பிரேமதாஸவின் நினைவு தினத்தில் ஜனாதிபதி பங்கேற்பு–
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ ஏழை மக்களுக்காக பாரிய சேவையை செய்த ஒரு தலைவர் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அமரர் ரணசிங்க பிரேமதாஸவின் 22வது நினைவு தினம் இன்றாகும். இதன் நிமித்தம் புதுக்கடை பகுதியிலுள்ள அன்னாரின் சிலைக்கு அருகில் ஞாபகார்த்த நிகழ்வு இடம்பெற்றது. ரணசிங்க பிரேமதாஸவின் ஞாபகார்த்த நிகழ்வில் கலந்து கொள்ளும் முதலாவது ஜனாதிபதி தான் என இங்கு உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன கூறினார். இதேவேளை பிரேமதாஸ இனபேதங்களுக்கு எதிராக செயற்பட்ட தலைவர் என இங்கு கருத்து வெளியிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். அத்துடன், பிரேமதாஸ இறந்த போது யாழ்ப்பாணத்திலும் வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டு மக்கள் சோகத்தை வெளிப்படுத்தியதாக அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, பிரேமதாஸ எதிர்பார்த்த சர்வ கட்சிப் பிரதிநிதிகளின் ஆட்சி தற்போது உண்மையாகியுள்ளதாக இங்கு உரையாற்றிய அமைச்சர் சஜீத் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் கொழும்பு மாவட்டத்தில் 700 குடும்பங்களுக்கு வீட்டு உறுதிப் பத்திரமும், 1,100 குடும்பங்களுக்கு வீடமைப்புக் கடன் திட்டமும் வழங்கி வைக்கப்பட்டன.
விமான நிலையத்தில் இரு தமிழ் இளைஞர்கள் கைது-
வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த இளைஞர்கள் இருவரை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரகசிய பொலிஸார் கைது செய்துள்ளனர். போலியான கடவுச்சீட்டு மற்றும் விசா ஆகியவற்றை பயன்படுத்தி இத்தாலி செல்ல முயன்றபோதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த 28 மற்றும் 31 வயதுகளுடைய இளைஞர் என தெரியவருகின்றது. இவர்கள் டுபாய் ஊடாக இத்தாலிக்கு செல்வதற்காக போலியான ஆவணங்களை தயாரித்து கொண்டு விமான நிலையம் வந்திருந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளனர். போலி ஆவணங்களை தயாரிப்பதற்காக ஒரு இளைஞனிடமிருந்து 35 இலட்சம் ரூபாவை முகவர் ஒப்பந்தம் பேசியதாகவும் இத்தாலிக்கு சென்றபின் அப்பணத்தை தருவதற்கு அவ்விளைஞர்கள் இருவரும் முகவருக்கு உறுதியளித்துள்ளதாகவும் தெரியவருகின்றது. இருவரையும் நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இரகசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நெதர்லாந்தில் இலங்கையர்கள் ஐவருக்கு சிறை-
புலிகளுக்கு நிதி சேகரித்ததாக குற்றம் சாட்டப்பட்ட நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த இலங்கை தமிழர்கள் ஐவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து, ஹேக்கில் உள்ள நீதிமன்றமே நேற்று இந்த சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது. புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களாக இவர்கள் இருந்துள்ளனர். 2003ஆம் ஆண்டுக்கும், 2010ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், தீவிரவாத அமைப்புக்கு நிதி சேகரித்தனர் என ஹேக் மேல்முறையீட்டு நீதிமன்றம் குற்றம்சாட்டி சிறைத்தண்டனை விதித்துள்ளது. இவர்களுக்கு 19 மாதங்கள் தொடக்கம், 75 மாதங்கள் வரையாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. நிதியுதவி வழங்க மறுத்தவர்களை அச்சுறுத்தியதாகவும், சட்டவிரோதமான சீட்டிழுப்புகளை நடத்தியதாகவும், நீதிமன்றம் இவர்கள் மீது குற்றம்சாட்டியுள்ளது.
19ம் திருத்தச் சட்டத்துக்கு அமெரிக்கா வரவேற்பு-
19ம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டமைக்கு, அமெரிக்கா வரவேற்பை தெரிவித்துள்ளது. அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் இணைப் பேச்சாளர் மேரி ஹாப் இதனைத் தெரிவித்துள்ளார். 19ம் திருத்தச்சட்டம் கடந்த 28ம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கான முதல்கட்ட நடவடிக்கையாக இதனை அமெரிக்கா பார்ப்பதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் இணைப் பேச்சாளர் மேரி ஹாப் மேலும் கூறியுள்ளார்.
சோமவன்ச அமரசிங்க உண்ணாவிரதம்-
மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கஉண்ணாவிரத போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளார். கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இதனை அவர் முன்னெடுத்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் அலரி மாளிகையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சூழ்ச்சிகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரி அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். சோமவன்ச அமரசிங்க அண்மையில் ஜே.வி.பி. இல் இருந்து விலகியமை இங்கு குறிப்பிடத்தக்கது.
நிகழ்வு பற்றிய அறிவித்தல்-