பழைய பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் நடத்துமாறு கோரிக்கை-

mano19ம் திருத்தம் சட்டமாவதை தடுக்கும் இந்த பழைய பாராளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தலுக்கு செல்வதன்மூலம் புதிய பாராளுமன்றத்தை உருவாக்கி, ஜனாதிபதி தேர்தலில் நாம் பெற்றுள்ள மக்கள் ஆணையை நிறைவேற்றுமாறு அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஏற்பாட்டாளர்கள் மனோ கணேசன், அசாத் சாலி, விக்கிரமபாகு கருணாரத்ன ஆகியோர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கோரியுள்ளனர். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் உரையாற்றிய ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான மனோ கணேசன் கூறியதாவது,

சுடுநீரில் விழுந்த நண்டுகளை போல் நேற்று முதல் நாள் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் நடந்துக்கொண்டுள்ளார்கள். பானை நீரில் நண்டுகளை போட்டு அடியில் தீயை பற்ற வைத்தால், ஆரம்பத்தில் மிதமான நீரில் நண்டுகள் குதூகலமாக நடனமாடும். ஆனால், நீரின் உஷ்ணம் அதிகரித்தவுடன், இந்த நடனம் நின்று, ஒப்பாரி ஓலம் கேட்க தொடங்கும். இதுதான் அன்று மகிந்த ஆட்சியில் நடனமாடிய நண்டுகளுக்கு இன்று நடக்கின்றது.

எமது நல்லாட்சியின் பொருளாதார குற்றவியல் விசாரணை பிரிவு, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஆகியவற்றின் விசாரணைகள் இன்று, எட்டு முன்னாள் அமைச்சர்கள் தொடர்பில் முடிவுக்கு வந்துள்ளன. இவர்களில் சிலர் அடுத்த சில வாரங்களில் கைதாவார்கள். இந்த உண்மை இவர்களுக்கு தெரியும். இவர்களால் இன்று நாட்டை விட்டு தப்பி ஓடவும் முடியாது. அப்படியே ஓடினாலும், இன்று உலகில் இவர்கள் ஓடி ஒளியவும் முடியாது. இன்டர்போல் மூலம் மீண்டும் இங்கேயே கொண்டு வரப்படுவார்கள் என்பதும் இவர்களுக்கு தெரியும். 

தமது குற்றங்களுக்காக கூண்டோடு கூட்டில் அடைபடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது இவர்களுக்கு இன்று தெரிகிறது. பாராளுமன்ற சபையின் கௌரவத்தை சின்னாபின்னாபடுத்தும், இந்த சப்தமும், ஆர்ப்பாட்டமும் இதனால்தான் நடந்தது. எங்கள் மீது கை வைக்காதீர்கள். கை வைத்தால், பாராளுமன்றத்தை நடத்த விட மாட்டோம். நாட்டை நடத்த விட மாட்டோம். 19ம் திருத்தத்தை சட்டமாக்க விட மாட்டோம் என்றெல்லாம் சூடு தாங்க முடியாமல் இந்த நண்டுகள் இன்று கூவுகின்றன.

18ம் திருத்தத்தை ஆதரித்து மகிந்த ராஜபக்சவை நாட்டின் சர்வதிகாரியாக்கிய மகாபாவம் செய்த பாராளுமன்றமே இந்த பாராளுமன்றம். அன்றைய ஆளும் கட்சியில் இருந்தும், எதிர்கட்சியில் இருந்த விளக்கு வாங்கப்பட்ட சிலரும் சேர்ந்து மகிந்தவுக்கு முடி சூட்டினார்கள். இதில் ஒருசிலர் எங்களுடன் சேர்ந்து இன்று பாவமன்னிப்பு பெற்றுள்ளனர். மீதியுள்ள கூட்டத்தில் இருக்கின்ற எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் இனி மன்னிப்பு கிடையாது. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இவர்களுக்கு மறக்க முடியாத பாடத்தை கற்றுத்தர மக்கள் காத்திருக்கின்றனர்.

எனவே, நாட்டை பணயக்கைதியாக பிடித்து வைத்திருக்கும், இந்த பழைய பாராளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலுக்கு சென்று புதிய பாராளுமன்றத்தை அமைப்போம் என நாம் ஜனாதிபதி அவர்களிடம் கோரியுள்ளோம். அதையே இங்கும் கோருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.