இலங்கையில் ஐ.நா. போதைப்பொருள் -குற்றவியல் தடுப்பு அலுவலகம்-

un unஐக்கிய நாடுகள் அமைப்பின் போதைப் பொருள் மற்றும் குற்றவியல் தடுப்பு அலுவலகம் ஒன்று இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்து சமுத்திரத்தை கேந்திரமாகக் கொண்டு உலக நாடுகளுக்கு போதைப் பொருள் விநியோகப்படுத்தை தடுப்பதே இதன் பிரதான நோக்கமாகும் ஐ.நா. போதைப்பொருள் மற்றும் குற்றவியல் தடுப்பு காரியால பிரதானி யூரி பெடட்டோவுக்கும் நீதிமன்ற அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பின் போதே இத்தீர்மானம் எட்டப்பட்டது. ஐ.நா.வின் போதைப் பொருள் தடுப்பு மற்றும் குற்றத்தடுப்பு சபையின் 13ஆவது உயர் மட்ட குழுக்கூட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை கட்டாரின் டோஹா நகரில் நடைபெற்ற போதே இத்தீர்மானம் எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கோட்டாபயமீதான கொலை முயற்சி, இருவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு-

gotabaya......பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்வதற்கு சூழ்ச்சி செய்தனர் என்ற குற்றச்சாட்டப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பிவைக்கும்படி கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட இருவரில் ஒருவர், புலிகள் இயக்கத்தின் உறுப்பினராவார். அவ்விருவரையும் எதிர்வரும் 18ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுபடி நோட்டீஸ் அனுப்புமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஐராங்கனி பெரேரா உத்தரவிட்டுள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்தே கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்வதற்கு சூழ்ச்சி செய்ததாக அவ்விருவர் மீதும் குற்றச்சாட்டப்பட்டிருந்தது. 2008ஆம் ஆண்டு அல்லது 2009ஆம் ஆண்டில், கோட்டபாய ராஜபக்ஷவை கொலை செய்வதற்கு முயன்றனர் என்று சுப்ரமணியம் செந்தூரன் மற்றும் இருகல் பண்டார ஜகத்சந்திர சமரசிங்க ஆகிய இருவர் மீதே இவ்வாறு குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

செனரத்தின் வங்கி கணக்கு விவரங்களை சி.ஐ.டியிடம் ஒப்படைக்க உத்தரவு-

courtsமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணியாட் தொகுதியின் பிரதானியான காமினி செனரத், அவரது மனைவி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் ஒன்பது பேரின் வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் 80 தொடர்பிலான கணக்குகள் குறித்த விவரங்கள் என்பவற்றை இரகசிய பொலிஸாரிடம் (சி.ஐ.டி) சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தின்போது காமினி செனரத், அரசாங்க நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக கிடைத்த முறைபாடு தொடர்பிலான அறிக்கையை இரகசிய பொலிஸார் நீதிமன்றத்தில் அறிக்கையிட்டனர். நிதி தூய்மையாக்கல் சட்டத்தின் கீழே இந்த முறைபாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் நிதி மோசடி பொலிஸ் பிரிவினால் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மயில் மாளிகை விவகாரம்: லியனகேவுக்கு அழைப்பு-

police ...கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் வருமாறு, இலங்கை தொழிலாளர் கட்சியின் தலைவரும் வர்த்தகருமான ஏ.எஸ்.பி.லியனகேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பீக்கொக் மாளிகையை (மயில் மாளிகை) வேறொருவருக்கு விற்பனை செய்வதற்கு முயற்சித்தமை தொடர்பில் தூய்மையான நிதிசட்டத்தின் கீழே வாக்குமூலமளிப்பதற்கு அவருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மயில் மாளிகையை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இரண்டு வருட குத்தகைக்கு ஓப்பந்தத்தின் அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த குத்தகை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் உடன்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் பீக்கொக் மாளிகையை யாருக்கும் விற்பனை செய்யவில்லை என லியகே மேலும் தெரிவித்துள்ளார்.

பூண்டுலோயாவில் தாயும் மகளும் படுகொலை-

murderநுவரெலியா, பூண்டுலோயா, டன்சினன் தோட்டம் அக்கர மலை பிரிவு தோட்டத்தில் தாயும் மகளும் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்யபட்டுள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவிக்கின்றனர். பூண்டுலோயா, டன்சினன் தோட்டம் அக்கர மலை பிரிவு தோட்டத்தில் 52 வயதான தாயும் 32வயதான மகளும் கொலை செய்யப்பட்டுள்ளனர். இக்கொலைச் சம்பவம் தொடர்பாக அக்குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் மேற்படி நபரை தேடி வருவதாகவும் பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி சம்பவத்தில் ஆண்டி பேச்சாய் (52) மற்றும் அவரது மகள் பெரியசாமி நித்தியகல்யாணி (32) ஆகிய இருவருமே கொலை செய்யப்பட்டுள்ளனர். ஸ்தலத்துக்கு விஜயம் செய்த நாவலப்பிட்டிய நீதிமன்ற நீதவான் எல்.கே.மகிந்த சடலங்களை பார்வையிட்டதுடன், சடலங்களை நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்ப உத்தரவிட்டுள்ளார். இக்கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸ் நிலைய உதவி காவல் துறை அத்தியட்சகர் ஜி.விமலதாச தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பம்பலபிட்டியவில் பெண்ணின் சடலம் மீட்பு-

dead.bodyகொழும்பு பம்பலப்பிட்டியிலுள்ள பிரபல பாடசாலையொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் சிற்றூழியரின் பிரேத பரிசோதனை இன்று நடைபெறவுள்ளது. நேற்று மாலை மீட்கப்பட்ட சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற 45 வயதான பெண் சிற்றூழியரின் சடலம் குறித்த பாடசாலையின் களஞ்சியசாலையில் இருந்து மீட்கப்பட்டது சில பணிகளுக்காக பாடசாலைக்கு சென்ற குறித்த பெண் வீடு திரும்பாததால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்போது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிருலப்பலன பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண்ணின் முகத்தில் தழும்புகள் காணப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 44வயது மதிக்கதக்க பெண்ணொருவரின் சடலத்தை, பம்பலபிட்டிய பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையின் களஞ்சியசாலையிலிருந்து மீட்டுள்ளதாக பம்பலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண்ணை கொலை செய்து, அவரது சடலத்தை மேற்படி இடத்தில் கொண்டுவந்து போட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். ஆடையற்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மேற்படி பெண், கடந்த 14ஆம் திகதி காணாமல் போயுள்ளார் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் பாலியல் துஸ்பிரியோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.

மகிந்தவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைப்பதற்கு எதிர்ப்பு-

parliamentபாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதன் பின்னரும் சுமார் 30 எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் இருந்தவண்ணம் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் தினேஸ் குணவர்தன, விமல் வீரவங்ச, பந்துல குணவர்தன உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்கும் தீர்மானத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தியே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர். ஜனாதிபதியும் பிரதமர் இந்த விடயம் குறித்து கலந்துரையாடி, சபாநாயகர் ஊடாக எழுத்துமூல வாக்குறுதியை அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த உறுதிமொழி கிடைக்கும் வரை சபையில் இருந்து வெளியேறப்போவதில்லை எனவும் இரவும் இங்கு இருக்கப போவதாகவும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உதயசிறியின் விடுதலை பற்றி அறிவிக்கப்படவில்லை-தாயார்-

udayasri mummyஉதயசிறியின் விடுதலை பற்றி தமக்கு இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லையென சீகிரியா மலையில் உள்ள கண்ணாடிச் சுவரில் தனது பெயரை எழுதிய குற்றத்திற்காக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் மட்டக்களப்பு சித்தாண்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறியின் தாய் எஸ்.தவமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், எனது மகள் உதயசிறிக்கு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் விரைவில் விடுதலை செய்யப்படுவார் எனவும் ஊடகங்களின் மூலம் அறிந்து கொண்டதுடன் எனது மகள் விடுதலையாகப் போகின்றார் என சில சகோதரர்களும் எனக்கு தெரிவித்திருந்தனர். எனினும் எப்போது எனது மகள் விடுதலையாகுவார் என்பது பற்றி இதுவரை எதுவும் எனக்கோ எனது குடும்பதிற்கோ தெரியாது. எனது மகளின் விடுதலைக்காக நான் காத்திருக்கின்றேன் என உதயசிறியின் தாயார் சின்னத்தம்பி தவமணி மேலும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் வீதி விபத்துக்களில் 11 பேர் உயிரிழப்பு-

accidentஇவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையான மூன்று மாத காலத்தில், கிளிநொச்சி மாவட்டத்தில் 42 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன் 11பேர் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சர் எட்மன் மகேந்திர தெரிவித்துள்ளார். கிளிநொச்சியிலுள்ள தனது அலுவலகத்தில் ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் 2012 ஆம் ஆண்டு 142 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன் 38பேர் விபத்துக்களில் உயிரிழந்துள்ளதுடன் 2013ஆம் ஆண்டு இடம்பெற்ற 198 விபத்துக்களில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற 198 விபத்துக்களில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், 2015 ஆம் ஆண்டின் கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் இடம்பெற்ற 42 விபத்துகளில் 11 பேர் உயிரிழந்துள்ளமை கடந்த காலத்தோடு ஒப்பிடுகையில் அதிகரித்த தொகையாகும். எனவே வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.