நேபாள நிலச்சரிவின் உயிரிழப்பு 1950ஐயும் கடந்தது-

nepal nepalஆயிரத்து 950ற்கும் மேற்பட்டவர்களை காவுகொண்ட நேபாள பூமி அதிர்வையடுத்து மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. 80 வருட கால இடைவெளிக்குப் பின்னர் நேபாளத்தில் ஏற்பட்டுள்ள இந்த இயற்கை அனர்த்தம் பெரும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளன. இதிலிருந்து நேபாள மக்களை வளமை நிலைக்கு கொண்டு வருவதற்கான உதவி மற்றும் ஒத்தாசைகளை வழங்க பல நாடுகள் முன்வந்துள்ளன. இடிபாடுகளுக்கு இடையே இருந்து மேலும் சடலங்கள் மீட்கப்படுவதன் காரணமாக மரணித்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நில அதிர்வு காரணமாக இமயமலை சாரலில் உள்ள மக்கள் குடியிருப்புக்களை சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 1934ஆம் ஆண்டு நேபாளத்தை தாக்கிய நில அதிர்வின் போது, எட்டாயிரத்து 500 பேர் வரை பலியாகியமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதேவேளை நேபாளத்தில் மீண்டும் 6.7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நேபாளம் தெற்கு கோடாரி எனுமிடத்திலேயே இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் 19ம் திருத்தத்துக்கு எதிர்ப்பு-

tna (4)19ம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளிக்கும் தீர்மானத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் இந்த கோரிக்கையை கட்சித் தலைமையிடம் முன்வைத்துள்ளனர். தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வை பெற்றுக் கொடுக்கவில்லை என சிவசக்தி ஆனந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான சந்தர்ப்பத்தில் அரசாங்கம் கொண்டுவரும் திருத்தச் சட்டத்தை ஆதரிக்காது, அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் கண்காணிக்க வேண்டும் என இவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமைக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.

முழு தலைகவசம் மீதான தடைக்கு எதிராக போராட்டம்-

helmetமுழுமுகத்தை மூடும் தலைகவசம் அணிவதற்கு தடைவிதிக்கும் சட்டத்துக்கு எதிராக கண்டியில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. கண்டி கெட்டம்மே விளையாட்டு மைதானத்தில் இருந்து உந்துருளிகளில் பேரணியாக சென்ற உந்துருளி உரிமையாளர்கள், இந்த போராட்டத்தை நடத்தினர். அவர்கள் முழுமையாக தலைகவசத்தை அணிந்தவாரே இப்போரட்டத்தை நடத்தியிருந்தனர். கடந்த 2ம் திகதி இந்த சட்டம் அமுலாக்கப்பட்டது. எனினும் இந்த சட்டத்துக்கு எதிராக இரண்டு உந்துருளி சாரதிகள் முன்வைத்த மனுவின் அடிப்படையில், மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த சட்டத்திக்கு நாளை மறுதினம் வரையில் இடைக்கால தடை உத்தரவை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு முன்னர் கொழும்பிலும் இவ்வாறான போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லை – அனந்தி சசிதரன்-

ananthiஇலங்கை அரசாங்கத்தின் மீது இன்னும் நம்பிக்கை ஏற்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின், வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதும், தமிழ் மக்களுக்கான குறிப்பிடத்தக்க நன்மைகளை அவதானிக்க முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார். போதுமான அளவு காணிகள் விடுவிக்கப்படவில்லை. அரசியல் கைதிகளை விடுவிக்க சற்றேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. இந்த நிலையில் புதிய அரசாங்கத்தின் மீது தமக்கு நம்பிக்கை ஏற்படவில்லை என வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய இராணுவத் தளபதி இலங்கைக்கு விஜயம்-

indian armyஇந்திய இராணுவ தளபதி ஜெனரல் தல்பீர் சிங், நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இராணுவ தளபதி லுத்தினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவின் அழைப்பின் பேரில், இந்திய இராணுவ தளபதி மற்றும் ஐந்துபேர் கொண்ட குழு இலங்கை வருகின்றது. இலங்கை – இந்தியாவுக்கிடையிலான சகோதரத்துவம் மற்றும் ஒத்துழைப்புகளை மேலும் விரிவாக்கும் வகையில் தல்பீர் சிங்கின் விஜயம் அமையவுள்ளது. இந்த விஜயத்தின்போது அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ராஜாங்க பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இலங்கைக்கான இந்திய தூதுவர், பீல்ட மார்ஷல் சரத் பொன்சேகா, பாதுகாப்பு படைகளின் பிரதானி, விமான மற்றும் கடற்படை தளபதி ஆகியோரை சந்திக்கவுள்ளார். இதனையடுத்து, நாடு முழுவதுமுள்ள பாதுகாப்பு படைகளின் மத்திய நிலையங்கள் சிலவற்றுக்கு அவர் விஜயம் செய்யவுள்ளதுடன் கண்டி, காலி, அநுராதபுரம் பகுதிகளுக்கும் செல்லவுள்ளார்.

நேபாளத்திலிருந்து 35 இலங்கையர்களை அழைத்துவர ஏற்பாடு-

gihan seniviretneநேபாளத்திலிருந்து நாடு திரும்புவதற்கு 35 இலங்கையர்கள் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர்களை இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விமானப்படை ஊடக நிறைவேற்று அதிகாரி வின்ங் கொமாண்டர் கிஹான் செனவிரட்ன தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் ஊடகமையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, இதனை அவர் கூறியுள்ளார். நாடு திரும்ப விரும்பும் 35 இலங்கையர்களும் அங்குள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். நோபாளத்தில் நேற்று இடம்பெற்ற பூமியதிர்வினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானம், வைத்தியர்கள் மற்றும் முப்படை வீரர்கள் அடங்கிய குழுவுடன் அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜே.வி.வி சந்திப்பு-

maithripala3மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை இந்த சந்திப்பு நடைபெற்றதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். 19வது திருத்தச் சட்டம் மற்றும் எதிர்வரும் காலங்களில் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாக டில்வின் சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பொது மன்னிப்பு வழங்கியும் சிறையில் வாடும் உதயசிறி-

uthayasiriஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியும் இதுவரை எனது மகள் உதயசிறி விடுதலை செய்யப்படாதது பெரும் கவலையளிக்கின்றது என, சிகிரியா மலையில் எழுதிய குற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவித்துவரும் மட்டக்களப்பு – சித்தாண்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறியின் தாய் எஸ்.தவமணி தெரிவித்துள்ளார். சிகிரியா மலையில் எழுதிய குற்றத்திற்காக அநுராதபுரம் சிறைச்சாலையில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் உதயசிறியை அவரது தாய் தவமணி கடந்த வியாழக்கிழமை சென்று பார்த்தார். இதன்போது தன்னை விரைவாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள் என மகள் உதயசிறி தன்னிடம் மன்றாடியதாகவும் தாய் தவமணி குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி எனது மகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கியதாக கூறியும் இதுவரை உதயசிறி விடுதலை பற்றி எதுவும் அறிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக எந்தவொரு அறிவித்தலும் அநுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் வரவில்லை என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்ததாக தாய் தவமணி மேலும் கூறியுள்ளார்.

சி.பி.ரட்னாயக்க மீண்டும் மஹிந்தவுக்கு ஆதரவு-

ratnaikeபொதுநிர்வாக இராஜாங்க அமைச்சர் சி.பி.ரட்னாயக்க, நேற்று நுவரெலியாவில் வைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வரவேற்றுள்ளார். முன்னர் அவர் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்கினார். பின்னர் தேசிய அரசாங்கத்தின் கீழ் கடந்த மார்ச் மாதத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் புதிய அரசாங்க அமைச்சரவையில் இணைந்து கொண்டார். அதற்கு பின்னர் அவர் மஹிந்தவுக்கு ஆதரவாக முக்கிய நிகழ்வுகள் எதிலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில் நேற்று அவர் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவை நுவரெலியாவில் வைத்து வரவேற்றுள்ளார்.

யாழ். வடமராட்சியில் ஒருவர் கொலை-

murderயாழ். வடமராட்சி பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சம்பவத்தில் அல்வாய் வடக்கு நக்கீரன் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான செந்தூரன் (வயது44) பொல்லால் கடுமையாக தாக்கியதையடுத்து உயிரிழந்துள்ளார். மேலும் தாக்கப்பட்டவரை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் போது வழியிலேயே உயிரிழந்துள்ளார். சடலம் மந்திகை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் நடாத்தப்பட்டு வருவதாகவும், இரு தரப்பினர்களுக்கிடையே நிலவிய நீண்டகால பகையே இக்கொலைக்காண காரணமாக இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.