வட மாகாணசபை உறுப்பினர் க.சிவனேசன்(பவன்) தமிழரசுக் கட்சித் தலைவர் சந்திப்பு-
வட மாகாணசபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினராக வட மாகாணசபை பேரவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் அவர்களின் முன்னிலையில் நேற்று சத்தியப் பிரமாணம் செய்துகொண்ட புளொட் அமைப்பைச் சேர்ந்த திரு கந்தையா சிவனேசன் (பவன்) அவர்கள் சத்தியப் பிரமாண நிகழ்வினைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களை மரியாதையின் நிமித்தம் சந்தித்து எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். வட மாகாணசபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் வீரவாகு கனகசுந்தரசுவாமி அவர்களின் மரணத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புளொட் அமைப்பைச் சேர்ந்த கந்தையா சிவனேசன் (பவன்) தேர்தல்கள் ஆணையாளரினால் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது சத்தியப் பிரமாண நிகழ்வு நேற்று (06.05.2015) இடம்பெற்றது. இந்நிகழ்வின்போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் க.சிவனேசன்(பவன்) அவர்கள் உரிய பதில்களை வழங்கினார். அத்துடன் பிறிதொரு கேள்விக்குப் பதிலளித்த க.சிவனேசன் அவர்கள், எங்களுடைய முல்லைத்தீவு பிரதேசம் மிகவும் பின்தங்கிய பிரதேசமாக உள்ளது. அந்தப் பகுதியில் இருக்கின்ற மக்கள் என்னை தெரிவு செய்துள்ளார்கள். அதற்கு நான் நன்றியுடையவனாக இருப்பேன். மாகாண சபைக்கூடாக என்னால் இயன்ற அனைத்து சேவைகளையும் அந்த மக்களுக்கு ஆற்றுவேன் என்று தெரிவித்தார்.