விழிநீர் அஞ்சலிகள் – அமரர் முத்துலிங்கம் பிறேமாவதி அவர்கள்

premawathyயாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், பெரியமணல், காரைநகரை வதிவிடமாகவும் கொண்டவரும், எமது சிரேஸ்ட உறுப்பினர் குமரேசன் மோகனதாசன் (காந்தன் – சுவிஸ்) அவர்களின் மூத்த சகோதரியுமான முத்துலிங்கம் பிறேமாவதி அவர்கள் நேற்று (08-05-2015) காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய (புளொட்) நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு, எமது அஞ்சலியினை சமர்ப்பிக்கின்றோம்.

அன்னாரின் பூதவுடல் அவரது காரைநகர் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிக் கிரியைகள் பற்றிய தகவல்களுக்கு கீழ்வரும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும். 

0041 787443082 (சுவிஸ்), 0094 766262580 (இலங்கை) 

தேர்தல் திருத்தச் சட்டத்துக்கு கால அவகாசம் கோரல்-

manoதேர்தல் திருத்தச் சட்டத்தை அவசர சட்டமூலமாக நாடாளுமன்றத்தில் முன்வைக்க வேண்டிய அவசியம் இல்லை என சிறு மற்றும் சிறுபான்மை கட்சிகள் தெரிவித்துள்ளன. நேற்று இந்த கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பு கொழும்பில் நடைபெற்றிருந்தது. இதன்போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உத்தேச தேர்தல் திருத்தச் சட்டத்தினால் சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எவ்வாறான தேர்தல் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டாலும், அது குறித்து ஆராய்வதற்கு குறைந்தபட்சம் ஒரு வருட காலமேனும் அவகாசம் வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சட்டமூலம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் கூறியுள்ளார். இக் கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, ஜே.வி.பி. உள்ளிட்ட பல கட்சிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காணிகளை விடுவிப்பது குறித்து சந்திரிக்காவுடன் பேச்சு-

tna (4)யாழ்ப்பாணத்தில் இன்னும் விடுவிக்கப்படாதுள்ள காணிகளை விடுவித்துக் கொள்வதற்காக மீள்குடியேற்றத்துறை அமைச்சுடன் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை சந்திக்கவுள்ளது. வலிகாமம் வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் நேற்றைதினம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான கூட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது. இதன்போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றப்படவுள்ள மக்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலான கூட்டம் நேற்று நடைபெற்றிருந்தது. இக் கூட்டத்திலேயே பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது விடுவிக்கப்பட்ட காணிகளில் உள்ள இராணுவ தடைகளை நீக்கவும், இன்னும் விடுவிக்கப்படாதுள்ள பிரதேசங்களை விடுவித்துக் கொள்வது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டதாக மாவை சேனாதிராஜா மேலும் கூறியுள்ளார்.

முன்னாள் புலி உறுப்பினர் கைது-

arrestபுலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரான நாகமணி ஜெகதீஸ்வரன் (வயது 34) என்பவரை இன்று கைது செய்துள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2003ஆம் ஆண்டு ரெலோ இயக்கத்தைச் சேர்ந்த இரு அங்கத்தவர்களை மட்டக்களப்பு – ஆரையம்பதியில் வைத்து துப்பாக்கியால் சுட்டு கைக்குண்டுகளையும் வீசி ஆட்கொலை புரிந்தார், எட்டுப்பேரை காயப்படுத்தினார் என்ற முறைப்பாட்டின் பிரகாரமே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். மகிழடித்தீவு கொக்கட்டிச்சோலையில் திருமணம் முடித்த நிலையில் மத்திய கிழக்கு நாட்டுக்கு சென்றுவிட்டு திரும்பிவந்து கொக்கட்டிச்சோலையில் தலைமறைவாகி வசித்து வந்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை, நீதிமன்றில் முன்னிறுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

13ம் திருத்தச் சட்டத்தை அமுலாக்குமாறு பா.ஜ.க வலியுறுத்தல்-

bjp13ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக அதிகாரப்பகிர்வை வழங்கி, தமிழ் பிரதேசங்களில் முழுமையான ஜனநாயகத்தை தோற்றுவிக்குமாறு பாரதீய ஜனதா கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்து திரும்பிய இல.கணேசன் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் குழு இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது. தமிழ் மக்களுக்கு 13ம் திருத்தச் சட்டத்தின் ஊடாகவே சம உரிமைகளை வழங்க முடியும் என்று, இல. கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தாங்கள் சந்தித்த அமைச்சர்களான டி.எம்.சுவாமிநாதன் உள்ளிட்ட தரப்பினரை வலியுறுத்தியதாகவும் அவர் தமது அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்டாரில் இலங்கையர் குடியிருப்பில் தீப்பரவல்-

qatarகட்டார் நாட்டில் இலங்கையர்கள் தங்கியிருந்த குடியிருப்புப் பகுதியில் தீப் பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று காலை அந்த நாட்டிலுள்ள துப்புரவு தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் இலங்கையர்கள் தங்கியிருந்த குடியிருப்பிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. எது எவ்வாறிருப்பினும் தீயினால் இலங்கையர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. எனினும் தீப் பரவல் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நிர்க்கதியாகியுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் கூறியுள்ளது. இவர்கள் தற்போது முகாம் ஒன்றில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் குறித்து ஆராய கட்டாருக்கான இலங்கைத் தூதரக அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது

அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் கலைக்கப்படும்-

john amaratungaஅனைத்து உள்ளுராட்சி மன்றங்களையும் இம் மாதம் 15ம் திகதியளவில் கலைப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ஜோன் அமரதூங்க தெரிவித்துள்ளார். இவற்றின் கால எல்லை மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், நாட்டில் புதிதாக ஏற்பட்ட அரசியல் நிலைமை காரணமாக அவற்றின் கால எல்லை நீடிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வத்தளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் ஜோன் அமரதுங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் உள்ளுராட்சி மன்றங்கள் கலைக்கப்படும் அதேவேளை, இங்கு இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்து ஆராய்வதற்கு விஷேட குழுவொன்றும் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் ஜோன் அமரதூங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாடு செல்லவிருந்த சகோதரர்கள் விபத்தில் படுகாயம்-

accidentவெளிநாட்டில் பணிபுரிவதற்காக மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பஸ்ஸில் வந்த இரு சகோதரர்கள் கொழும்பு சுகந்ததாஸ விளையாட்டு அரங்குக்கு அருக்கில் வைத்து இன்று அதிகாலை 4 மணியளவில் விபத்துக்குள்ளானத்தில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர். மட்டக்களப்பைச் சேர்ந்த 35 வயதுடைய சிறிதரன் மற்றும் 24 வயதுடைய டிலக்சன் ஆகியோர் வெளிநாட்டில் பணிபுரிவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் செல்வதற்காக மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு பஸ்ஸில் வந்துள்ளனர். கொழும்பு சுதந்ததாஸ விளையாட்டுக்கு அரங்குக்கு அருகில் பஸ்ஸில் இருந்து இறங்கி பஸ்ஸின் பின்புறமாக இருந்த தமது பொதிகளை எடுத்துகொண்டிருந்த போது வேகமாக வந்த டிப்பர் ரக வாகனமொன்று குறித்த நபர்கள் மீது மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் னுமதிக்கப்பட்டுள்ளனர். டிப்பர் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.