்பகல் கொழும்பு மாதிவெலயில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிறேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள். இந்தக் கூட்டத்தின்போது முதலில் சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்தினால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற நிலத்தடி நீர் பிரச்சினை சம்பந்தமாக விரிவாக ஆராயப்பட்டது. இது சம்பந்தமான நிபுணர்குழு இது குடிப்பதற்கு பாதுகாப்பான தண்ணீர் என்று இறுதி அறிக்கையிடும் வரைக்கும் தொடர்ந்தும் குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ள வேண்டும், தண்ணீர் இன்னும் தேவைப்படுமிடத்து மேலதிக நீர் விநியோகத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், இதற்காக மாகாண சபை மற்றும் பிரதேச சபைகளின் ஊடாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென கூட்டமைப்புத் தலைவர்கள் தீர்மானித்தார்கள். தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் புரிந்துணர்வு உடன்படிக்கை சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது. இதில் இருக்கின்ற விடயங்கள் சம்பந்தமாக தமிழரசுக் கட்சி கூடி ஒரு முடிவை எடுத்த பின்புதான் தாங்கள் இறுதி முடிவினை எடுக்க முடியும் என்று மாவை சேனாதிராஜா அவர்கள் தெரிவித்தார். ஆகவே அதற்காக அவகாசம் கொடுக்கப்பட்டு, வருகின்ற 17, 18ம் திகதிகளில் யாழ்ப்பாணத்தி;ல் கூடி இறுதி முடிவினை எடுப்பதென தீர்மானிக்கப்பட்டது.

வலி மேற்கு பிரதேச வேலைத்திட்டங்களை புளொட் தலைவர் பார்வையிட்டார்-

ST meetயாழ்ப்பாணம் வலி மேற்கு பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் வலி மேற்கு பிரதேசத்தில் தன்னால் ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்ட மாகாண சபை நிதி ஒதுக்கீடுகள் வாயிலான திட்டங்களை நேரில் பார்வையிட்டதுடன் சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

பாணந்துறை நகர சபையில் கைகலப்பு-

panaduraபாணந்துறை நகர சபையில் நகரசபை உறுப்பினர்களுக்கும் உழியர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கைகலப்பின்போது மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது காயமடைந்த உறுப்பினர் மகேஷ் பெர்ணான்டோ, நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர்மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் திட்ட நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இத்தாலி செல்ல முயன்ற மூவர் கைது-

arrest (30)மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட இலங்கை பிரஜைகள் மூவரை கைதுசெய்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போலியான ஆவணங்களை பயன்படுத்தி மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று அங்கிருந்து இத்தாலிக்கு தப்பியோட முயன்ற மூவரே நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டனர். அந்த மூவரும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பியபோதே கைதுசெய்யப்பட்டனர் என்றும் அத்திணைக்களம் அறிவித்துள்ளது. சந்தேகநபர்கள், யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவருகின்றது. அந்த மூவரும் தங்களுடைய உண்மையான கடவுச்சீட்டை பயன்படுத்தி டுபாய் மற்றும் ஓமானுக்கு சென்று அந்நாடுகளிலிருந்து போலியான விசா மற்றும் ஆவணங்களை பயன்படுத்தி இத்தாலி செல்வதற்கு முயன்றபோதே அம்மூவரும் அந்நாடுகளிலிருந்து திருப்பியனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மண்மேடு சரிந்து விழுந்து இருவர் பலி, இருவரை காணவில்லை-

land slideஇரத்தினபுரியில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டிந்தவர்கள் மேல் மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல்போன இருவரை தேடும் பனிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

ரயிலில் மோதுண்டு இளைஞர் மரணம்-

trainமட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதி ரயிலில் மோதுண்டு 22வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏறாவூர் மாவடிவேம்பு பிரதேசத்தில் நேற்றிரவு 9மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாவடிவேம்பு பகுதியைச் சேர்ந்த பத்மநாதன் சதீஸ்வரன் என்ற இளைஞனே பலியானவராவார். இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.