‘அகதி வாழ்விற்கு ஏது தீர்வு’ வவுனியா சிதம்பரபுர மக்கள் விசனம் ..!!(படங்கள் இணைப்பு)
வவுனியா, சிதம்பரபுரம் நலன்புரிநிலைய மக்கள் தமக்கு குடியிருப்பதற்கு காணி வழங்கக் கோரி வவுனியா மாவட்ட செயலகம் முன்னால் இன்று (08ஃ04) ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதியம் மாவட்ட செயலகத்துக்கு விஜயம் செய்த தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) வவுனியா மாவட்ட இணைப்பாளரும் வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களிடம் மக்கள் தமது இன்னல்களை கூறியதையடுத்து, தான் இதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தமையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.எமக்கு அப் பகுதியில் உள்ள காணிகளை வழங்குவதாக பல தடவைகள் அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளால் வாக்குறுதி வழங்கப்பட்ட போதும் நாம் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்றோம். எமக்கு விடிவு கிடைக்கும் என ஆட்சி மாற்றத்திற்காக வாக்களித்தோம். ஆனால் இன்று வரை கதை சொல்கிறார்களே தவிர எமக்கு தீர்வைத் தரவில்லை. எனவே, எமக்கு காணி வழங்க உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
வவுனியா பிரதேச செயலகம் முன்பாக ஒன்று கூடிய மக்கள் அதன் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் அங்கிருந்து ஊர்வலமாக மாவட்ட செயலகம் வந்து அரச அதிபரை சந்திக்க முற்பட்டனர். எனினும் பொலிசார் அனுமதி வழங்காமையால் மாவட்ட செயலகம் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சார்பாக ஐவரை வவுனியா மாவட்ட அரச அதிபரை சந்தித்து அவர்கள் பிரச்சனைகளை தெரியப்படுத்த பொலிசார் அனுமதித்தனர்.
இதனைத் தொடர்ந்து மதியம் 2 மணியளவில் மாவட்ட செயலகம் முன் கூடியிருந்த மக்களை சந்தித்த தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும் நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களிடம் மக்கள் தமது இன்னல்களை கூறியதையடுத்து, தான் இதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாகவும், 1991 காலப்பகுதியில் தமது அயராத கழகத்தின் முயற்சியால் பல குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்ட காலப்பகுதியில் இதுவும் ஒரு குடியேற்றம். எனவே தங்களின் மீது நாம் நிச்சயமாக அக்கறை கொள்வோம். தங்களின் பிரச்சனைகள் தொடர்பாக தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும் மாகாண சபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் ஊடாக முதலமைச்சர் மற்றும் சம்பந்தபட்ட அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன் என குறிப்பிட்டார்.
உங்களின் நிலைமைகள் தொடர்பாக இன்னும் ஒரு சில தினங்களில் தங்களை சந்திப்பதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்வோம் என குறிப்பிட்டதனைத் தொடர்ந்து இவ் போராட்டம் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த தம்மை தங்க வைப்பதற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட சிதம்பரபுரம் நலன்புரிநிலையமே கடந்த 20 வருடங்களுக்கு மேலாக எமது வாழிடமாகவுள்ளது. தார் தரப்பாலுக்குள் கொட்டும் மழையிலும் கொளுத்தும் வெயிலிலும் தினம் தினம் போராடியே வாழ்கின்றோம்