கொம்மாதுறையில் மோட்டார் குண்டு மீட்பு-
மட்டக்களப்பு, ஏறாவூர், கொம்மாதுறை படை முகாமுக்கு அருகிலிருந்து இன்றுபகல் மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி முகாமுக்கு அருகிலுள்ள சித்தி விநாயகர் வித்தியாலய விளையாட்டுத் திடலைச் சூழவுள்ள முட்கம்பி வேலிப் பற்றைக்குள்ளேயே இந்த மோட்டார் ஷெல் காணப்பட்டுள்ளது. ஷெல் காணப்படுவதாக தங்களுக்கு கிடைத்த தகவலின்படி உடனடியாக ஸ்தலத்துக்குச் சென்று மோட்டார் குண்டை மீட்கும் பணியில் ஈடுபட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். குண்டு செயலிழக்கச் செய்யும் படை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு இந்த மோட்டார் ஷெல் மீட்கப்பட்டது. குண்டு செயலிழக்கச் செய்யும் படையினர் ஷெல்லை மீட்டு, பாதுகாப்பாக செயலிழக்கச் செய்வதற்காக அங்கிருந்து கும்புறுமூலை படை முகாமுக்கு எடுத்துச் சென்றனர். இது விடயமாக ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
நேபாளத்தல் 7.9 ரிச்டர் அளவில் நில நடுக்கம்-
நேபாளத்தில் ஏற்பட்ட 7.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். நேபாள தலைநகரான காத்மண்டுவிலிருந்து 50 மைல் தூரத்திலுள்ள பகுதியில் 7.9 ரிச்டர் அளவிவான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வுமையத்தை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆறு மைல் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம். டெல்லி, சிக்கிம், லக்னோ, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட இந்திய நகரங்களிலும் உணரப்பட்டுள்ளது. டெல்லி புறநகர் பகுதியான நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 வினாடிகள் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தில் 400ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாமென அஞ்சப்படுகின்றது.
கூரையிலிருந்து ரீ56 ரக துப்பாக்கி மீட்பு-
கல்முனை நற்பிட்டிமுனை சிவசக்தி வித்தியாலயத்தின் உட்கூரைக்குள் இருந்து ரீ56 ரக துப்பாக்கி ஒன்றை, இன்றுகாலை மீட்டுள்ளதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாடசாலைக் கூரையின் உடைந்த ஓடுகளைச் சீர்செய்யும் நடவடிக்கைகளில் தாம் ஈடுபட்டிருந்த பொழுது மேற்படி துப்பாக்கி கூரைக்குள் கிடப்பதை தச்சன் தனக்குத் தெரியப்படுத்தியதாக பாடசாலை அதிபர் எஸ். சபாரெத்தினம் குறிப்பிட்டுள்ளார். உடனடியாக இவ்விடயம் கல்முனைப் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தப்பட்டதையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் துப்பாக்கியை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட துப்பாக்கி பழைமைபட்டுப் போயிருந்ததாகத் தெரிவித்த பொலிஸார், இது பற்றி மேலதிக விசாரணைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்க க்ரீன்கார்ட் லோட்டரியை பயன்படுத்தி மோசடி-
அமெரிக்காவினால் வருடாந்தம் நடத்தப்படுகின்ற க்ரீன்காட் லோட்டரி சீட்டிழுப்பை பயன்படுத்தி, மோசடிகள் இடம்பெறுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க தூதரகத்தின் சிரேஷ்ட்ட தொடர்பாடல் அதிகரி செலி ஸ்ரேன் இதனை தெரிவித்தார். இந்த சீட்டிழுப்பில் வெற்றிபெற்றதாக கூறி, சிலர் போலியான முறையில் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டும், மின்னஞ்சல்களை அனுப்பியும் நிதி மோசடியில் ஈடுபடுகின்றனர். எனினும் இந்த சீட்டிழுப்பில் வெற்றிப்பெற்றுள்ளமை குறித்து றறற.னஎடழவவநசல.ளவயவந.பழஎ என்ற அமெரிக்காவின் க்ரீன்காட் சீட்டிழுப்புக்கான உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் மாத்திரமே தெரிந்துக் கொள்ள முடியும். இந்த இணைத்தளத்தை தவிர மாற்று வழிகள் எவையும் இல்லை. எனவே இதனை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பில் மிகுந்த அவதானமாக இருக்குமாறு அவர் எச்சரித்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு அமைச்சு ஒத்துழைக்கவில்லை-ஆணைக்குழு-
முன்னாள் பாதுகாப்பு அமைச்சும், நீதி அமைச்சும் காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதியின் ஆணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்கி இருக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. காணாமல் போனோர் தொடர்பில் முறைபாடுகளை பதிவு செய்துவரும் பரணகம ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. காணாமல் போனோர் குறித்த விசாரணையின்போது, சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், அகதிகளாக சென்றவர்கள் போன்றவர்களின் தகவல்கள் கோரப்பட்டிருந்தது. எனினும் அது குறித்த தகவல்களை வழங்க இரு அமைச்சுக்களும் தவறியுள்ளதாக அவ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதேவேளை வடமாகாணத்தில் பதிவுசெய்யப்பட்ட முறைபாடுகளில் 60 சதவீதமானவை புலிகளுக்கு எதிரானவை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இலங்கையின் பிரகாசமான மாற்றம்-
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம், பிரகாசமான அலையை ஏற்படுத்தி இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக நியமனம் பெற்றுள்ள கலாநிதி ரொஹன் பெரேராவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது பான் கீ மூன் இதனைக் கூறியுள்ளார். தற்போதைய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையுடனும் ஏனைய சர்வதேச நாடுகளுடன் நல்லுறவை பேணி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இலங்கையின் முக்கிய செயற்பாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்றும் பான் கீ மூன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்-
கிளிநொச்சி மாவட்டதில் இன்று அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி இருந்தனர். குறித்த அரச சார்பற்ற நிறுவனத்தில் ஆட்குறைப்பு செய்யப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இந்த நிறுவனம் ஏற்கனவே 300 பேரை ஆட்குறைப்பு செய்திருந்ததாகவும் தற்போது மேலும் 400 பேரை ஆட்குறைப்பு செய்யவிருப்பதாகவும் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் தெரிவித்துள்ளனர்.
400 இலங்கைப் பிரஜைகளுக்கு இரட்டை பிரஜாவுரிமை-
வெளிநாட்டிலுள்ள 400 இலங்கைப் பிரஜைகளுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்குவதற்கு பொது அமைதிக்கான அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 30ம் திகதி அவர்களுக்கான இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். இரட்டை பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொள்வதற்கு மேலும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். விசேட குழுவொன்றின் மூலம் குறித்த விண்ணப்பங்கள் பரீசீலிக்கப்படுவதாகவும் பொது அமைதிக்கான அமைச்சர் ஜோன் அமரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்
யாழில் மலசலகூடத்தில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு-
யாழ். விக்டோரியா வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து பழைய வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டின் மலசல கூடத்தினை துப்பரவு செய்யும் போது, பழைய வெடிபொருட்கள் இருப்பதைக் கண்டு வீட்டு உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். அந்த தகவலின் பிரகாரம் படையினர் விரைந்து வந்து இதனை மீட்டுள்ளனர்.