சூரிச்சில் நடைபெற்ற மாபெரும் மே தின ஊர்வலத்தில் புளொட்டும் பங்கேற்பு- (படங்கள் இணைப்பு)
சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில்; சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள் மற்றும் உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்களும் இணைந்து இன்று நடாத்திய மேதின (தொழிலாளர்தின) ஊர்வலத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சுவிஸ் கிளையினரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வின்போது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு உரிய அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், இடம்பெயர்ந்துள்ள மற்றும் மீள்குடியேறிய மக்களின் அடிப்படை உரிமைகள் வழங்கப்பட வேண்டும். காணாமற் போனவர்கள் விடயத்தில் உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும். அனைத்து அதிகாரங்களும் உழைக்கும் மக்களுக்கே, அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் உள்ளிட்ட பல கோஷங்கள் எழுப்பப்பட்டன.காலை 10 மணியளவில் சூரிச் பிரதான புகையிரத நிலையத்துக்கு அண்மையில் உள்ள சீல் போஸ்டு எனும் தபால் நிலையத்துக்கு அண்மையில் இன்றைய மேதின ஊர்வலம் ஆரம்பமாகி பிற்பகல் 1மணியளவில் பெல்வி பிளாட்ஸ் என்ற இடத்தில் நிறைவடைந்தது.
கடும் குளிருக்கும், கொட்டும் மழைக்கும் மத்தியிலும் நடைபெற்ற இம் மேதின ஊர்வலத்தில் புளொட் அமைப்பின் சுவிஸ்கிளை தோழர்கள், ஆதரவாளர்கள், பெண்கள், குழந்தைகள், புளொட்டின் ஜேர்மன் கிளைத் தோழர்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர்.
மேதின ஊர்வலத்தின் இறுதியில் ஊர்வலத்தில் இதில் கலந்து கொண்டிருந்த அனைவருக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சார்பில் சுவிஸ் கிளையினர் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.