பொலிஸ் நிதி மோசடிப்பிரிவு மூடப்படாது, பிரதமர் வேட்பாளர் பெயரிடப்பட மாட்டார்-

rajithaபிரதமர் வேட்பாளரை பெயரிடுவது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் சம்பிரதாயம் இல்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். நேற்று இடம்பெற்ற மைத்திரி – மஹிந்த சந்திப்பில் 5 அம்சங்கள் இருந்ததாகவும் அதில் பிரதமர் வேட்பாளர் விடயமும் ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொலிஸ் நிதி மோசடி பிரிவை மூடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளிக்கவில்லை. ஆனால் அதில் அரசியல் தலையீடின்றி பார்த்துக் கொள்வதாக உறுதி அளிக்கப்பட்டது. ஊழல், மோசடி செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பது என்ற தேர்தல் வாக்குறுதி மாறாது. பொலிஸ் நிதி மோசடி பிரிவு விசாரணைகளை மாத்திரமே மேற்கொள்ளும். ஆனால் நீதிமன்றமே தண்டனையை தீர்மானிக்கும். வேட்புமனு விடயம் குறித்து நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. அது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மத்தியகுழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

தேர்தல் திருத்தச் சட்டத்தால் சிறுபான்மை கட்சிகள் பாதிக்கக்கூடாது-

mangala20வது அரசியல் திருத்தச் சட்டத்தினால் சிறுபான்மை கட்சிகளும், சிறிய கட்சிகளும் பாதிக்கப்படக்கூடாது என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமவீர இதனைக் கூறியுள்ளார். இலங்கையில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி, புதிய நாடாளுமன்றம் தெரிவுசெய்யப்பட வேண்டும். இதுவே ஐ.தே.கவின் நிலைப்பாடு. ஆனால் தேர்தல் சட்டத்தை திருத்துவதற்கு சிறிலங்கா சுதந்திர கட்சி வலியுறுத்தி வருகிறது. இதற்கு ஐக்கிய தேசிய கட்சி எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. ஆனால் இவ்வாறு திருத்தப்பட்டு அமுலாக்கப்படுகின்ற புதிய தேர்தல் திருத்தச் சட்டத்தினால், சிறுபான்மை கட்சிகளும் சிறிய கட்சிகளும் பாதிக்கப்படக்கூடாது. மேலும் ஒரு வாரத்துக்குள் தேர்தல் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி, உடனடியாக இந்த மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தாங்கள் வலியுறுத்துவதாகவும் மங்கள் சமரவீர கூறியுள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கையர்கள் போட்டி-

british candidatesஇன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கும் பிரித்தானியாவின் நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கையைச் சேர்ந்த 4பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் இரு தமிழர்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. சமாலி பெர்னாண்டோ, ரணில் ஜயவர்தன, உமா குமரன், சொக்கலிங்கம் யோகலிங்கம் ஆகியோரே தேர்தலில் போட்டியிடுகின்றனர். உமா குமரன் பிரித்தானிய வானொலி நிலையம் ஒன்றில் அறிவிப்பாளராகவும் சமாலி பெர்னாண்டோ சட்டத்தரணியாகவும் கடமையாற்றுகின்றனர். சொக்கலிங்கம் யோகலிங்கம் பிரித்தானிய லிபரல் கட்சி சார்பாக போட்டியிடுகின்றார். மேலும் இவர் இலங்கையில் பிறந்தவர். ரணில் ஜயவர்தன பொருளாதார விஞ்ஞானம் தொடர்பில் கல்வி பயின்றிருப்பதோடு பிரித்தானியாவின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பிலும் பிரித்தானியாவின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பிலும் ஆராய்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கச்சதீவை மீளப்பெறுமாறு தமிழக எம்.பி.க்கள் கோரிக்கை-

kachchativeகச்சதீவை மீளப்பெற இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோரியுள்ளனர். இதற்காக இலங்கை அரசுடன், இந்திய மத்திய அரசு கலந்துரையாடி கச்சதீவை மீளப்பெறத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் எம்.பிக்களே இக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். கச்சதீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டமை அரசியல் சாசன அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை. இது இந்தியாவின் நன்மைக்காகவும் வழங்கப்படவில்லை. எனவே, கச்சதீவை இலங்கைக்கு வழங்கியமை சட்டவிரோதமானது என அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரியின்கீழ் மகிந்த பிரதமராக வேண்டும்-வாசு-

vasuஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியின் கீழ், மகிந்த ராஜபக்ச பிரதமராக செயற்பட வேண்டும் என ஜனநாயக இடதுசாரி கட்சியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இதனை வலியுறுத்தி நாளை குருணாகலையில் பேரணி நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த கூட்டத்தில் மக்கள் கலந்துகொண்டு, மகிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக நியமிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், அவருடன் இணைந்த சுதந்திர கட்சியின் தரப்பினரையும் வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதே கருத்தை முன்னாள் அமைச்சர்களான தினேஸ் குணவர்தன மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரும் தெரிவித்துள்ளனர். இதேவேளை மைத்திரிபால மற்றும் மஹிந்த ராஜபக்ச இடையில் நேற்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதில் கட்சி பற்றி முக்கிய விடயங்கள் பல கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பசிலின் விளக்கமறியல் நீடிப்பு, முன்னாள் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு பிரதானியிடம் விசாரணை-

basilதிவிநெகும நிதிமோசடி குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூவரையும், எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம், இன்றுமுற்பகல் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவு பிரதானி இன்றுமுற்பகல் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்குபற்றிய அங்குனுகொலபெலஸ்ஸ கூட்டத்தில் இராணுவ கொப்ரால் ஒருவர் துப்பாக்கிடம் சென்ற சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் சென்ற இராணுவ கொப்ரால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாதுகாப்பு பிரிவு உறுப்பினர் என்றும் அவர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக அங்கு சென்றதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பப்படிவம் இன்று வெளியீடு-

universityபல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் அடங்கிய மாணவர் கையேடு இன்று வெளியிடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. இம்முறை சில புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா கூறியுள்ளார். விண்ணப்பங்களை அனுப்புவதற்கு முன்னர், அந்த கையேட்டினை மாணவர்கள் முழுமையாக வாசித்து, தெளிவுபெற வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் கையேட்டில் அனைத்து விடயங்களும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக மொஹான் டி சில்வா கூறியுள்ளார்.

விருப்பத்துக்கு மாறாக குடியேற்றப்பட மாட்டார்கள்-ஆஸி-

australiaகம்போடியாவில் குடியேற விரும்புகின்ற அகதிகள் மாத்திரமே அங்கு குடியேற்றப்படுவார்கள் என்று அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை அமைச்சர் பீற்றர் டட்ரன் இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்றிருந்த செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். அகதிகளை கம்போடியாவில் குடியேற்றம் வேலைத்திட்டத்தை 40 மில்லியன் டொலர்கள் செலவில் அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது. இதற்கு கம்போடியா இணக்கம் தெரிவித்துள்ளது. எனினும் இதற்கு விருப்பம் தெரிவிக்கின்ற அகதிகள் மாத்திரமே அனுப்பி வைக்கப்படுவர் என்று அவர் கூறியுள்ளார்.