இலங்கை-ஜப்பான் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை, சீனா இலங்கை பாதுகாப்பு விஸ்தரிப்பு-

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்படவுள்ளது. இந்த ஆண்டில் குறித்த சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளதாக இலங்கை ஜப்பான் வர்த்தக ஒத்துழைப்பு அமைப்பு அறிவித்துள்ளது. இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் நொபிதோ ஹோபோ தலைமையில் அண்மையில் இலங்கை – ஜப்பான் வர்த்தக ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போதே சுதந்திர வர்த்தக உடன்படிக்கை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இது இவ்விதமிருக்க இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பாதுகாப்பு தொடர்புகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளது. இதன் பொருட்டு சீனாவின் இலங்கைக்கான தூதுவர், இராணுவத் தளபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஏற்கனவே இலங்கையின் இராணுவத்தினர் சீனாவில் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இராணுவத் தொடர்புகளை மேலும் அதிகரித்துக் கொள்ளும் வகையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

19ஆவது திருத்தத்துக்கு ஜே.வி.பி ஆதரவு-

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு நாம் ஆதரவளிப்போம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரம் தொடர்பில் சில நல்ல விடயங்களுக்கு ஆதரவளிக்கும் நடைமுறையின் அடிப்படையில் 19ஆவது திருத்தத்தில் குறைபாடுகள் இருந்தாலும் அதனை ஆதரவளிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். 19ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிக்குமாறு அவர் ஏனைய கட்சிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான 20ஆவது திருத்ததுடன் 19 ஆவது திருத்தத்தை போட்டு முரண்பட்டுகொள்ள வேண்டாம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யோசனைகளை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூல திருத்தம் அவர்களின் விருப்பத்துக்கு மாறாக முன்வைக்கப்பட்டுள்ளது. ஆகையால் அதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற சகல கட்சிகளின் யோசனைகளுக்கு அமைவாக தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து தீர்மானிக்கவேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யோசனைகளுக்கு அனுமதியளிக்க முடியாது. அவர், சுதந்திர கட்சிக்கு பொறுப்பளிப்பதற்கு அப்பால், அவருக்கு வாக்களித்த 62 இலட்சம் மக்களுக்காக அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் செயற்படவேண்டும் என்று ரில்வின் சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வுபெற்றவர்களுக்கு மீண்டும் தொழில் வழங்கத் திட்டம்-

ஓய்வுபெற்றவர்களுக்கு மீண்டும் தொழில் வழங்கும் திட்டமொன்றை நடைமுறைபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஓய்வூதிய திணைக்களம் குறிப்பிடுகின்றது. ஓய்வுபெற்றவர்களின் திறன்களுக்கு ஏற்ற வகையில் பொருளாதார வளர்ச்சிக்காக அவர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ள எண்ணியுள்ளதாக, ஓய்வூதிய கொடுப்பனவு பணிப்பாளர் சுனில் ஹெட்டியாராச்சி தெரிவிக்கின்றார். குறிப்பாக அரச சார்பற்ற துறைகளிலும், சுயதொழில் முயற்சிகளிலும் அவர்களை ஈடுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதன்பொருட்டு 28 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதுடன், ஓய்வுபெற்றவர்களின் உற்பத்திகளை ஊக்குவிப்பதற்காகவும், விற்பனை செய்வதற்காவும் புதிதாக இணையதளமொன்றை ஆரம்பித்துள்ளதாகவும் பணிப்பாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீ.எஸ்.என் தொலைக்காட்சியின் முன்னாள் தலைவரிடம் விசாரணை-

சீ.எஸ்.என் தொலைக்காட்சி அலைவரிசையில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக பிரிவின் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட, இன்றுகாலை கொழும்பு, நிதி குற்றத்தடுப்பு பிரிவுக்கு சென்றுள்ளார். சீ.எஸ்.என். தொலைக்காட்சியின் ஆரம்ப நிறுவனராக ரொஹான் வெலிவிட்ட செயற்பட்டிருந்தார். குறித்த தொலைக்காட்சி அலைவரிசையை ஆரம்பிப்பதற்கு எவ்வாறு நிதி பெறப்பட்டது என்பது தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக ரொஹான் வெலிவிட்ட, நிதி குற்றத்தடுப்பு பிரிவுக்கு சென்றிருந்ததாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

அமெரிக்க இராஜாங்கச் செயலரின் இலங்கை விஜயம்-

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி, மே மாதம் 2ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஒருவர் இலங்கைக்கு இறுதியாக 1982 ஆம் ஆண்டே வருகை தந்திருந்தார். புதிதாக தெரிவாகியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்படுவதற்கு அமெரிக்கா எதிர்பார்ப்பதாக, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் கூறியிருந்தார். இந்நிலையிலேயே அவரது விஜயம் மே 2ஆம் திகதி அமையவிருக்கின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.