பசில் ராஜபக்ஸ பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் வாக்குமூலம்–
திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் வாக்குமூலமளித்துள்ளார். கடுவளை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு அமைய முன்னாள் அமைச்சர் இன்று பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு வருகைதந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறியுள்ளார். திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்ற சில கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த விசாரணைகளுக்காக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவிடம் வாக்குமூலம் பெற வேண்டியுள்ளதாக பொலிஸார் கடுவளை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டுப் பணத்தை கொண்டுசெல்ல முயன்ற இந்தியர் கைது-
சட்டவிரோதமாக வெளிநாட்டுப் பணத்தை நாட்டிலிருந்து கொண்டுசெல்ல முயற்சித்த இந்தியர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமானநிலைய சுங்கப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரது பயணப் பையில் மறைத்துவைத்து, வெளிநாட்டுப் பணத்தை நாட்டிலிருந்து கொண்டுசெல்ல முயற்சித்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார். அவரிடம் 15,500 அமெரிக்க டொலர்கள் இருந்துள்ளது. அவற்றின் பெறுமதி 20 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் அதிகமாகும். நாட்டிலிருந்து பாங்கொக் செல்ல முயற்சித்தபோது, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதுடன், அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதேவேளை, சட்டவிரோதமாக வெளிநாட்டுப் பணத்தை நாட்டிலிருந்து கொண்டுசெல்ல முயற்சித்த இலங்கையரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 23,750அமெரிக்க டொலர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன் பெறுமதி 31 இலட்சத்து 98 ஆயிரத்து 650 ரூபாவாகும். சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 25 வயதான சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சுங்கப்பிரிவு கூறியுள்ளது.
சென்.பீற்றர்ஸ் கல்லூரி ஊழியர் கொலை தொடர்பில் இருவர் கைது-
கொழும்பு, பம்பலப்பிட்டி சென்.பீற்றர்ஸ் கல்லூரியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த பாடசாலையின் காவலாளியும் கொலைசெய்யப்பட்ட பெண்ணை சந்திக்கச்சென்ற நபருமே சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் இன்று புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பம்பலப்பிட்டி சென்.பீற்றர்ஸ் கல்லூரியில் சிற்றூழியராக கடமையாற்றும் 44 வயதுடைய சூட்டி என்கிற கிருலப்பனையைச் சேர்ந்த பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாடசாலையின் களஞ்சிய அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இதேவேளை பிரேத அறிக்கையில் உயிரிழந்தமைக்கான காரணம் தெரிவிக்கப்படாமையால் குறித்த பெண்ணின் சடலத்தை உறவினர்கள் ஏற்க மறுத்தநிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவில் ஆணொருவரின் சடலம் மீட்பு-
முல்லைத்தீவு நந்திக் கடலில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நந்திக்கடலுக்கு நேற்று அதிகாலை மீன்பிடிக்க சென்ற ஒருவரே நேற்று மாலை சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். முள்ளியவளை கேப்பாபிலவு பகுதியை சேர்ந்த 36வயதான ஒருவரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சடலம் மீதான நீதவான் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், பிரேத பரிசோதனைகள் இன்று முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உலக பூகோள தினம் இன்றாகும்-
பூகோள தினம் (ஏர்த் டே) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 22ஆம் திகதி புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் 1970ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும். சூழலை பாதுகாப்பதற்காக ஒன்றிணைவோம் என்ற தொனிப்பொருளில் இந்த வருடம் உலக பூகோள தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. சூழல் மாசடைவதை தவிர்ப்பது தொடர்பில் மக்களை தெளிவுப்படுத்துவதே பூகோள தினம் அனுஷ்டிப்படுவதன் முக்கிய நோக்கம் என மத்திய சுற்றாடல் அதிகார சபை தலைவர் பேராசிரியர் லால் தர்மஸ்ரீ கூறுகிறார். அதற்கமைய, நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் மத்திய சுற்றாடல் அதிகார சபை கூறியுள்ளது.
லலித் வீரதுங்கவிடம் விசாரணை-
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லலித் வீரதுங்கமீது நிதி மோசடி குற்றச்சாட்டில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அவர் இன்றைய தினம் விசாரணைக்கு அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் கொடுக்கல் வாங்கல் மோசடி குறித்து லலித் வீரதுங்கவிடம் விசாரணை செய்யப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புன்னைக்குடாவில் ஆணின் சடலம் மீட்பு-
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைக்குடா கடலோரத்தில் இருந்து ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏறாவூர் பொலிஸாருக்கு இன்றுகாலை கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த இடத்துக்கு விரைந்த பொலிஸார் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலத்தை மீட்டுள்ளனர். சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களைக் பொலிஸார் கேட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
உப-பரிசோதகர் கொலை தொடர்பில் மனைவி கைது-
பண்டாரகம பொலிஸ் உப-பரிசோதகர் ஆர்.டப்ளியு பளிஹவதன கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அவருடைய மனைவி கைதுசெய்யப்பட்டுள்ளார். வழக்கு விசாரணைக்கு பொறுப்பாகவிருந்த பொலிஸ் உப-பொலிஸ் பரிசோதகர் கடந்த 7ஆம் திகதி, கழுத்து வெட்டபட்டு கொலை செய்யப்பட்டார். அவர், 10 இலட்சம் ரூபாய் குத்தகை அடிப்படையிலேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது. இக் கொலை தொடர்பில் அவரது மனைவி மற்றும் பாணந்துறை கோழிக்கடை உரிமையாளர், தெஹிவளையை சேர்ந்தவர் என மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மீரியபெத்தயில் மீண்டும் மண்சரிவு அபாயம்-
பதுளை, கொஸ்லாந்தை மீரியபெத்த பிரதேசத்தில் மீண்டும் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக கொஸ்லாந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீரியபெத்த அம்பிட்டிகந்த பிரதேசத்திலேயே இந்த அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக பெய்த அடைமழைக்காரணமாக கடந்த 20ம் திகதி, 11 குடும்பங்களைச் சேர்ந்த 28பேர் தற்காலிகமாக இடம்பெயர்ந்து அம்பிட்டிகந்த தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மண்சரிவு எச்சரிக்கையை குறைப்பதற்காக தியத்தலாவ, இராணுவ முகாமைச் சேர்ந்த படையினர் மழைநீர் முறையை வடிந்தோடும் வகையில் நடவடிக்கையை எடுத்துவருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகிந்த ராஜபக்ச சந்திப்பு-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான சந்திப்பு மே 1ம் திகதிக்கு முன்னர் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க இதனை தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய சில விடயங்கள் குறித்து இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்படவுள்ளது. அத்துடன், எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திபானது பொதுவான ஓர் இடத்தில் இடம்பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், இப் புண்ணிய தலத்தின் வளர்ச்சிக்காக ஆரம்ப காலத்தில் இக்கோவிலின் தர்மகர்த்தாவாக இருந்த திரு.பெத்தா நாயக்க கோபால நாயுடு என்பவரினால் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன.