அவசர தேர்தல் முறை மாற்றம் துரோகச் செயலாகும்-மனோ கணேசன்-

manoஇந்த நாட்டில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தேவை பட்டியலில் முன்னுரிமை கொண்ட விடயம் அல்ல. உண்மையில் இது அதிகமாக தேவைப்பட்டது சில பெரும்பான்மை கட்சிகளுக்கும், சில பெரும்பான்மை சமூக அமைப்புகளுக்குமே. இதை நாம் புரிந்துக்கொண்டு, தேச நலன் கருதியும், ஐக்கியம் கருதியும் விட்டுக் கொடுப்புகளுடன் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க உடன்பட்டோம். இவ்விதம் புதிய ஜனாதிபதியையும், புதிய பிரதமரையும், புதிய அரசாங்கத்தையும் உருவாக்க பெரிதும் துணை வந்த எமக்கு இன்று துரோகம் இழைக்க பெரும்பான்மை கட்சிகளில் இருக்கின்ற சில சக்திகள் திட்டமிடுகின்றன என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தேர்தல் முறை மாற்றத்தை சட்டமூலமாக அவசர, அவசரமாக பாராளுமன்றத்தில் நிறைவேற்ற அனுமதியளிக்க முடியாது. இந்த அவசரம் இன்று அரசில் இணைந்துக் கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரிவிற்கே இருக்கின்றது. இது தொடர்பில் ஒரு அமைச்சரவை ஆவணத்தை இவர்கள் அமைச்சரவையில் சமர்பிக்க முயல்கிறார்கள். இதை அமைச்சரவை ஏற்றுக்கொள்ள கூடாது. இதை அமைச்சரவையில் உள்ள சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளின் தலைவர்களும், தமிழ், முஸ்லிம் அமைச்சர்களும் வலியுறுத்த வேண்டும். நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை நான்கு மணிக்கு இடம்பெறும் சிறு கட்சிகளின் கலந்துரையாடலில் இது தொடர்பாக விரிவாக ஆராய்ந்து எமது ஒருமித்த முடிவையும், அடுத்த கட்ட நடவடிக்கையும் தீர்மானிக்க திட்டமிட்டுள்ளோம்.

எமது ஒருமித்த தீர்மானத்தை நாம் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அறிவிப்போம். இந்த விடயத்தில் இந்நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு நியாயத்தை உறுதிப்படுத்த வேண்டிய கடப்பாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் இருக்கின்றது. இது தொடர்பில் தேவை ஏற்படும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டோம். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எதேச்சதிகாரமான தேர்தல் முறை மாற்றத்துக்கு நாம் உடன் பட முடியாது. நீண்டகாலத்துக்கு ஒருமுறை நடைபெறும் இந்த தேர்தல்முறை மாற்றத்துக்கு நாம் உடன்பட்டால், அது இந்நாட்டு தமிழ்பேசும் மக்களின் எதிர்காலத்தையே அழித்து, ஒழித்து விடும். எமக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்காமல் போய்விடும். எனவே இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொளும்படி அனைத்து சிறு கட்சிகளையும், பெரும்பான்மை கட்சிகளில் இருக்கின்ற தமிழ், முஸ்லிம் பிரமுகர்களையும் நாம் அழைக்கின்றோம் என மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.