நாட்டைப்பற்றி சிந்தித்து 19க்கு கை உயர்த்துங்கள்-ஜனாதிபதி-
ஜனநாயகத்தையும் மக்களுக்கான சுதந்திரத்தையும் எதிர்காலத்திலும் பாதுகாப்பதற்காக நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார். நூறு நாட்கள் திட்டத்தின் நிறைவு நாளான நேற்று இரவு, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போதே ஜனாதிபதி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.19ஆவது திருத்தத்துக்கு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அத்தனை உறுப்பினர்களும் ஆதரவு வழங்குவார்கள் என்ற முழுமையான நம்பிக்கை எமக்கு உள்ளது. தேர்தல் விஞ்ஞாபனத்தை மறந்து நாம் ஒருபோதும் செயற்படவில்லை. இனியும் அவ்வாறு செயற்படப்போவதுமில்லை. மக்களுக்கான அனைத்து வாக்குறுதிகளையும் ஓர் அணுவும் பிசகாமல் நிறைவேற்றுவதே எமது நோக்கம். அரசாங்கம் 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் எதனைச் சாதித்துள்ளது என்றும் என்னை ஆளுமையற்ற ஒருவன், செயற்பட முடியாத ஒருவன் என்றும்கூட இக்காலங்களில் விமர்சனங்கள் எழுகின்றன. அவ்வாறு கூறுபவர்களுக்கு நான் கூற விரும்புவதெல்லாம், கடந்த 8ஆம் திகதி நான் ஜனாதிபதியாகப் பதவியேற்ற போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றியுள்ளேன். மீதமானவை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்பதையே. இலங்கையின் வரலாற்றில் அனைத்து கட்சிகளையும்
ஒரே நோக்கத்தின் கீழ் கொண்டுவர எம்மால் முடிந்துள்ளது. இலங்கையிலிருந்து பிரிந்து கிடந்த வெளிநாடுகளை மீள நாட்டோடு ஒன்றிணைக்க முடிந்துள்ளது. நாம் முன்னெடுக்கும் அத்தனை செயற்பாடுகளுக்கும் சர்வதேசத்தின் முழுமையான ஆதரவு தற்பொழுது கிடைத்து வருகிறது. சர்வதேச ரீதியில் இன்று எமக்கு எதிரிகள் இல்லை. நான் பதவியேற்றதும் முதலில் எமது அயல்நாடான இந்தியாவுக்கு விஜயம் செய்தேன். பின்னர் பிரித்தானியா சென்றேன். அங்கு பிரதமர், பாதுகாப்புச் செயலாளர், மகாராணி உட்பட பிரதானிகளை சந்தித்தேன். தொடர்ந்து சீனா சென்றேன். பாகிஸ்தான் சென்றேன். இந்நாடுகளின் விஜயமானது எமது வெளிநாட்டு நட்புறவுக் கொள்கையை நிலைநாட்டுவதற்கான சந்தர்ப்பங்களாகும். நாம் சர்வதேசத்தை இந்த குறுகிய காலத்தில் வென்றுள்ளோம். அது இலங்கையின் அரசியல் வரலாற்றில் நாம் பெற்றுக்கொண்டுள்ள பெரும் வெற்றியாகும். இலங்கையைப் பொறுத்தவரை தலைவர்களின் தவறுகள் ஐம்பது வீதமாக குறிப்பிடப்பட்டாலும், மீதம் 50 சதவீதத் தவறுகள் நடைமுறையில் இருந்த கொள்கைகளிலேயே தங்கியுள்ளது.
கோடிக்கணக்கான ரூபாய்களை செலவிட்டு தலைவர்கள் தம்மை உயர்த்திக்காட்டுவது முனைப்புடன் செயற்பட்ட வரலாறுகள் உண்டு. பணத்தாலன்றி குறிக்கோளிலும் நோக்கத்திலும் கொள்கையிலும் அரசியல் ரீதியான வளர்ச்சியே முக்கியமானது. இந்த யுகத்தில் நாம் அதை செய்துள்ளோம். 1948ஆம் ஆண்டு சுதந்திரத்தின்போது நாம் எதிர்பார்த்த சுதந்திரமன்றி தற்போதைய காலத்துக்குப் பொருத்தமான சுதந்திரம் எமக்கு அவசியமாகவுள்ளது. அதனை நாம் தற்போது செயற்படுத்தி வருகின்றோம். அரசியல் கட்சிகளும் மக்களும் ஒரே நோக்கத்துடன் செயற்பட்ட இப்படியொருகாலம் இதற்கு முன்னர் இருந்ததில்லை. உள்நாட்டுப் பிரச்சினைகளில் அனைவரும் தெளிவுபெற வேண்டியுள்ளது.
மீண்டும் இந்த நாட்டில் யுத்தம் ஒன்று இடம்பெறாத வகையில் பார்த்துக்கொள்வது எமது அனைவரதும் பொறுப்பாகும். அத்தகைய சூழலைக் கட்டியெழுப்புவதற்கு அனைத்து சமூகம் மத்தியிலும் சகோதரத்துவத்தை கட்டியெழுப்ப வேண்டியது முக்கியமாகும். அரசியலில் எமக்கு எதிராகச் செயற்படுபவர்கள் சர்வதேச வலையமைப்புகளின் ஊடாகவும், ஊடகங்களின் ஊடாகவும் மிக மோசமாக பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். வடக்கில் இராணுவத்தினரைக் குறைத்துள்ளோம் என்றும் அங்கிருந்து இராணுவத்தை எடுத்துவிட்டோம் என்றும் சம்பூரில் புலிகளுக்கு காணிகளை வழங்கியுள்ளோம் என்றும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
சிங்கள மக்களைவிட அதிகமான உரிமைகளை தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் வழங்கியிருப்பதாக பிரசாரங்கள் கிளப்பப்படுகின்றன. ஒருசில அடிப்படைவாதிகளே இத்தகைய பொய் பிரசாரங்களை உலகிற்குத் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு செயற்பட வேண்டாம் என்று நான் அவர்களை கேட்டுக்கொள்கிறேன். வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களை திசைதிருப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. நாம் ஒன்றைத் தெளிவாகக் கூறவேண்டும் யுத்தம் நடைபெற்ற காலங்களில் வடக்கு, கிழக்கு மட்டுமன்றி தெற்கிலும் கொழும்பு நகரிலும் கூட இராணுவம் தனியார் இடங்களை பாதுகாப்புக்கு எடுத்துக்கொண்டிருந்தன.
கொழும்பு ஜனாதிபதி மாளிகைக்கு அருகிலும், அலரிமாளிகையைச் சுற்றியும் தனியாருடைய காணிகள் வீடுகள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பெற்றுக்கொண்டிருந்தனர். அந்த தனியார் காணிகளை தேசிய பாதுகாப்புக்கு எவ்வித பங்கமுமின்றி திருப்பிக் கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது? அந்த காணிகளை உரிமையாளர்களுக்கு மீண்டும் கொடுப்பதில்லையா?. எனினும், இச்செயற்பாடு தொடர்பில் தவறான பிரசாரங்களே முன்னெடுக்கப்படுகின்றன.
சகல துறைகள் தொடர்பிலும் நாம் தெளிவான கொள்கைகளை கொண்டுள்ளோம். அது மட்டுமன்றி அரச வளங்களை மீண்டும் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் ஜனாதிபதி செயலணியொன்றை உருவாக்கியுள்ளோம். முறையற்ற விதத்தில் வெளிநாட்டு வங்கிகளில் வைப்புச் செய்துள்ள நாட்டுக்குச் சொந்தமான பணத்தை மீளப்பெற்றுக்கொள்ள ஜனாதிபதி செயலணி மூலம் நடவடிக்கை எடுப் போம். தேசிய சர்வதேச ரீதியில் அதற்கான ஒத்துழைப்புகளைப் பெற்றுக்கொண்டு இந்த நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொள்வோம் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)