வட்டு கிழக்கு அறிவொளி சனசமூக நிலையத்தில் அபிவிருத்திக் கூட்டம்-

-0=--யாழ். சித்தன்கேணி வட்டு கிழக்கு அறிவொளி சனசமூக நிலையத்தில் பிரதேச ரீதியான அபிவிருத்தி தொடர்பிலான கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், வலி மேற்கு பிரதேச சபையின் செயலாளர் திருமதி. சாரதா உருத்திரசாம்பவன், சனசமூக நிலைய உத்தியோகஸ்தர் கிராமசேவகர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர். மற்றும் வலிமேற்கு பிரதேசசபை தொழில்நுட்ப உத்தியோகஸ்தர் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். இங்கு கிராமத்தினுடைய பல்;வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்மொழியப்பட்டு அவற்றில் மிக முக்கியமான திட்டங்கள் தொடர்பில் முக்கியத்துவம் வழங்கப்பட்டு ஆராயப்பட்டதற்கும் மேலாக குறித்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில் மேற்படி கிராம மட்ட அமைப்பினரே அவற்றைக் கண்காணிக்கவேண்டும் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது-

johnston fernandoமுன்னாள் வர்த்தக அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, நிதி குற்ற விசாரணை பொலிஸ் பிரிவினரால்; கைதுசெய்யப்படடுள்ளார். பணம்; கொடுக்காமல் லங்கா சதொசவில் 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்தமை தொடர்பில் வாக்குமூலம் வழங்க நிதி குற்ற விசாரணை பொலிஸ் பிரிவுக்கு சென்றிருந்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நிதி குற்ற விசாரணை பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த வாக்குமூலத்தை அடுத்து முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. நிதி குற்ற விசாரணை பொலிஸ் பிரிவுக்கு கிடைக்கப்பறெ;ற வாக்குமூலத்தை அடுத்தே முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

பசில் ராஜபக்சவின் விளக்கமறியல் நீடிப்பு-

basilவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இன்று முற்பகல், கடுவெல நீதவான் நீதிமன்றத்துக்கு அம்பியூலன்ஸ் வண்டியில் அழைத்துவரப்பட்டார். கடந்த மாதம் 22ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட பசில் ராஜபக்ஷவை இன்றுவரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம், அன்று உத்தரவிட்டிருந்தது. அத்துடன், வழக்கு விசாரணையையும் இன்றுவரை ஒத்திவைத்திருந்தது. இன்று, இந்த வழக்கு விசாரணை மீண்டும் இடம்பெற்ற நிலையில், வைத்தியசாலையிலிருந்து அம்பியூலன்ஸ் வண்டிமூலம் பசில் ராஜபக்ஷ, நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கான விளக்கமறியல், மே மாதம் 7 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, திவிநெகும நிதி மோசடி தொடர்பில் அவருடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ள ஏனைய மூவரின் விளக்கமறியலும் 7ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.

கோண்டாவில் பகுதியில் பதற்ற நிலைமை-

rtrtrயாழ். கோண்டாவில் டிப்போவுக்கு முன்பாக, வீதியில் நின்ற வயோதிபரை இன்று காலையில் பிஸ்கட் கம்பனியின் கன்டர் வாகனம் மோதியதையடுத்து அந்தப் பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கன்டர் மோதியதில் உரும்பிராய் தெற்கு சேர்ந்த சீனியர் ஞானம் (வயது 55) என்பவர் உயிரிழந்தார். இதனையடுத்து, அவ்விடத்துக்கு வந்த பொதுமக்கள், கன்டர் வாகனத்தை பெற்றோல் ஊற்றி கொளுத்த முற்பட்டனர்.அவ்விடத்துக்கு சென்ற கோப்பாய் பொலிஸார் பதற்றத்தை தணித்து, பொதுமக்களை விரட்டினர். அப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோண்டாவிலிருந்து உரும்பிராய் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பிஸ்கட் கம்பனியொன்றின் கன்ரர் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகிலிருந்து மின்கம்பத்தை மோதியதுடன், அருகில் நின்றிருந்த வயோபதிபர் ஒருவரையும் மோதியது. அதில் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. கன்ரர் வாகன சாரதியை கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் சிறுவன் கொலை: சந்தேகநபர் கைது-

arrestவவுனியாவில் 10 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் பேரில் 18 வயது இளைஞன் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வவுனியா, சாம்பல் தோட்டம் பகுதியில் கடந்த மாதம் 9ஆம் திகதி 10வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார். சந்திரசேகரன் சஞ்சய் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருந்தான். இது தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் அணி விசாரணைகளை முன்னெடுத்திருந்தது. இந்நிலையில் இக்கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் சிறுவனின் உறவினரான 18வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் சிறுவனின் வீட்டில் இருந்த உண்டியலில் உள்ள பணத்தை திருடும் பொருட்டு அங்கு சென்றுள்ளார். அதை கண்ட குறித்த சிறுவன் விடயத்தை பெற்றோரிடம் சொல்லப் போவதாக தெரிவித்துள்ளான். இதனையடுத்து சந்தேகநபர் சிறுவனின் கழுத்தை வெட்டிக் கொலையை புரிந்துள்ளார் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

திஸ்ஸவை கட்சியிலிருந்து நீக்கியது செல்லுபடியற்றது-

courts (2)ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவைஅக் கட்சியில் இருந்து நீக்கியமை செல்லுபடியற்றது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது ஐ.தே.க.விலிருந்து வெளியேறிய திஸ்ஸ அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவளித்ததுடன், சுகாதார அமைச்சராகவும் பதவியேற்றிருந்தார். அவரது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக ஐ.தே.கவின் மத்திய செயற்குழு கட்சியிலிருந்து திஸ்ஸவை நீக்கியது. இதனைத் தொடர்ந்து கட்சியின் நடவடிக்கைக்கு எதிராக திஸ்ஸ நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். இம் மனுமீது இன்று தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம் திஸ்ஸவை கட்சியிலிருந்து நீக்குவதற்குரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என கூறியதுடன், அத்தீர்மானம் சட்டவிரோதமானது என தீர்ப்பளித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

விமானப்படை முகாமில் தற்கொலைச் சம்பவம்-

shotகொழும்பு, ரத்மலானை வான்படை முகாமில் பாதுகாப்பு சாவடியில் பணியாற்றிய இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் இன்று முற்பகல் தமது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். காவல்துறையினர் இது தொடர்பில், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், நீதிமன்ற விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் இரத்மலானை விமானப்படை முகாமில் துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இத்தகவலை விமானப்படை பேச்சாளரும் தெரிவித்துள்ளார்.

ரயில் விபத்துக்களினால் 12பேர் உயிரிழப்பு-

madu trainரயில் விபத்துக்களினால் 12பேர்வரை மாதாந்தம் உயிரிழப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது. கவனயீனமே இந்த விபத்துக்களுக்கு முக்கிய காரணம் என திணைக்களத்தின் பொது முகாமையாளர் விஜய அமரதுங்க கூறினார். ரயில் கடவைகளை கடக்கின்ற சந்தர்ப்பங்களில், சமிக்ஞைகளை பொருட்படுத்தாது பயணிக்கின்றமையால் அதிக விபத்துக்கள் இடம்பெறுவதாக ரயில்வே பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து விதிமுறைகளை மீறும் ரயில் சாரதிகளை சட்டத்தின்முன் நிறுத்துவதற்கான திட்டமொன்றை பொலிஸாருடன் இணைந்து தயாரித்து வருவதாக அவர் கூறினார். அத்துடன், ரயில் கடவைகள் தொடர்பான போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவது குறித்த தெளிவூட்டல்களையும் வழங்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டது.

இலங்கையர்களுக்கு புதிய கடவுச் சீட்டு-

passportபுதிய கடவுச் சீட்டொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் பொது அமைதி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இதற்கான முன்னோடி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். உத்தேச புதிய கடவுச் சீட்டில் உள்ளடக்கப்படவேண்டிய விபரங்கள் குறித்து ஆராய்ந்து, அமைச்சரவை பத்திரமொன்றை தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறாயினும் இந்த நடவடிக்கை பூர்த்தியாவதற்கு நீண்ட நாட்கள் தேவைப்படலாம் எனவும் பொது அமைதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஆள் அடையாளத்தை உறுதிபடுத்துவதற்காக, கைவிரல் அடையாளத்தை பயன்படுத்துவது தொடர்பிலும், இதன்போது ஆலோசித்து வருவதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

வடமாகாண அபிவிருத்தி உதவியாளர்கள் ஒன்றிய போசகராக முன்னாள் அரச அதிபர் தெரிவு. 

dfdddபட்டதாரிகளை அரச சேவையில் இணைக்கும் திட்டத்தின் பிரகாரம் 2005ம் ஆண்டு அரச சேவைக்கு உள்ளீர்ப்பு செய்த அபிவிருத்தி உதவியாளர்கள் தாம் தற்போது தொழில்நிமித்தம் எதிர்கொள்ளும் பலதரப்பட்ட சிக்கல்கள் தொடர்பாக மாவட்ட ரீதியாக கலந்துரையாடல்கள் மேற்கொண்டு தமது மாவட்ட ரீதியான தொழில் சங்கத்தினை ஏற்கனவே ஆரம்பித்திருந்தனர். இதனை மேலும் விஸ்தரிக்கும் முகமாக வடமாகாணம் தழுவிய வடமாகாண அபிவிருத்தி உதவியாளர்கள் ஒன்றியம் எனும் அமைப்பினை ஆரம்பித்துள்ளனர். இந்த ஒன்றியத்தின் போசகரும் ஆலோசகருமாக இந்த துறையுடன் நன்கு தேர்ச்சி பெற்றவரும் இலங்கை நிர்வாக சேவையின் சிரேஸ்ட ஓய்வுநிலை அதிகாரியும் யாழ் மற்றும் வவுனியா மாவட்ட முன்னைநாள் அரச அதிபராக கடமையாற்றி பின்னர் வடக்கு கிழக்கு மாகாண வீடமைப்பு புனரமைப்புத்திட்ட பணிப்பாளராகவும் பின்னர் வடக்கு மாகாண விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலராகவும் கடமையாற்றிய செல்லையா பத்மநாதன் அவர்கள் அபிவிருத்தி உதவியாளர்கள் அனைவரது விருப்பத்தினையும் வேண்டுகோளையும் ஏற்று ஒன்றியத்தின் போசகராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இதன் ஆரம்ப கூட்டம் 02.05.2015 அன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ் மாவட்ட ஒன்றிய பிரதிநிதிகளுடன் வடமாகாணத்தின் ஏனைய மாவட்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டு தமது மாவட்டத்தில் தாம் எதிர்நோக்கும் தொழில் நிலைமைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டு எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான ஆக்கபூர்வமான தீர்மானங்களும் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

வடமாகாண அபிவிருத்தி உதவியாளர்கள் ஒன்றியம். வடமாகாணம்.