Header image alt text

சூரிச்சில் நடைபெறவுள்ள மே தின ஊர்வலத்தில் ‘புளொட்’ பங்கேற்பு-

siss may dayசுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில்; சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள் மற்றும் உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்களும் எதிர்வரும் மே 01ஆம் திகதி (01.05.2015) வெள்ளிக்கிழமை அன்று கலந்து கொண்டு நடத்தும் தொழிலாளர் தின (மே தினம்) நிகழ்வினில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சுவிஸ் கிளையினரும் பங்கேற்று உரிமைக்குரல் கொடுக்கவுள்ளனர்.

இந்த நிகழ்வின்போது தமிழ் இனத்தின்; பிரச்சினைக்கு உரிய அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், காணாமற் போனோர் விடயம் தொடர்பில் உரிய தீர்வு காணப்படல் வேண்டும். இடம்பெயர்ந்துள்ள மற்றும் மீள்குடியேறிய மக்களின் அடிப்படை உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அனைத்து அதிகாரங்களும் உழைக்கும் மக்களுக்கே போன்ற கோரிக்கைகள் அடங்கிய சுலோகங்களை தாங்கிய வண்ணம் கழக உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், மற்றைய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என பலரும் மேதின நிகழ்வினில் பங்கேற்கவுள்ளனர்.

காலம்: 01.05.2015 வெள்ளிக்கிழமை காலை 09.00 மணி

இடம்.. சூரிச் பிரதான புகையிரத நிலையத்துக்கு அண்மையில் உள்ள (சீல் போஸ்டுக்கு) LAGER Strasse எனும் இடத்தில் ஊர்வலம் ஆரம்பித்து BüRKLI Platz  இல் முடிவடையும்.

இந்நிகழ்வில் உரிமைகளுக்காக இணைந்து குரல்தர அனைவரையும் அணிதிரளுமாறு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சுவிஸ் கிளையினராகிய நாம் அன்போடு அழைக்கின்றோம். நன்றி.

தொடர்புகளுக்கு…076.5838410 – 079.824153 – 079.6249004 – 077.9485214

அனைத்துலக தொழிலாளர் தினம் -2015

mrs ainkaran (7)இன்றைய இந்நாள் வரலாற்று ரீதியன பெருமை மிக்க நாள். தொழிலாளர்களின் உரிமைகள் வென்றெடுக்கப்பட்ட புனித நாள். இவ் நாள் ஒவ்வோர் தொழிலாளர்களின் உன்னதமான தியாகத்தின் திருநாள் இந் நன்நாளில் இன்றும் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு உள்ள தொழிலாளர் உரிமைகள் வென்றெடுக்க அனைவரும் பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைய வேண்டும். இன்றுவரை அழிக்கப்பட்டு இடுகாடு ஆக்கப்பட்ட எமது தாயகத்தின் பல பாகங்களிலும் தாக்கப்பட்டு தொழில் இழக்கப்பட்ட தொழிலாளர்கள் மீண்டும் தமது தொழில் உரிமைகளைப் பெறவும் திட்டமிட்டு கையகப்படுத்தப்பட்ட எமது புனிதமான மருத நிலங்கள் மீண்டும் மலர்ச்சி பெறவும் பரம்பரையாகவும் தலைமுறையாகவும் எமது என்று மார் தட்டிய நெய்தல் எமக்காகவும் கெடிய யுத்தத்தின் வாயிலாக அழிக்கப்பட்ட முல்லைகளும் அவற்றின் பசுமைகளும் மீண்டும் செழிக்கவும் எமது நிலம் எமது உரிமை என்ற உயரிய உன்னதமான கோசங்கள் வான் வெளிகளுக்கு அப்பால் எம் காவிய நாயகர்களின் காதுகளில் ஒலித்திட ஒன்றுபட அனைவரும் எழுந்து வாருங்கள்.

என்றும் தமிழ் அன்னையின் புதல்வியாய்

திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், தவிசாளர், வலி மேற்கு பிரதேச சபை.

யாழ் மாவட்ட அபிவிருத்தி உதவியாளர் ஒன்றியத்தின் மேதின அறைகூவல்-

tyttஅரச சேவையில் நீண்ட பயணத்தை நோக்கி தேசத்தின் அபிவிருத்திக்கும் மக்களுக்குமான உன்னத பணியை கடந்த 10 வருடங்களாக முன்னெடுத்துவரும் அபிவிருத்தி உதவியாளராகிய நாம், இன்று உழைக்கும் வர்க்கமாகிய உலக தொழிலாளர்களை போற்றி வணங்கும் புனித தினமாகிய மே 01ம் நாள், நாம் அனைவரும் எமது தொழிலாளர்களது உரிமைகளை உறுதிப்படுத்தும் முகமாகவும் எமது மக்களுக்கான சேவையினை முன்நிறுத்தியும் எமது நீண்ட பயணத்தினை முன்னெடுத்தும் இவ்புனித நந்நாளில் நாம் அனைவரும் தேசத்தின் அபிவிருத்துக்கும் ஒற்றுமைக்காகவும் உழைப்போம் என உறுதியெடுத்துக் கொள்வோமாக ! ! !

யாழ் மாவட்ட அபிவிருத்தி உதவியாளர் ஒன்றியம், யாழ்ப்பாணம்.

சின்னத்தம்பி உதயசிறி விடுதலை-

uthayasri sசிகிரியா சுவரோவிய சுவரில் எழுதினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிறைவைக்கப்பட்டிருந்த சித்தாண்டி யுவதி சின்னத்தம்பி உதயசிறி இன்று வியாழக்கிழமை காலை 8 மணிக்கு விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் உதயசிறிக்கு ஏப்ரல் மாதம் முதலாம் திகதியன்றே ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார். எனினும், உதயசிறியை உடனடியாக விடுதலை செய்வதற்கு அவர் சார்பில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்று வரை அவரது விடுதலைக்கு தடையாக இருந்து வந்தது. இந்நிலையில் உதயசிறி, சார்பில் வழக்குத் தொடர்ந்த நல்லாட்சிக்கான மனித உரிமைகள் இயக்கமும், மனித உரிமைகள் இல்லமும் கண்டி மேல் நீதிமன்றத்தில் வைத்து நேற்று வழக்கை விலக்கிக்கொண்டதை அடுத்து உதயசிறியை உடனடியாக விடுவிப்பதாக சிறைச்சாலை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த அறிவித்தல் நேற்று மாலையளவிலேயே தமக்குக் கிடைக்கப்பெற்றதால் உதயசிறியை இன்று அழைத்துவரப் போவதாக உதயசிறியின் உறவினர்கள், சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர். அதன்படி உதயசிறி சரியாக இரண்டரை மாதங்களுக்குப் பின் சிறையிலிருந்து தனது வீட்டுக்கு திரும்புகின்றார். 

19ஐ எதிர்த்த வீரசேகரவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை-

weerasekaraஅரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டமூல வாக்கெடுப்பு, நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றபோது சட்டமூலத்துக்கு எதிராக வாக்களித்த சரத் வீரசேகர எம்.பிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 19ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முடிவு செய்திருந்த நிலையில், அது தொடர்பில் கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய, அக்கட்சியின் எம்.பிக்கள் அனைவரும் மேற்படி திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்த போதிலும், சரத் வீரசேகர எம்.பி மாத்திரம், சட்டமூலத்துக்கு எதிராக வாக்களித்தார். கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கட்சி தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

19ம் திருத்தச் சட்டத்துக்கு பிரித்தானியா வரவேற்பு-

british19ம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டமைக்கு பிரித்தானியா வரவேற்பு தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின் புதிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ், ஜனாதிபதியை சந்தித்த போது இதற்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார். புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள அவர் தமது தகுதி பத்திரத்தையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்திருந்தார். அதேநேரம் பிரான்ஸ், பஹ்ரெயின், க்ரோஷியா மற்றும் ஹங்கேரி ஆகிய மேலும் நான்கு நாடுகளின் தூதுவர்கள் தங்களின் தகுதி பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்.

சிதம்பரபுரம் மலரும் மொட்டுக்கள் முன்பள்ளிக்கு தமிழ் தேசிய இளைஞர் கழகம் நிதியுதவி-

moddukal01 moddukal02 moddukal03 moddukal04தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகரும், தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) முக்கியஸ்தர்களுள் ஒருவரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவுமான திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் ஒழுங்கமைப்பில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் கனடா கிளையினரால் வழங்கப்பட்ட சிறுவர்களின் விளையாட்டு நிகழ்வுக்கான சீருடைகளை தயார் செய்வதற்கான ஒருதொகைப் பணம் கற்குளம்-1, மலரும் மொட்டுக்கள் முன்பள்ளி நிர்வாகத்திடம் இன்று (30.04.2015) வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ் நிகழ்வில் புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் திரு க.சிவநேசன்(பவன்), திரு இ.மகேந்திரன் (ஐயா) சிரேஷ்ட உறுப்பினர்-புளொட்), தமிழ் தேசிய இளைஞர் கழகத் தலைவர் திரு சு.காண்டீபன், பொருளாளர் திரு த.நிகேதன், முன்பள்ளி ஆசிரியர்களான திருமதி எஸ்.கஸ்தூரி, செல்வி பி.ஜனார்த்தனி, கற்குளம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் திரு மாதவன், முகாமைத்துவ குழு தலைவி திருமதி த.சுஜனந்தினி, மகளிர் கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் திருமதி கி.துசாந்தினி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்துடன் (புளொட்) இணைந்து தமிழ் தேசிய இளைஞர் கழகம் பல உதவிகளை சிதம்பரபுரம் மக்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.