நூறு நாள் வேலைத்திட்டம்! தமிழ் மக்கள் திருப்திப்படக் கூடிய வகையில் எதுவுமே நடைபெறவில்லை-

sithadthanஆட்சிக்கு வந்த புதிய அரசின் நூறு நாள் வேலைத் திட்டம் முடிவடையவுள்ள நிலையில் தமிழ் மக்கள் திருப்திப்படக் கூடிய வகையில் எதுவுமே நடைபெறவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் புளொட் தலைவருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசின் நூறுநாள் வேலைத் திட்டம் தொடர்பில் ஊடகவியியலாளர்கள் யாழ் செயலகத்தில் வைத்து சித்தார்த்தன் அவர்களிடம் கருத்துக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒட்டு மொத்த தமிழ் மக்களும் இணைந்து ஆட்சி மாற்றத்தை வேண்டி மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களித்து புதிய ஆட்சியமைக்க பெரும் உதவியாக இருந்துள்ளனர். குறிப்பாக கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அடக்கு முறைகளின் வெளிப்பாடாகவே மக்கள் மாற்றத்தை வேண்டியிருந்தனர். இதனை ஜனாதிபதித் தேர்தலிலும் வெளிப்படுத்தி மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களித்தனர். இதனால் புதிய ஆட்சியொன்றும் அமைக்கப்பட்டது. அத்தோடு பல்வேறு நம்பிக்கைகளின் அடிப்படையில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியிலேயே தமிழ் மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்களித்திருந்தனர். இந்நிலையில், ஆட்சியமைத்த புதிய அரசும் நூறுநாள் திட்டம் என்று கூறி மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. இதில் தென்னிலங்கை மக்களுக்கு அரசாங்கம் பலதைச் செய்திருந்தாலும் தமிழ் மக்களுக்கு பெரிதாக எதனையுமே செய்யவில்லை.அதாவது நம்பிக்கையுடன் வாக்களித்த மக்கள் திருப்திப்படக் கூடிய வகையில் நூறுநாள் திட்டம் நடைபெறவில்லை. ஆனால் சில ஆரம்பங்கள் நடைபெற்று இருக்கின்றன. குறிப்பாக நீண்டகாலமாக இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த பிரதேசங்களில் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டு மக்கள் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர். இதனைத் தவிர தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்றக் கூடிய அல்லது பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய வகையில் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதனால் இத் திட்டம் முடிவடைய இருக்கின்ற அதேவேளையில் இனிமேலும் தமிழ் மக்களுக்கு அரசாங்கம் ஏதாவது செய்யுமென்று நம்பிக்கையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அரசியல் கைதிகளின் விடுதலை,காணமாற்போனவர்கள் கண்டறியப்படவேண்டும், இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட்டு மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட விடயங்களையே செய்ய வேண்டுமென்று நாம் அரசிடம் கோரியிருந்தோம். ஆனால் அவற்றில் பலதை அரசாங்கம் செய்யத் தவறிவிட்டது. குறிப்பாக காணாமல் போனோர் விடயத்தில் அரசாங்கம் இதுவரையில் எந்தவித ஆக்க பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. இத்தகைய விடயங்களை அரசாங்கம் கட்டாயம் செய்துகொடுக்க வேண்டும்.

இதனை நம்பியே மக்கள் வாக்களித்து புதிய ஆட்சியமைப்பதற்கு பெரும் பங்காற்றியிருக்கின்றனர். ஆகவே அவர்களின் கோரிக்கைகளுக்கு அமைய இவற்றைச் செய்து கொடுக்க வேண்டுமென்றே தற்போது மக்கள் எதிர்பார்க்கின்றனர். இந் நிலையில் இதனைச் செய்யவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நாமும் மீண்டும் அரசிடம் மீண்டும் கோரிக்கை முன் வைக்கின்றோம் என்று சித்தார்த்தன் மேலும் தெரிவித்தார்.