சபை அமர்வுகள் 27ஆம் திகதி வரை ஒத்திவைப்பு-

parliamentபாராளுமன்ற சபை நடவடிக்கைளை எதிர்வரும் 27ஆம் திகதிவரை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ ஒத்திவைத்துள்ளார். பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதை அடுத்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தை அடுத்துமே சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் 19வது அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் 27ஆம் திகதியே பாரா­ளு­மன்­றில் சமர்ப்பிக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது. இதேவேளை முழுமைபெறாத ஒழுங்கற்ற ஆடைகளில் நாடாளுமன்ற சபைக்குள் இரவொன்றைக் களிப்பதன் மூலம் நாடாளுமன்ற பாரம்பரியம் முறியடிக்கப்பட்டுள்ளது. இது, நாடாளுமன்ற வரலாற்றில் ஏற்படுத்தப்பட்ட கறையாகும் என தேசிய தொழிலாளர் சங்கம் சுட்டிக்காட்டியது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அழைத்தமைக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்திய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் நேற்றிரவு தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற எதிர்ப்பு நடவடிக்கை நிறைவு-

mahinda parliamentமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அழைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபாக்ஷவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்காது அவர் இருக்கும் இடத்திற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் சென்று விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டதாரர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்ற வீதியில் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் கைவிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன அளித்த வாக்குறுதியை அடுத்தே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது.

பாலபட்டபெந்தி சபாநாயகரிடம் முன்னிலையானார்-

balapatta bendiலஞ்ச மற்றும் ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் தலைவர் ஜகத் பாலபட்டபெந்தி நேற்றுமாலை சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் முன்னிலையாகினார். ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழவின் பணிப்பாளர் மற்றும் தலைவரை சபாநாயகரிடம் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணிப்பாளர் நாட்டை விட்டு வெளியேறியிருப்பதனால் அவருக்கு பதிலாக ஆணைக்குழுவின் தலைவர் மாத்திரம் நேற்று முன்னிலையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு அழைத்தமை தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு-

land slideநாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக 6 மாவட்டங்களில் 24 மணித்தியாலங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, கண்டி, காலி, களுத்துறை, மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாகவும் இது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது. இதேவேளை இலங்கையை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டிருக்கும் குழப்பமான வானிலை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மத்திய மலையகப் பகுதிகளில் அதிகூடிய மழைவீழ்ச்சி 150 மில்லிமீற்றர்வரை அதிகரிக்கும் என்றும் வெள்ளப்பெருக்குத் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர்களை கம்போடியாவுக்கு அனுப்பும் திட்டம் தாமதம்-

Australia-asylum-newஇலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்களை கம்போடியாவுக்கு அனுப்பும் அவுஸ்திரேலியாவின் திட்டம் தாமதமடைந்துள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்களை கம்போடியாவுக்கு அனுப்புவதற்கான ஆவணங்கள் இதுவரை தயாராகாதமையே இந்த தாமதத்திற்கான காரணம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலியாவின் கரையோர தடுப்பு முகாம்களான பப்புவா நியூ கினியா மற்றும் நவ்றூ தீவுகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் உள்ளிட்ட புகலிடக் கோரிக்கையாளர்களை கம்போடியாவுக்கு அனுப்ப கடந்த செப்டம்பரில் இணக்கம் எட்டப்பட்டிருந்தது. இதற்கமைய, புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிய முதலாவது விமானம் நேற்று கம்போடியாவிற்கு பயணிக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது இந்நிலையில், ஆவணங்கள் குறித்த நடவடிக்கைகள் நிறைவடையாததால் புகலிடக் கோரிக்கையாளர்களை கம்போடியாவுக்கு அனுப்பும் அவுஸ்திரேலியாவின் செயற்பாடு தாமதமடைந்துள்ளது.

கொத்மலை இரட்டைக் கொலைச் சந்தேகநபர் கைது-

arrest (30)நுவரெலியா மாவட்டம் பூண்டுலோயா, கொத்மலை பிரதேசத்தில் தாய் மற்றும் சகோதரியை கொலைசெய்து தலைமறைவாக சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். தலவாக்கலை பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தை பொலிஸார் சந்தேகநபரிடம் இருந்து மீட்டுள்ளனர். சந்தேகநபர் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நாடு திரும்பினார்-

basilமுன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ இன்று பிற்பகல் சுமார் 1.35மணியளவில் இலங்கையை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. பஷில் ராஜபக்சவை வரவேற்கும் பொருட்டு அரசியல்வாதிகள் உள்ளிட்ட அவரது ஆதரவாலர்கள் பலர் அங்கு திரண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது சகோதரரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்ததன் பின்னர் பஷில் ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெண்ணின் சடலத்தை பொறுப்பேற்க உறவினர்கள் மறுப்பு-

killedகொழும்பு, பம்பலப்பிட்டியில் உள்ள பிரபல பாடசாலையொன்றிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் சிற்றூழியரின் பூதவுடலை பொறுப்பேற்க உறவினர்கள் மறுத்துள்ளனர். சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் சிற்றூழியரின் பிரேத பரிசோதனை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நடைபெற்றதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கையில் மரணத்திற்கான காரணம் குறிப்பிடப்படவில்லை. மேலதிக ஆய்வுகளுக்காக உடற்பாகங்களை சட்ட வைத்திய அதிகாரி பெற்றுக்கொண்டுள்ளமையே இதற்கு காரணம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார் இதற்கமைய ஆய்வுகள் நிறைவுபெற்ற பின்னரே மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார் பிரேத பரிசோதனை அறிக்கையில் மரணத்திற்கான காரணம் உறுதிசெய்யப்படாத நிலையில் பூதவுடலை பொறுப்பேற்பதற்கு உறவினர்கள் மறுத்துள்ளனர். இதற்கமைய பூதவுடல் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பொலிஸ் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.