சிறுவர் இல்லத்தில் தங்கியிருக்க விபூசிகாவுக்கு அனுமதி-

vipooshikaபுலி உறுப்பினரை வீட்டுக்குள் மறைத்து வைத்திருந்தாரென்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட பாலேந்திரன் ஜெயக்குமாரியின் மகள் விபூசிகாவை மீண்டும் சிறுவர் இல்லத்தில் தங்கியிருப்பதற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் இன்று அனுமதியளித்தார். பொலிஸார்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக கூறப்படும் கோபி என அழைக்கப்படும் புலிகளின் புலனாய்வுப் பிரிவை சேர்ந்தவருக்கு புகலிடம் கொடுத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத புலனாய்வு பிரிவினால் கைதுசெய்யப்பட்டிருந்த ஜெயக்குமாரி ஒரு வருடத்துக்கு பின்னர் கடந்த மார்ச் 10ஆம்திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். சிறுவர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த அவரது மகள் விபூசிகா நீதிமன்ற அனுமதியுடன் மீண்டும் தாயுடன் சேர்ந்தார். அவர்கள் முன்னர் தங்கியிருந்த தர்மபுரம் வீட்டிலிருந்த உடமைகள் அனைத்தும் திருடப்பட்டிருந்தன. அத்துடன், தனது மகளை தன்னுடன் தொடர்ந்து வைத்திருப்பது மகளுக்கு பாதுகாப்பு இல்லையென்றும், இதனால் அவரை மீண்டும் சிறுவர் இல்லத்திலேயே விடும்படியும் கண்டாவளை சிறுவர் நன்னடத்தை அதிகாரி திருமதி வி.சுரேஸிடம் ஜெயக்குமாரி கோரியதைத் தொடர்ந்து அங்கு தங்கி கல்விகற்க நீதவான் அனுமதியளித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால மஹிந்த ராஜபக்ச சந்திப்பு-

mahinda maithriஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் இன்றுபகல் பாராளுமன்ற கட்டிடத்தில் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடையே இடம்பெற்ற சந்திப்பு வெற்றியளித்துள்ளதாக சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து இதன்போது பேசப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறான சந்திப்பொன்று எதிர்வரும் நாட்களிலும் நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற கட்டிடத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பில் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, எம்.கே.டி.எஸ். குணவர்த்தன, துமிந்த திஸாநாயக்க ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபாலடி சில்வா, அநுர பிரியதர்ஷன யாப்பா, மஹிந்தானந்த அலுத்கமகே, டளஸ் அழகப்பெரும, குமார வெல்கம, ஜீ.எல்.பீரிஸ், பந்துல குணவர்த்தன, பைசர் முஸ்தபா ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்துள்ளனர்.

இலங்கையர் கொலை தொடர்பாக சந்தேகநபர் கைது-

arrestஅமெரிக்காவில் இலங்கையர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை டெக்ஸாஸ் பியூமாண்ட் பொலிஸார் கைது செய்துள்ளனர். 19 வயதான சன்ட்லர் கெய்ல் வென்டீஸ் என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளார். வீட்டு உபயோகப்பொருள் கடை உரிமையாளராக இருந்த மேதானந்த குருப்பு (52 வயது) என்ற இலங்கையர் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார். முகமூடி அணிந்த நபர்கள், கடைக்குள் சென்று அவரைத் தாக்கியதுடன் துப்பாக்கிச் சூடும் நடத்தியுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரின் முகங்களும் சீ.சீ.ரீ.வி. கமராவில் பதிவாகியுள்ளன. அதில் ஒரு சந்தேக நபரே இலங்கையர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பியூமொன்ட் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேதானந்த குருப்பின் மார்பில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கைககளில் காணப்படுவதாக தெரிவித்த பொலிஸார், கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான சன்ட்லர் கெய்ல் வென்டீஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலிய அமைச்சர் இலங்கையில் சந்திப்பு-

meetingஅவுஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் மற்றும் அவரது குழுவினரும், மீள்குடியேற்ற மற்றும் புனர்நிர்மாண அமைச்சர் டி.எம். சுவாமிநாதனை நேற்று சந்தித்துள்ளனர். கொழும்பில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது ஆட்கடத்தல்கள், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மீளமைப்பு உள்ளிட்ட சில விடயங்கள் பற்றி ஆராயப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பில் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ரொபின் மூடியும் கலந்துகொண்டிருந்தார். முக்கியமாக இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களை கடத்திச் செல்வது குறித்து இரு நாடுகளும் கலந்துரையாடி முக்கிய தீர்மானங்களை எட்டியுள்ளதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவுஸ்திரேலிய அமைச்சர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும், கலந்துரையாடியுள்ளதாகவும், ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு வரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதுதவிர, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார ரீதியான உறவுகள் பற்றியும், அதற்காக ஒத்துழைப்புகள் பற்றியும் ஆராயப்பட்டதாகவும் கூறினார்.

மஹிந்தவின் பாதுகாப்பு பிரிவு பிரதானியிடம் விசாரணை-

inquiryமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவு பிரதானி கொல் மஹேந்திர பெனாண்டோவிடம் இராணுவ விசேட விசாரணை பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்குபற்றிய அங்குனுகொலபெலஸ்ஸ கூட்டத்தில் இராணுவ கொப்ரால் ஒருவர் துப்பாக்கிடம் சென்ற சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் சென்ற இராணுவ கொப்ரால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவு உறுப்பினர் என்றும் அவர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக அங்கு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெளிவுபடுத்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று ஊடகங்களுக்கு விளக்க அறிக்கை ஒன்றை விடுத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கோட்டாபயவுக்கு எதிராக ஜே.வி.பி முறைப்பாடு-

gotabaya......தேசத்துக்கு மகுடம் (தெயட்ட கிருள) கண்காட்சியின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் (ஜே.வி.பி) இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷவுடன் அம்பாறை மாவட்ட முன்னாள் செயலாளர் நீல் டி அல்விஸ்(தற்போது மாத்தளை மாவட்ட செயலாளர்), அம்பாறை நகர சபையின் தலைவர் இந்திக நலின் ஜயவிக்ரம மற்றும் அம்பாறை, இலக்கம் 13, முதலாவது ஒழுங்கையில் வசிக்கும் எஸ்.ஏ.தினுஸ் பிரபாத் ரங்கஜீவ ஆகியோருக்கு எதிராகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பஸ் கடலில் வீழ்ந்து விபத்து, அறுவர் கைது-

bus accidentஹம்பாந்தோட்டையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இபோச பஸ் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் 6பேர் காயமடைந்துள்ளனர். உனவட்டுன – ததவெல்ல பகுதியில் வீதியை விட்டு விலகிய பஸ் கடலில் விழுந்து விபத்துக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை 5.30 அளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. பஸ்ஸில் 25பேர் பயணித்துள்ள நிலையில் அறுவர் காயமடைந்து கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாரதி நித்திரை கொண்டதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

பிரித்தானிய பொதுத்தேர்தல், தமிழ் பெண்ணும் போட்டி-

britishபிரித்தானிய பொதுத்தேர்தல் தொடர்பான இறுதிக்கட்ட தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நாளை பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்புகள் இடம்பெறவுள்ள நிலையில், கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிரமாக வாக்கு கோரும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, பிரித்தானியாவை ஒளிமயமான எதிர்காலத்தின் வழியில் இட்டுச்செல்வதற்கு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன் உறுதியளித்துள்ளார். இந்நிலையில், தொழிற்கட்சியின் வேட்பாளர் எட் மிலிபேன்ட் தமது தேர்தல் பிரசாரங்களில், தொழிற்துறையினரை முன்னிலைப்படுத்தியே தனது அரசாங்கம் செயற்படும் என உறுதியளித்து வருகிறார். இத்தேர்தலில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட 3பேர் போட்டியிடுகின்றனர். இதில் உமா குமரன் என்ற தமிழ் பெண் ஹரோ பகுதியில் போட்டியிடுகிறார். இவர் தொழிற்கட்சி சார்பில் போட்டியிடுகின்றார். உமா குமரனின் பெற்றோர் இலங்கை போரினால், லண்டனுக்கு குடிபெயர்ந்தவர்கள். லண்டன் குயீன்ஸ் மேரி பல்கலைக்கழகத்தில், அரசியலில் பட்டம்பெற்ற உமா குமரன், பொதுக் கொள்கையில், முதுமாணிப் பட்டம் பெற்றுள்ளார். இதேபோல் கேம்பிரிஜில் சமலி பெர்ணாண்டோ என்ற பெண்ணும், ஹெம்சயரில் ரணில் ஜயவர்தன என்பவரும் போட்டிடுகின்றனர்.

சுழிபுரம் பாரதி கலைமன்றத்தில் மன்றத் தலைவி தலைமையில் நிகழ்வு-

ainkaranயாழ். சுழிபுரம் பாரதி கலைமன்றத்தில் மன்றத் தலைவி. திருமதி. சுதாகரன் தலைமையில் சர்வதேச மகளிர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது. இவ் நிகழ்வின்போது வலிமேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். முன்னதாக அருகில் உள்ள ஆலயத்தில் வழிபாடுகள் இம் பெற்றதனைத் தொடர்ந்து மழலைகள் வரவேற்புடன் பிரதம விருந்தினர் மங்கல விளக்கேற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தாhர். இவ் நிகழ்வில் பல சிறுவர் மற்றும் மகளிர் நிகழ்வுகள் இடம்பெற்றன. இவ் நிகழ்வில் கலந்து சிறப்பித்துக்கொண்ட வலிமேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றுகையில் இன்று இங்கு மேற்கொள்ளப்பட்ட மகளிர் நிகழ்வுகள் மனதுககு மிக மகிழ்ச்சியினை அளிக்கின்றது. இவ் மகளிர் நிகழ்வுகள் ஊடாக மகளிரது பல்வேறு அல்லது பல்துறை ஆற்றல்களும் வெளிபாடுகளும்

வெளிக்கொண்டுவரப்பட வேண்டும். இதன்வாயிலாக மகளிருக்கான பொருத்தமான தளம் உருவாக்கப்பட வேண்டும். இன்று பெண்கள் பல்துறைகளிலும் பல் வடிவங்களிலும் சாதனை படைத்து தமது இயலுமையையும் திறமையையும் வெளிப்படுத்தி உள்ளனர் இவ் நிலையில் இந்த மாற்றத்திற்கான காலம் பெண்களின் வெற்றிக்கான காலம் என்றே கருத வேண்டும். இருந்தும் பெண்களை தடுத்து அவர்களது நிலைகளில் தாக்கத்தினை ஏற்படுத்த என தனியான ஒர் கூட்டம் இதே நடவடிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறான சமூக கரைப்பான்களை சமூகத்தில் அக்கறை உள்ளவர்கள் இனங்கண்டு தகுந்த பாடம் புகட்டவேண்டும் என்றார்.