எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க கோரி சபாநாயகருக்கு கடிதம்–
எதிர்க்கட்சித் தலைவர் பதவி இலங்கை தமிழரசுக் கட்சிக்கு வழங்கப்பட வேண்டுமெனத் தெரிவித்து, சபாநாயகரிடம் கடிதமொன்று இன்று கையளிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கே.துரைராஜசிங்கம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோரது கையொப்பத்துடன் இந்தக் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அடுத்தபடியாக, பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்களைக் கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டுமென இந்தக் கடிதத்தின் ஊடாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய நல்லிணக்க பிரிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம்-
தேசிய நல்லிணக்கத்துக்கான பிரிவு ஒன்றை உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. நாட்டின் தனித்துவத்தை பாதுகாப்பதுடன், அனைத்து பிரஜைகளினதும் பொருளாதார, சமூக, கலாசார மற்றும் அரசியல் ரீதியான சம அந்தஸ்தை வழங்குவதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் 2015ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஐந்தாயிரம் ரூபாய் மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு அதிகரிப்பை அடுத்த மாதம் முதல் அமுலாக்கவும் அமைச்சரவை அனுமதித்துள்ளது. இதேவேளை, இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவற்தறையினர் மற்றும் சட்ட அதிகாரிகளின் விசேட பயண அனுமதி சீட்டு, இலங்கையிலும் செல்லுபடியாக்கப்பட்டுள்ளது. இதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதற்கான உடன்படிக்கை விரைவில் கைச்சத்தாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அகதிகளை நாடு கடத்த வேண்டாமென கோரிக்கை-
நாளாந்தம் முகம் கொடுக்கின்ற அச்சுறுத்தல்கள், காரணமாகவே இலங்கையில் அவுஸ்திரேலியா நோக்கி அகதிகளின் வருகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் ஊடகமொன்று இதனைத் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இவ்வாறான அகதிகளை நிராகரித்து நாடுகடத்த வேண்டாமென கோரப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கோருகின்றவர்கள் நிராகரிக்கப்படும் நிலைமை முன்பில்லாத அளவு அதிகரித்துள்ளது. அகதி அந்த்ஸ்து பெறுவதற்காக தற்போதுள்ள கூறப்படுகின்ற காரணங்களையே, 5வருடங்களுக்கு முன்னர் கூறியவர்களுக்கு அகதி அந்தஸ்து கிடைத்துள்ளன. ஆனால் தற்போது இந்த கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றன. இதற்கு அவுஸ்திரேலிய அரசின் அரசியல் நோக்கத்துக்கான சட்ட மாற்றங்களே காரணம். இதன்மூலம் அவுஸ்திரேலிய அரசாங்கம் பாரிய மனித உரிமை மீறிலில் ஈடுபட்டுள்ளது என அந்த ஊடகம் குற்றம் சுமத்தியுள்ளது.
பொதுத் தேர்தலின் பின்னர் புதிய அரசியலமைப்பு-
பொதுத் தேர்தலின் பின்னர் நாடாளுமன்ற அரசியலமைப்பு சபை ஒன்று உருவாக்கப்பட்டு புதிய அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். இதற்காக எதிர்வரும் பொதுத் தேர்தலில் மக்களின் ஆணையை பெற்றுக் கொள்ள ஐக்கிய தேசிய கட்சி எதிர்பார்ப்பதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றம் கலைக்கப்படும் திகதியை உறுதியாக கூற முடியாது-ஜனாதிபதி-
நாடாளுமன்றம் கலைக்கப்படும் திகதி, காலம் தொடர்பில் உறுதியாகக் கூற முடியாது. எவ்வாறாயினும், அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 19ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம், சபாநாயகரால் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டதன் பின்னர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் கூட்டம், நேற்று நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
துப்பாக்கி வெடித்ததில் எஸ்ரிஎப் உத்தியோகத்தர் உயிரிழப்பு-
மாத்தளை மாவட்டம் தம்புள்ளை பக்கமுன ரியெல்ல வனத்தில் துப்பாக்கியொன்று தானியங்கியதில் பொலிஸ் விசேட அதிரடிப்படை கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார். சட்டவிரோத மரக்கடத்தல் தொடர்பில் தேடுதல் நடத்திக் கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்புலுஓயா பிரதேச பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கான்ஸ்டபிள் ஒருவரே உயிரிழந்துள்ளதாக மேலும் கூறப்படுகின்றது.
கவிஞர் செல்வகுமாரனின் ஊசல் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு-
யாழ். வலி மேற்கு பிரதேச சபையின் கலாச்சார மண்டபத்தில் கவிஞர் செல்வகுமாரன் எழுதிய ஊசல் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் தலைமையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக வித்தியாசாகரம், சர்வதேச இந்துகுருமார் ஒன்றியத்தின் தலைவர் சபா. வாசுதேவக் குருக்கள் அவர்களும் சிறப்பு விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் திரு ச.ஆனோலட், சங்கானை பிரதேச செயலக உதவி பிரதேச செயலர் திருமதி. அ.முகுந்தன் மற்றும் கவிஞர் வீரா உட்பட பல கவிஞர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர் இவ் நிகழ்வில் கவிஞர் செல்வகுமாரனின் சிறந்த கவி ஆற்றலினை பாராட்டி வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் கவிஞருக்கு கவிக்கோ எனும் கௌரவத்தினை வழங்கி கௌரவித்தார்.
இவ் நிகழ்வில் தலைமை உரையினை வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் நிகழ்த்துகையில் ஒரு மனிதனின் எண்ணங்கள் வண்ணம் கொண்டே கவிவரிகள் ஆகின்றது. கவிதை என்பது வெறும் எழுத்துக்களின் கோர்வை அல்ல மனித உணர்வின் கோர்வைகள். இவ்வாறாக பிறந்த கவிதைகளே பாடல்கள் ஆகி பலரையும் பரவசப்படுத்துகின்றது. இவ் கவிஞரின் வரிகள் அவரது சமூகம் நோக்கிய எண்ணங்களை பதிவு செய்துள்ளது. ஒரு கவிஞன் சமுகத்தின் இயல்புகளை செதுக்கி அதற்கு உயிர் வடிவம் கொடுக்கின்ற ஒரு சிப்பியாவான். இவ் கவிஞனால் சமூகத்தின் தளத்தினை மாற்றி அமைக்கக்கூடிய வல்லமை உள்ளது. எமது விடுதலைப் போராட்ட வரலாற்றிலும் போராட்டம் மக்கள் மயப்படுத்தியதில் அன்று உதயமான கவி வரிகள் காத்திரமான பங்களிப்பினைக் கொண்டுள்ளது. அன்றைய கவி வரிகள் இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் மனதில் ஏற்படுத்திய ஒருவகை உணர்வுத்தூண்டுதலே பெரும் போராட்டமாக உருவெடுத்தது என்பதும் இங்கு குறிப்பிடக்கூடியது. இந்த வகையில் ஒரு கவிஞருக்கு தனி இயல்புகள் உண்டு. செல்வகுமாரன் அவர்களும் கவிதையில் ஒரு தனிஇடம் பெற வாழ்துகின்றேன் என குறிப்பிட்டார்.