வடக்கு அபிவிருத்தி உதவியாளர்கள் ஒன்றியம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் மகஜர் கையளிப்பு-
வடக்கு மாகாண அபிவிருத்தி உதவியாளர்கள் ஒன்றியம் முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா குமாரதுங்க பண்டாரநாயக்காவிடம் தமது தொழில் நிலைமைகள் தொடர்பான கோரிக்கை அடங்கிய மகஜரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஊடாக வழங்கியுள்ளனர். அவ் மகஜரில் உள்ளடக்கப்பட்ட விடயமானது 2005ம்ஆண்டு பட்டதாரிகளை அரச சேவையில் இணைக்கும் திட்டத்தின் பிரகாரம் நிவாரணம், புனர்வாழ்வளிப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின்கீழ் அபிவிருத்தி உதவியாளராக நியமனம் செய்யப்பட்டு பல்வேறு அமைச்சு மாறுதல்களின் மூலம் தேச நிர்மாணம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு, பொருளாதார அமைச்சு என மாறுதல்கள் பெற்று தற்போது வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சின்கீழ் (கொள்கைத் திட்டமிடல் மற்றும் அமுலாக்கல் பிரிவுக்கு) உள்வாக்கப்பட்டுள்ளோம். தங்கிளின் ஆட்சிக் காலத்தில் நியமனம் செய்யப்பட்ட நாம் இன்று 10வருட அரச சேவையினை பூர்த்தி செய்யும் நிலையில் எமது பதவியில் எவ்வித மாற்றமும் முன்னேற்றங்களும் இன்றி தொடர்ந்தும் அபிவிருத்தி உதவியாளர்கள் என்ற நிலையிலே கடமையாற்றி வருகின்றோம். தற்போது 2013ம் ஆண்டு பட்டதாரிகளை அரச சேவைக்கு நியமனம் செய்யும்போது அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என்ற நிலையில் சேவைப்பிரமாணக் குறிப்புக்களுடன் நியமனம்செய்யப்பட்டு இருப்பதனால் எமது சேவை நிலையங்களில் நாம் பலதரப்பட்ட இன்னல்களை பாதிப்புக்களை சந்தித்து வருவதனால் எமது பதவிநிலை தொடர்பான காத்திரமான நடவடிக்கை எடுத்துதவுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பாராளுமன்றத் தேர்தலில் இலங்கையர் ரணில் வெற்றி-
பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலில் தற்போதைய பிரதமர் டேவிட் கெமரூன் தான் போட்டியிட்ட விட்னி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இதேவேளை பிரித்தானிய பாராளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட ஈழத் தமிழரான உமா குமரன், ஹரோ ஈஸ்ட் தொகுதியில் கொன்சர்வேட்டிவ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். வெளியிடப்பட்ட தேர்தல் முடிவின்படி, ஹரோ ஈஸ்ட் தொகுதியில் கொன்சர்வேட்டிவ் வேட்பாளர் பொப் பிளக்மன் 24,668 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இவர் மீண்டும் இந்த தொகுதியில் இருந்து தெரிவாகியுள்ளார். இரண்டாவது இடத்தைப் பிடித்த, உமா குமரனுக்கு 19,911 வாக்குகள் கிடைத்துள்ளன.இதுவரை வெளியாகியுள்ள 331முடிவுகளில், 136 இடங்களை தொழிற்கட்சியும், 119இடங்களை கொன்சர்வேட்டிவ் கட்சியும் கைப்பற்றியுள்ளன. அதேவேளை, ஹம்ப்செயர் வட கிழக்குத் தொகுதியில் கொன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட, மற்றொரு இலங்கையரான, ரணில் ஜெயவர்த்தன, சுமார் 30 ஆயிரம் வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு 35,573 வாக்குகள் கிடைத்துள்ளன. இதனிடையே, ரூசிலிப், நேர்த் வூட், மற்றும் பின்னர் தொகுதியில், தேசிய லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட சொக்கலிங்கம் யோகலிங்கம் தொல்வியடைந்தார். இந்த தொகுதியை 30,520 வாக்குகளுடன் கொன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் கைப்பற்றிய நிலையில், 166 வாக்குகளை மட்டும் பெற்று சொக்கலிங்கம் யோகலிங்கம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளார்.
சம்பூர் கடற்படை முகாம் நீக்கம்-
திருகோணமலை, மூதூர், சம்பூரில் உள்ள கடற்படையின் பயிற்சி முகாம் வேறொரு இடத்தில் மாற்றி அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் அஸ்ட்ரின் பெர்ணாண்டோ அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து தெரிவித்துள்ளார். இதன்படி இந்த முகாம் அமைந்துள்ள 237ஏக்கர் காணி, அதன் உண்மையான உரிமையாளர்களுக்கே வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும், இந்த முகாமை அகற்றுவதால், பாதுகாப்பு பிரச்சினைகள் எவையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதேவேளை விடுவிக்கப்பட்டுள்ள சம்பூர் காணியில் மீள்குடியேற்றத்தை மேற்கொள்வது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க, மத்திய நிலையம் ஒன்று திருகோணமலையில் திறக்கப்படவுள்ளது. மீள்குடியேற்ற அதிகாரசபையின் திருமலை மாவட்ட பணிப்பாளர் இந்துராணி தர்மராஜா இதனைக் கூறியுள்ளார்.
வடமராட்சியில் பொலிஸார்மீது தாக்குதல்-
யாழ். வடமராட்சி வல்லிபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்தவர்களை சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸார்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் இரு பொலிஸார் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலிஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில் இந்த சட்டவிரோத நடவடிக்கையை தடுக்க சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர். இதன்போது மணலை அகழ பயன்படுத்தும் கருவிகளால் பொலிஸார்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்துடன் இந்த சம்பவத்தில் மணல் அகழ்வதற்கு பயன்படுத்தப்பட்ட லொறியின் சாரதியும் காயமடைந்துள்ளதுடன், அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டபோது எதிர்வரும் 21ம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய இலங்கை உடன்படிக்கைகள்-
ரஷ்யாவுக்கும், இலங்கைக்கும் இடையில் பலதரப்பட்ட வர்த்தக மற்றும் பொருளாதார உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன. ரஷ்யாவின் இலங்கைக்கான தூதுவர் அலக்சாண்டர் ஏ கர்சாவா இதனைத் தெரிவித்துள்ளார். அவர் நேற்றையதினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்திருந்தார். இதன்பின்னர் இந்த கருத்தைக் அவர் கூறியுள்ளார். இரண்டு நாடுகளினதும் வர்த்தக தொடர்புகளை அதிகரித்துக் கொள்ளும் நோக்கில் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகவுள்ளதாகவும், அத்துடன் இலங்கைக்கு ரஷ்யாவுக்கும் இடையிலான பாதுகாப்பு சம்பந்தமான உடன்படிக்கைகளும் கைச்சாத்தாகவிருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவிலிருந்து இராணுவத்தினர் நீக்கம்-
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் இணைக்கப்பட்டிருந்த இராணுவத்தினர் அப்பிரிவிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 30ஆம் திகதியிலிருந்த இவர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார். இராணுவ தலைமையகத்தின் ஆலோசனைக்கு அமையவே இராணுவத்தினர் நீக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு நீக்கப்பட்டவர்கள், ஏற்கெனவே சேவையாற்றிய பிரிவுகளில் இணைக்கப்பட்டுள்ளனர்;. ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் 1,200 இராணுவத்தினர் இணைக்கப்பட்டிருந்தனர். இப்பிரிவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஏற்படுத்தப்பட்டது. மைத்திரிபால சிறிசேன, ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதியாக தெரிவானபின் அவரின் பாதுகாப்புக்காக இருந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்தார். எனினும், முன்னாள் ஜனாதிபதி ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவுக்கு 3,000ற்கும் மேற்பட்டவர்களை இணைந்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ஸ்ரீஜயவர்தனபுர கோட்டை மேயர் கைது-
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மேயர் ஜனக்க ரணவக்கவை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோட்டை நகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சுகத் அப்புஹாமி மீது தாக்குதல் நடத்தினார் என்ற குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர். எதிர்க்கட்சி தலைவர்மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நகரசபைத் தலைவர், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் சுகத் அப்புஹாமி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.
பல்கலைக்கழக அனுமதிக்கு மே.29வரை மட்டுமே விண்ணப்பிக்கலாம்-
2014ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையை அடிப்படையாகக் கொண்டு 2014, 2015ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான கையேட்டினை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழக அனுமதிக்கான நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் அடங்கிய இக்கையேட்டினை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிலும் நாடளாவிய ரீதியில் விநியோக முகவர்களின் புத்தக நிலையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம். முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, உதவிச் செயலாளர் (பல்கலைக்கழக அனுமதிகள்), பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, இல.20, வாட் பிளேஸ், கொழும்பு-07 என்ற முகவரியிட்டு மே மாதம் 29ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பதிவுத்தபாலில் மட்டும் அனுப்பி வைக்கப்படவேண்டும் என பல்கலைக்கழக மானிங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஐ.நா அமர்வுக்கு முன் உள்நாட்டு பொறிமுறை:மங்கள-
இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்னர் உள்நாட்டு பொறிமுறையொன்று உருவாக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இந்த நாட்டு அரசியலில் தற்போது கட்சிகளுக்கிடையிலான போட்டி காணப்படவில்லை. மாறாக நல்லாட்சி மற்றும் கொள்ளை ஆட்சிகளுக்கு இடையிலான போட்டியே நிலவுகின்றது என கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது கூறிய அமைச்சர் மங்கள, புரட்சிக்கு எதிரான எதிர் புரட்சியொன்று தற்போது நாட்டில் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். ‘அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்தை ஒரு வாரத்துக்குள் நிறைவேற்றிக்கொண்டு தற்போதுள்ள தேர்தல் முறைமையின் கீழ் பொதுச் தேர்தலுக்குச் செல்ல வேண்டும்’ அத்துடன், ‘அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சி தனது முழுமையான ஆதரவை வழங்கும்’ என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேயரை பதவி விலக்கும் அறிவித்தல் செல்லுபடியானது-
காலி மாநகர மேயர் மெத்சிறி சில்வாவை பதவி விலக்கி தென் மாகாண முதலமைச்சர் சான் விஜயலால் டி சில்வா விடுத்த வர்த்தமானி அறிவித்தல் அதிகாரமுடையது என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. தென் மாகாண முதலமைச்சரின் வர்த்தமானி அறித்தலை தற்காலிகமாக தடை செய்து தென் மாகாண மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்கு எதிராக தென் மாகாண முதலமைச்சர் செய்த மேன்முறையீடு இன்று (விசாரணைக்கு வந்தபோதே மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்கண்ட அறிவிப்பை விடுத்துள்ளது. மாகாண சபையில் தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி காலி மாநகர மேயர் மெத்சிறி சில்வா மீதான மோசடி குற்றச்சாட்டுக்களை ஆதாரமாகக் கொண்டு அவரை பதவி விலக்கியதாக சான் விஜயலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.