உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த 590 ஏக்கர் விடுப்பு-

vethanayaganயாழ்.மாவட்டத்தில் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த காணிகளில் 590 ஏக்கர் காணிகள் அடுத்த கட்டமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன், இன்று தெரிவித்துள்ளார். 1000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படுவதாக புதிய அரசாங்கம் அறிவித்த அறிவிப்புக்கமைய முதற்கட்டமாக வளலாய் பகுதியில் 233 ஏக்கரும், வசாவிளான் பகுதியில் 197 ஏக்கரும் ஆக மொத்தம் 430 ஏக்கர் காணிகள் கடந்த மார்ச் 24ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கையளிக்கப்பட்டது. ஏப்ரல் மாத இறுதிப் பகுதிக்குள் மிகுதிக் காணிகளும் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். அதற்கமைய 2ஆம் கட்டமாக 590 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட காங்கேசன்துறை தெற்கு (ஜே – 235 கிராம அலுவலர்), பளை வீமன் காமம் வடக்கு (ஜே – 236 கிராம அலுவலர்), பளை வீமன்காமம் தெற்கு (ஜே – 237 கிராம அலுவலர்), கட்டுவன் (ஜே – 238 கிராம அலுவலர்), தென்மயிலை (ஜே – 240 கிராம அலுவலர்), வறுத்தலைவிளான் (ஜே – 241 கிராம அலுவலர்), தையிட்டி தெற்கு (ஜெ – 250 கிராம அலுவலர்), பலாலி தெற்கு (ஜே – 252 கிராம அலுவலர்) ஆகியவற்றின் காணிகளும் கோப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட வளலாய் (ஜே – 284 கிராம அலுவலர்) காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளன. மேற்குறிப்பிட்ட பிரிவுகளைச் சேர்ந்த காணிகளின் உரிமையாளர்கள் நாளைகாலை 9மணிக்கு தங்களுடைய காணிகளை பார்வையிடுவதற்கு அழைத்துச் செல்லப்படுவதுடன், பதிவுகளை கிராம அலுவலர் ஊடாக மேற்கொள்ள முடியும் எனவும் மாவட்டச் செயலர் கூறியுள்ளார்.

புத்தாண்டு வாழ்த்துச் செய்தி-

Vali west10மலரும் மன்மத வருடம் பல சலனங்களுடனும் வாழ்ந்த தமிழ் மக்கள் மத்தியில் மறுமலர்ச்சியினை ஏற்படுத்த இறைவனைப் பிரார்த்திப்பதோடு, கடந்த கலங்களில் எமது இனத்தின் விடுதலைப் பயணம் நோக்கிய பாதையின் போது இழந்த கொடிய இழப்புக்கள் மற்றும் மாறாத வடுக்கள் தழும்புகளுடன் வாழும் எம்மவர்களின் மனங்களில் ஒளிக்கீற்றை ஏற்படுத்தவும் வேண்டுகின்றேன். மாற்றங்களுக்காக மாற்றத்தினை வேண்டி புதிய அரசுக்கு வழங்கிய மாற்றத்திற்கான வாக்கின் பொருட்டு மாற்றங்கள் எம்மவர்கள் மத்தியில் மாற்றத்தினை ஏற்படுத்தத்தக்கதாக அமையவும் நியாயத்தின் பால் இனத்திற்கான நீதி கிடைக்கவும் அனைவரும் ஒன்றிணைந்து இவ் புனித நன்நாளில் சபதம் செய்து வரலற்றினை எமது வழிகாட்டியாக கொண்டு எம் இனம் இனிவரும் காலங்களில் ஒற்றுமையுடன் ஒர் அணியில் ஒர் தலைமையில் ஒர் கொள்கையில் புறப்பட பேதங்கள், கடந்த கால குரோதங்கட்கு அப்பால் அனைவரும் கரங்களை இறுக்கிக்கொண்டு நாம் தமிழர்காக வாழ ஒன்றிணைவோம். இன்றைய நிகழ்வுகளை நாளைய எமது இனத்தின் வரலாற்றுக்கான விடிவுக்கான திறவுகோலாக்க அனைவரும் தேசியம் என்ற உணர்வால் ஒன்றுபட உழைப்போம் இப் புனித நாளில்
என்றும் தேசியத்தின் வழியில் தமிழ் அன்னையின் புதல்வியாய்.
திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், தவிசாளர், வலி மேற்கு பிரதேச சபை.