காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணைக்கு விசேட குழுக்கள்-
காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கென இவ்வாரம் நான்கு விசேட குழுக்கள் அமைக்கப்படவுள்ளன. இது தொடர்பான தகவலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளதாக காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி விசாரணைக் குழுவை ஜனாதிபதி நியமிக்கவுள்ளார். ஜனாதிபதியிடம் அண்மையில் கையளித்த அறிக்கையில் விசாரணைக்கென நான்கு பேர் அடங்கிய நான்கு விசாரணைக் குழு நியமிக்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்துள்ளதாக காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு சுமார் 16,000 முறைப்பாடுகள் குறித்து விசாரணை செய்யவுள்ளது.
நியுசிலாந்தில் 5.6ரிச்டர் அளவில் நிலநடுக்கம்-
நியூசிலாந்தின் தெற்கு தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது இதனால் அங்குள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. பல வீடுகளின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து நொறுங்கியுள்ளன. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓடியதுடன் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். அங்கு 5.6 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, பூமிக்கு அடியில் 10 கி.மீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. தெற்கு தீவில் வனாகா என்ற நகரம் சுற்றுலா மையமாகும் இங்கு 6,500 மக்கள் வசிக்கின்றனர். இந்நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு தங்கியிருந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை நிறுத்தம் செய்யப்போவதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் எச்சரிக்கை-
வவுனியா பஸ் நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் பஸ்கள் உரிய நேர அட்டவணை இல்லாமையால் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். நேர அட்டவணை இல்லாததால் இபோச பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து தனியார் பஸ்கள் நட்டத்தை எதிர்கொண்டு வருவதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அதனால் நேர அட்டவணை ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வவுனியா தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அப்படி இல்லையேல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேபாளத்தில் 2000 பேருக்கு இலங்கை குழு சிகிச்சையளிப்பு-
நேபாளத்தில் உள்ள இலங்கை படையினர் அங்கு நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 2000 பேருக்கு இதுவரை சிகிச்சையளித்துள்ளதாக நிவாரணக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் மைத்திரி டயஸ் தெரிவித்துள்ளார். நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீதிகளை சரிசெய்து கிராமங்கள் நோக்கி தமது குழு சென்று கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். பொறியியலாளர் குழுவொன்று நேபாள் வந்துள்ளதால் தமது நிவாரணப் பணி மேலும் விரிவடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நேபாள் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை செஞ்சிலுவை சங்கமும் உதவி அளித்து வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.
வாக்காளர் இடாப்பு பதிவு பத்திரம் விநியோகம்-
எதிர்வரும் 15ம் திகதி தொடக்கம் வாக்காளர் இடாப்பு தொடர்பான பத்திரத்தை கிராம சேவகர்கள் வீட்டுக்கு வீடு சென்று விநியோகிப்பர் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இப்பணி ஜூன் 15ம்திகதி நிறைவுபெறும் என செயலகம் கூறியுள்ளது. சேவை அவசியம் கருதி அக்காலம் நீடிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கிராம சேவகர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. கிராம சேவகர் வழங்கும் பத்திரத்தை சரியாக நிரப்பி மீண்டும் கிராம சேவகரிடம் கையளிக்க வேண்டும். இந்த பத்திரத்தில் கையொப்பமிடும் நடவடிக்கை தேர்தல்கள் ஆணையாளரால் செப்டெம்பர் இடம்பெறவுள்ளது. அதன்படி அடுத்த தேர்தலில் 2015 வாக்காளர் இடாப்பை பயன்படுத்த முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேதிரிகிரிய மினி சூறாவளியால் 30 வீடுகளுக்கு பாதிப்பு-
பொலன்னறுவை, மெதிரிகிரிய மற்றும் கல்லேல்ல உள்ளிட்ட பல பிரதேசங்களை ஊடறுத்து வீசிய மினி சூறாவளியினால் 30 வீடுகளின் கூரைகள் அள்ளுண்டு சென்றன. மெதிரிகிரிய தலாகொல வௌ, வடிகவௌ ஆகிய பிரதேசங்களில் 15 வீடுகளும் கல்லேல்ல மற்றும் மஜின்புர ஆகிய பிரதேசங்களில் 15 வீடுகளுமே சேதமடைந்துள்ளன என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. நேற்றுமாலை வீசிய இந்த மினி சூறாவளியுடன் ஐஸ் கட்டிகளும் விழுந்ததாக பிரதேசவாசிகள் nதிவித்துள்ளனர்.
புகலிடக் கோரிக்கையாளர்கள் 3ஆயிரத்து 700பேர் மீட்பு-
கடந்த இரு தினங்களில் சுமார் 3,700 புகலிடக் கோரிக்கையாளர்கள் லிபியாவை ஒட்டிய கடற்பிராந்தியத்தில் வைத்து மீட்கப்பட்டதாக இத்தாலிய கடலோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர். மரத்தாலான மற்றும் காற்றடைக்கப்பட்ட பலூன் படகுகளின் ஊடாக குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்த நிலையில் மீட்கப்பட்டனர். இதன்பொருட்டு, இத்தாலிய மற்றும் பிரான்ஸ் கப்பல்கள் தனித்தனியாக 17 மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. இந்நிலையில், புகலிடக் கோரிக்கையாளர்கள் இத்தாலிக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையிலும், மீட்புப் பணிகள் தொடர்கின்றன. இந்த வருடத்தில் மாத்திரம் மத்திய தரைக் கடலை கடக்க முனைந்த சுமார் 1,750 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
காணியை மீட்டுத் தருமாறு வுனியா மக்கள் கோரிக்கை-
வவுனியா, பேயாடிகூழாங்குளம் பகுதி மக்கள், பொது காணியை தமது கிராமத்தின் தேவைக்காக மீட்டுத்தருமாறு கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா ஏ9 வீதியுடன் உள்ள பேயாடிகூழாங்குளம் கிராமத்திற்கு சொந்தமான பொது காணி, கலாசார அமைப்பொன்றுக்கு வழங்கப்பட்டமையை எதிர்த்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. பிரதேச செயலர் பொதுமக்களின் கோரிக்கைக்கு மாறாகவே இக் காணியை வழங்கியுள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். தமது கிராமத்திற்கு சொந்தமான காணியை கலாசார அமைப்புக்கு வழங்கியுள்ளமையால், தமது கிராமத்திற்கு பொது கட்டிடங்கள் இல்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த கிராமத்திற்கு பொது கட்டிடம், முன்பள்ளி, பாடசாலை கட்டிடம் ஆகியன காணப்பட்ட போதிலும், அவை இராணுவ கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இந்த காணி சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டே வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த காணி குறித்து ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின் அரசாங்க அதிபருக்கு அறிவிக்குமாறும் வவுனியா பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.