ஊடகப்படுகொலை தினம், உதயன் குழுமத்தினால் அனுஸ்டிப்பு-

vetkaiஉதயன் பத்திரிகை நிறுவன ஏற்பாட்டில் கடந்த அசாதாரண சூழலின்போது சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் இன்று நினைவு கூரப்பட்டனர். குறித்த நினைவு கூறல் யாழ்.பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நிகழ்வில் கலந்து கொண்டவர்களினால் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. பொதுச்சுடரை உதயன் குழுமத்தின் தலைவர் ஈ.சரவணபவன் ஏற்றி வைத்தார். இந்நிகழ்வில் வடமாகாண சபை அமைச்சர் ஐங்கரநேசன், வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம், வடமாகாண சபை உறுப்பினர்களான பா. கஜதீபன், தர்மலிங்கம் சித்தார்த்தன், விந்தன் கனகரத்தினம், பரஞ்சோதி, வைத்தியசாலை பணிப்பாளர் பவானந்தராஜா, பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச செயலர்கள் எனப் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பத்தினருக்கு உதயன் குழுமத்தின் தலைவர் ஈ.சரவணபவனால் உதவித் தொகைகள் வழங்கி வைக்கப்பட்டது. இதேவேளை வரலாற்று முக்கியத்துவமான புகைப்படங்கள் மற்றும் உதயன் ஆரம்பகால நாளிதழ்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டன. மேலும் குறித்த கண்காட்சி இன்று 9 மணியிலிருந்து 3 வரை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

நேபாள நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 6,621ஆக உயர்வு-

nepal................நேபாளத்தில் கடந்த 25ம் திகதி 7.9 ரிக்டரில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. அதில், காத்மாண்டு, கீர்த்தி நகர் மற்றும் போக்ரா உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. பூகம்பம் நடந்து ஒரு வாரமாகியும் தொடர்ந்து மீட்புபணி நடந்து வருகிறது. மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் இலங்கை மற்றும் இந்தியா என்பன தீவிர பங்கு வகிக்கின்றன. அது தவிர பல்வேறு வெளிநாடுகளும் மீட்புக் குழுவை அனுப்பி இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும பணியில் ஈடுபட்டுள்ளன. இதுவரை 6621 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 14,023 பேர் காயமடைந்துள்ளனர். மீட்புப் பணியில் 20க்கும் மேற்பட்ட நாடுகள் ஈடுபட்டுள்ளன. மோப்ப நாய்கள் மற்றும் அதிநவீன கருவிகளுடன் உயிருடன் இருப்பவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இதேவேளை நேபாள நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நடவடிக்கைகளுக்காக, இலங்கையில் இருந்து மற்றுமொரு குழு புறப்பட்டுச் சென்றுள்ளது. இன்றுகாலை 10.45 அளவில் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்றிலேயே இவர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் மற்றும் மருந்துப் பொருட்கள் சகிதம் இவர்கள் தமது பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இதேவேளை முன்னதாக இரு உதவிக் குழுக்கள் இலங்கையில் இருந்து நேபாளத்திற்கு சென்றிருந்தநிலையில், இவர்கள் மூன்றாவது குழுவினராகும்.

ஜோன் கெர்ரி ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் சந்திப்பு-

maiththir john geryஅமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரைச் சந்தித்துள்ளார். இன்றுநண்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி இன்று காலை இலங்கையை வந்தடைந்தார். இவருடன் 32 பிரதிநிதிகளும் நாட்டுக்கு வந்துள்ளனர். இவர்களை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட குழுவினர் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றனர். இந்த விஜயத்தின்போது, கெர்ரி, இரண்டு முக்கிய தமிழ் கட்சித் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நாட்டில் ஜனநாயகத்தை கட்டியெழுப்ப அமெரிக்க மக்கள் இலங்கையுடன் இணைந்திருப்பார்கள் என, அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி குறிப்பிட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் கலந்துகொண்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையுடனான உறவை விரிவுபடுத்தவும் ஆழப்படுத்தவும் உத்தேசித்து உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் இலங்கை அரசாங்கத்திற்கு திறைசேரி மற்றும் வர்த்தகத் துறைகளிலுள்ள அமெரிக்க அதிகாரிகளால் தொழில்நுட்ப உதவிகளை வழங்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரணைமடு கனகாம்பிகை அம்பாள் தேர்த்திருவிழா-

kovilஇலங்கையின் வடபால் அமைந்துள்ள கிளிநொச்சியின் அடையாளங்களுள் ஒன்றாக விளங்கும் இரணைமடு குளத்தின் கரையில் கோயில்கொண்டு எழுந்தருளிய திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் ஆலய வருடாந்த பெருந்திருவிழாவின் தேர்த்திருவிழா இன்று (02.05.2015) வெகு விமரிசையாக இடம்பெற்றது. கிளிநொச்சியின் அன்னை எனப் போற்றப்படும் அம்பாளுக்கு அதிகாலை விசேட அபிஷேகத்துடன் பூஜைகள் ஆரம்பமாகியது. காலை 9.30 மணிக்கு அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர் சகிதமாய் மூன்று அழகிய சித்திர தேர்களில் ஆரோகணித்து பவனி வந்ததை ஆயிரக்கணக்கான பக்தர்கள் மெய்யுருக வழிபட்டனர். ஏராளமான பறவைக் காவடிகள், அங்கப் பிரதட்சணைகள் செய்து ஆண்களும் மற்றும் அடி அளித்து கற்பூரச் சட்டி ஏந்தி பெண்களும் தங்களது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினார்கள். ஊர்மக்கள் மட்டுமல்லாது இலங்கையின் பிறபாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கூட ஏராளமான பக்தர்கள் வந்து அம்பாளின் அருளைப் பெற்றனர். வன்னி பிரதேசத்திலேயே மிகப்பெரிய சித்திர தேர் உள்ளதும் மூன்று சித்திரை தேர்களை கொண்டதுமாக இவ்வாலயம் விளங்குவதும் இந்த ஆலயத்தின் வரலாற்றுப் பெருமைகளில் ஒன்று. நாளை (03-04-2015) ஞாயிற்றுக்கிழமை சித்திராபூரணை தினத்தன்று இரணைமடுக்குளத்தில் தீர்த்தம் நடைபெறும். தொடர்ந்து மாலை திருவிளக்கு பூசை, இரணை மடுக்குளத்து நீரை எடுத்து வந்து அம்பிகையின் பாதத்திலே ஊற்றும் நிகழ்வான கும்பதீர்த்தம் எடுத்தலும், ஆயிரம் பானைகள் வைத்து பொங்கும் பொங்கல் நிகழ்வும் இடம்பெற்று கொடியிறக்கமும் மறுநாள் வெள்ளியன்று மாலை சங்காபிஷேகம் இடம்பெற்று அன்றிரவு பூங்காவனத் திருவிழா இடம்பெற்று அம்பாளின் வருடாந்த பெரும் திருவிழா இனிதே நிறைவுபெறும்.

உலக பத்திரிக்கை சுதந்திர நாள் (03.05.2015)-

mrs ainkaran (7)இன்றைய நாள் உலக பத்திரிக்கை சுதந்திர நாள். இன்றைய நவீன ஜனநாயக நிலையில் ஜனநயகத்தின் தூண்களில் ஒன்றாகவே ஊடகம் அமைந்துள்ளது. இவ் நாள் பத்திரிக்கை சுதந்திரத்தினை பரப்பும் நோக்கிலும் மனித உரிமைகள் சாசனத்தின் பகுதி 19இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தினை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐ.நா அமையத்தினால் சிறப்பு நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது. 1993ம் ஆண்டில் இடம்பெற்ற ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் படி ஒவ்வோர் ஆண்டும் வைகாசி 3ம்நாள் பத்திரிக்கை சுதந்திர நாளாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த வகையில் எமது தேசியம் நோக்கிய நகர்வுகளில் கடந்த காலத்தில் ஊடகங்கள் மிகப் பாரிய பணியினை மேற்கொண்டிருந்தமை இன்றும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருபவை இனத்தின் வரலாற்றில் பொன் எழுத்தக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒன்றாகவே உள்ளது. எமது இனத்தின் வரலாற்றில் பல இருண்ட யுகங்கள் பல அடக்கு முறைகள் இவற்றுக்கும் மேலாக எமது குரல்கள் ஒங்கி ஒலித்தபோதும் எமது உணர்வுகளை எடுத்துக் காட்ட முடியாத நிலை போன்ற பல சந்தர்ப்பங்களில் உடகங்கள் சிறப்பாக செயற்பட்டு உலக அரங்கில் எமது உரிமைக் குரல் ஒலிக்க வழி ஏற்பட்டது. ஒவ்வோர் ஊடகவியலாளர்களும் ஒர் போராளியாகவே தொழிற்பட்டு செயற்பட்டனர். ஒவ்வோர் விடியலின் ஆரம்பங்களும் ஊடகவியலாளர்களின் பேனாமுனைகளால் அலங்கரிக்கப்பட்டது. இந்நிலையில் பல ஊடகவியலாளர்களும் ஊடகங்களும் திட்டமிட்ட வகையில் சிதைக்கப்பட்டனர். கருவறுக்கப்பட்டனர். இவ்வாறான நிலையிலும் ஊடகபணி முழுமூச்சோடு செயற்பட்டது. ஒடிந்து ஒய்வுநிலை நோக்கிய இனத்தின் நகர்வின்போதும் விடியலின் தூரம் வெகுதொலைவில் இல்லை என்பதை அழுத்தி இனத்தின் விடுதலை நோக்கிய பயணத்தில் புதிய உணர்வையும் உறவையும் உருவாக்கி தலைவன் வழியில் இனத்தின் பாதச் சுவடுகளை அடியெடுக்க வழி சமைத்து வரலாற்றை புதிய நிலைக்கு நகர்வுற செய்ய பெரும் பணி இவ் ஊடகங்களுக்கே உரித்தானது. பேனா முனைகளால் விடுதலைக்கு உரமுட்டி இன்று எம்முடன் இல்லாது இந்த இனத்தில் விடுதலை நாளை ஆவலோடு காத்திருக்கும் மறைந்த ஊடகவியலாளர்களை இவ் பொன்னாளில் தழிழ் உணர்வுகளால் பூசித்து அவர்களின் நினைவாக ஒர் நினைவிடத்தை உருவாக்க ஒன்றிணைவோம்.
திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், தவிசாளர், வலி மேற்கு பிரதேச சபை.

உண்மையைக் கண்டறிய அமெரிக்கா ஒத்துழைப்பு-

susan riseஇலங்கை உள்ளிட்ட நாடுகளில் இடம்பெற்ற குற்றங்கள் பற்றிய உண்மைகளைக் கண்டறிவதற்காக விசாரணைக் குழுக்களையும், பொறிமுறைகளையும் உருவாக்குவதற்கு அமெரிக்கா ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் தெரிவித்துள்ளார். “கொடூரங்கள் இழைக்கப்படும்போது, உலகெங்கும் நாம் பொறுப்புக் கூறலை உண்மையை வலுப்படுத்துகிறோம். இலங்கை, கிர்கிஸ்தான், லிபியா, ஐவரிகோஸ்ட் மற்றும் மிக அண்மையில் வடகொரியாவில் நிகழ்ந்த அட்டூழியங்கள் குற்றங்கள் தொடர்பான உண்மைகளை கண்டறிய உதவும் விசாரணைக் குழுக்களை அமைக்கவும், பொறிமுறைகளை உருவாக்கவும் நாம் ஆதரவளித்துள்ளோம்.’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். நியூஜேர்சியில் உள்ள செற்றன் ஹோல் பல்கலைக் கழகத்தில், உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அறிவுக்கு ஒவ்வாத குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு எமது பங்காளர்களுடன் இணைந்து பணியாற்ற நாம் கடமைப்பட்டுள்ளோம்.” ஏன சூசன் ரைஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.