Posted by plotenewseditor on 14 April 2015
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 14 April 2015
Posted in செய்திகள்
வலிகாமம் பகுதியில் 30 கிணறுகளில் எண்ணெய் கலந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது
இலங்கை மத்திய அரசின் சுகாதார அமைச்சின் சுற்றாடல் பாதுகாப்புப் பிரிவினரால் கடந்த மாதம் வலிகாமம் பகுதிகளில் ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும் உள்ள 30 கிணறுகளில் எண்ணெய் மற்றும் கிறீஸ் என்பவற்றிற்காகப் பரிசோதிக்கப்பட்டு குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
இப்பரிசோதனைகள் அனைத்தும் இலங்கையிலேயே நம்பகத் தன்மையானதும் சட்டரீதியான அங்கீகாரம் உள்ளதுமான அரசாங்க பகுப்பாய்வு நிறுவனத்தில் நடாத்தப்பட்டுள்ளது. அது தொடர்பான அறிக்கை சுகாதார அமைச்சின் உயர் அதிகாரியினால் சிபாரிசு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் பரிசோதிக்கப்பட்ட 30 கிணறுகளிலுமே எண்ணெய் கலந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 3 கிணறுகளில் அதிக செறிவில் காணப்படுகின்றது. மேலும் அப்பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு இக் கிணறுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாகவே உள்ளுர் அதிகாரிகளால் நடாத்தபட்ட சில ஆய்வுகளில் எண்ணெய் தொடர்பான நச்சுப் பதார்த்தங்கள் இல்லை என அறிவிக்கப்பட்டதும் இதனை அடுத்து மக்கள் தங்கள் கிணற்று நீரினைப் பாவிக்கலாம் என அறிவிக்கப்பட்டதும் அறிந்ததே. இதனை விடவும் 2014 ம் ஆண்டு நீர்வழங்கல் அதிகார சபையினரால் பாரிய அளவில் முறையாகச் செய்யப்பட்ட ஆய்வில் 75 வீதமான கிணறுகளில் அதிகளவில் எண்ணெய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் குறித்து அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்கத் துணை ராஜாங்கச் செயலாளா டொம் மாலினோவ்ஸ்கீ இந்தப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார். அரசாங்க அதிகாரிகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
ஜனநாயகத்தை வலுப்படுத்தல், வெளிப்படைத்தன்மை மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் ஆகியன தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. பல்வேறு முக்கியமான விடயங்கள் குறித்து இந்த விஜயத்தின் போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
முன்னாள் ரஸ்ய தூதுவரை கைதுசெய்ய இலங்கை மேற்குலக புலானய்வு அமைப்புகளின் உதவியை நாடியுள்ளது.
ரஸ்சியாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கண்டுபிடிப்பதற்கு இலங்கை அரசாங்கம் மேற்குலக நாடுகளின் புலானய்வு அமைப்புகளின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் உதவியை இலங்கை அரசாங்கம் கோரியுள்ளதா? என்பது குறித்து இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் பதிலளிக்க மறுத்துள்ளது. இது குறித்து இலங்கை அரசாங்கத்துடன் கேட்டறிந்துகொள்ளுமாறு தூதரகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆயுதவிற்பனையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள உதயங்கவை கண்டுபிடிப்பதற்கு மேற்குலகின் உதவிநாடப்பட்டுள்ளதாக பிரதிவெளிவிவகாரஅமைச்சர் அஜித்பெரேரா தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் நெருங்கிய உறவினரான அவரை விரைவில் கைதுசெய்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை உதயங்க குறித்து இலங்கை ரஸ்சியாவிடமிருந்து விபரங்களை கோரவில்லை என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதேவேளை உதயங்கவை தேடி சர்வதேச வேட்டையொன்றை நடத்துவதற்கு இலங்கையிடம் உரிய வளங்கள் இல்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள அதிகாரிகள் மேற்குலக நாடுகளால் அவரை இலகுவாக கண்டுபிடிக்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளன. மேலும் உக்ரைன்கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆயுதங்களை வழங்கியவர் என்பதால் அவர் எங்கிருக்கின்றார் என்பது மேற்குலக நாடுகளின் புலனாய்வு பிரிவினருக்கு தெரிந்திருக்கலாம் எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்
இலங்கையில் தாமரைக் கோபுரம் சீன இலத்தரனியல் உளவு காவலரண் – இந்தியா
இலங்கையில் நிர்மானிக்கப்பட்டு வரும் தாமரைக் கோபுரம் சீன இலத்தரனியல் உளவு காவலரணாக செயற்பட உள்ளதாக இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த மஹிந்த ராஜபக்ஸ அரசாங்க ஆட்சிக் காலத்தில் சீன உதவியுடன் தாமரைக் கோபுரம் நிர்மானிக்கப்பட்டு வருகின்றது.
சுற்றுலா அபிவிருத்தி மற்றும் தொடர்பாடல் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த தாமரைக் கோபுரம் அமைக்கப்பட்டு வருவதாக இந்திய பாதுகாப்பு தந்திரோபாய நிபுணர் அக்ஸர் ரோய் தெரிவித்துள்ளார்.
தெற்காசிய ஆய்வுக்குழு (SAAG) வின் உத்தியோகபூர்வ இணைய தளத்தில் இந்த விபரங்கள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளன. Read more